tamilnadu

img

உழைப்பாளி வர்க்கத்தின் அழகியல்

சிஐடியு வின் 16 ஆவது அகில இந்திய மாநாடு நடைபெறும் தோழர் முகமது அமீன் நகர்( ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ திடல்) நுழைந்ததும் ஐம்பதடி உயர செஞ்சுவர் காண்போர் அனைவரையும் வசீகரிக்கிறது.அதன் மேல் பத்தடி உயரத்தில் கிழக்கு விடியலை அர்த்தப்படுத்தும் செஞ்சூரியப் பின்னணியில் தஞ்சாவூர் பெரியகோவில் கோபுரமும் காலத்தல் முற்பட்ட இரண்டாவது நரசிம்மவர்மபல்லவரின் மாமல்லபுர கடற்கரை கோவில் கோபுரமும் , உழைப்பாளி வர்க்கம்  தன்வயப்படுத்திக் கொண்ட பண்பாட்டுத் தொடர்ச்சியின் அடையாளமாக எழுந்து நிற்கிறது. வரவேற்புக்குழுத் தலைவர் அ.சவுந்தராசன் மேற்பார்வையில் ஓவியர் தி.ராசேந்திர குமாரின் கலைவடிவை கலைஇயக்குநர் கதிர், எம்.உமாபதி ஆகியோர் எழுப்பி ரசிக்க வைத்துள்ளனர். அதில் பதிக்கப்பட்டுள்ள  16 தொழிற்சங்கத் தலைவர்களின் படங்களில், தமிழகத்தில் தொழிற்சங்கத்தை கட்டிய சக்கரைச்செட்டியார், திரு.வி.க, வ.உ.சி படங்கள் வரலாற்றை சுவீகரித்துக் கொண்டதின் அடையாளமாக காட்சி தருகின்றன. மாநாட்டு அரங்க நுழைவாயில் முன் நிறுவப்பட்டுள்ள பன்னிரெண்டு அடி உயரத்திலான தியாகத்தூண் அடக்குமுறைகளை எதிர்த்தப் போராட்டத்தை, தியாகச்சின்னங்களை நுணுக்கமாக கருங்கற்சிற்பமோ என வியக்க வைக்கும் முறையில் சிற்பி பிரபாகரன் ஒரே தர்மாகோலில் செதுக்கி இருக்கின்றார். ‘Voice of artists’ என்கிற ‘ஓவியர்களின் குரல்’, ஓவியக் காட்சிக் கூடம் பலரையும் கவர்ந்து நிற்கிறது. இந்திய அளவில் புகழ்பெற்ற ஓவியர்கள் விஸ்வம், மருது, வீர.சந்தனம், புகழ், வில்லேஜ் மூக்கையா,ஜே.கே, கார்த்திகேயன், அல்போன்ஸ், திவ்யா, கே.பிரதீப், எம்.ஏ.சரவணன், எரிக் யூஜின், கே.ஸ்ரீகுமரன் ஆகியோர் இந்த மாநாட்டிற்காக நடத்தப்பட்ட முகாமில் பங்கேற்று தத்தமது கலையோவியங்களை உழைப்பாளி வர்க்கத்திற்காக கையளித்துள்ளனர்.  வீர.சந்தனம், மருது, புகழ் ஆகியோர் 2003 ல் சென்னையில் நடந்த சிஐடியு அகில இந்திய மாநாட்டிற்காக வரைந்து கையளித்த படைப்புகள் இடம் பெற்று பிரதிநிதிகளின் கவனத்தை கவர்ந்து வருகின்றன. தமிழ் ஓவிய மரபு, ஐரோப்பிய ஓவிய மரபு, லத்தீன் அமெரிக்க ஓவிய மரபுகளை உள்வாங்கி நிகழ்கால அரசியல், வாழ்வியல், பொருளியல், சூழலியல், பெண்ணியல், சமயவியல் மீதான தமது ஓவியக்கோடுகளை அக்ரலிக் வண்ணச்சாந்தால் முன்னுக்கு வந்துள்ள எதார்த்தபாணி, குறியீட்டுப்பாணி சார்ந்து வரையப்பட்ட பதினான்கு ஓவியங்கள் காட்சிக் கூடத்தில் கருத்தை கவர்ந்து வருகின்றன. பலநூறு பார்வையாளர்கள் பதிவேட்டில்  அர்த்தப்பாடு கொண்ட, வண்ணங்களால் ஆன எண்ணங்கள், பின்புலத்தில் உள்ள கருத்துகளின் பெருங்கொடை, மதிப்புமிக்க கலை, குறிப்பிடத்தக்க கலைமுயற்சி் என்றும் தங்கள் எண்ணங்களை பல்வேறு மொழிகளில் எழுதி வைத்துள்ளனர். ஓவிய நிகழ்வை இரா.தெ.முத்து ஒருங்கிணைத்து வருகின்றார். மொத்த கலைவெளிப்பாடுகளில் சிஐடியு மாநிலத்தலைவர் அ.சவுந்தராசன், மாநிலப் பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் ஆகியோர் கவனம் பதித்து கலை இலக்கிய வெளிப்பாடுகளில் காட்டிய கனிவு உழைப்பாளி வர்க்கம் கொண்ட, கொள்ள வேண்டிய கலை இலக்கிய அக்கறையை செய்தியாக சொல்கிறது. - இரா.தெ.முத்து

;