tamilnadu

img

தோழர் இந்திரஜித் குப்தா பிறந்த நூற்றாண்டு

இந்திரஜித் குப்தா 1919 மார்ச் 18ல் கல்கத்தாவில் பிறந்தார். அவரது துடிப்பான செயல்பாடுகளும் பல முக்கிய நிகழ்வுகளும் கொண்ட பெருவாழ்வு இந்திய அரசியலில் குறிப்பாக நாடாளுமன்ற ஜனநாயகத்தில் ஆழமான தாக்கத்தைப் பதித்துச் சென்றுஃள்ள ஒன்றாகும். கல்கத்தாவின் (Brahmo family) பிராம குடும்பத்தைச் சார்ந்தவர். அந்த வகுப்பைச் சார்ந்த

வர்களே அப்போது அரசின் உயர்ந்த பதவிகளை வகித்தார்கள் (பிராம பிரிவு மரபார்ந்த வங்காளி உயர் சாதியினர். உபநிஷத்துகளின் போதனைகளால் வழி நடத்தப்

பட்டவர்கள். கிழக்கிந்திய காலனிய நிர்வாக அமைப்பில் வரலாற்று ரீதியாக அங்கம் வகித்தவர்கள். பெரும்பாலும் குறிப்பிட்ட சில மேன்மையான பள்ளிகள், கல்லூரிகளில் படித்தவர்கள். ஆங்கில நடைமுறையில் வாழ்ந்த பெரும் பணக்காரர்கள், பிரிட்டிஷ் பேரரசின் இளைய கூட்டாளிகள் எனலாம். அவர்களே அன்றைய பெங்கால் ராஜ

தானியின் கவர்னர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், கமிஷனர், கலெக்டர், மேஜிஸ்ரேட்டுகள், கல்கத்தா மருத்துவக் கல்லூரியின் முதல்வர் மற்றும் பேராசிரியர்கள், பெரும் வியாபாரிகள், சுதந்திரப் போராட்ட அரசியலைப் பொருத்தவரை மிதவாதிகள், மேதகு மகாராணியின் கீழ் செயல்படும் அமைப்பை விரும்புவோர் என்றெல்லாம் வலையதளத் தேடலில் கூறப்பட்டுள்ளன.)

இங்கிலாந்தில் படிப்பு

குப்தாவின் தந்தை இந்திய அக்கௌண்டன்ட் ஜெனரல். மூத்த சகோதரர் மேற்கு வங்க அரசின் தலைமைச் செயலாளர். இந்திரஜித் குப்தாவின் பள்ளிப் படிப்புசிம்லாவில். அப்போது அவரது தந்தை அங்கேதான் பணிசெய்தார். 1937 தில்லியில் செயின்ட் ஸ்டீஃபன் கல்லூரியில்பட்டம் பெற்றார். அவருடைய பெற்றோர் உயர்படிப்பிற்காக அவரை இங்கிலாந்து அனுப்பினர். கேம்பிரிட்ஜ் கிங்ஸ் கல்லூரியில் படித்தார். அதுவரையில் இந்திரஜித்திற்கு அரசியலில் ஆர்வம் ஏதும் இல்லை. அவ்வளவுஏன்? துடிப்பான மாணவர் அரசியல் இயக்கச் செயல்பாடுகளில் கூட ஈடுபட்டதில்லை. இதனால் அவரின் எதிர்காலவாழ்க்கை குடும்ப பாரம்பரியத்தின் வழியில் அவரது பெருமைமிகு குடும்ப உறவினர்களின் காலடித் தடத்தை ஒட்டியே அமையும் எனப் பெரிதும் நம்பப்பட்டது. ஆனால்நிகழ்வுகள் வித்தியாசமாக வேறு பாதையில் திரும்பியது.

தோழர்களைச் சந்தித்தார் 

இங்கிலாந்தில் பெரும் ஆளுமைகளோடு அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. வரலாற்றில் இப்போது அந்தப் பெயர்களே ஆச்சரியத்தோடு உச்சரிக்கப்படுபவை. அவர்களோடு நம் இந்திரஜித் விவாதித்திருக்கிறார். வாழ்ந்திருக்கிறார். RPD எனப்படும் ரஜனி பாமி தத் போன்ற எண்ணற்றோர் இந்திரஜித்தின் பாதையை மாற்றியிருக்கின்றனர். அந்தக் காலம், பாசிசம் தலை கொழுத்த நேரம், அதற்கேற்ப பாசிச எதிர் நடவடிக்கைகளும் உறுதியாகவீறு கொண்டு எழுந்த பெரும் பொழுது. ஸ்பெயினின் குடியரசில் நடைபெற்ற உள்நாட்டுப் போர் இளைஞர்களை ஆழமாக பாதித்தது. அந்தப் போருக்கு ஆதரவாக தார்மீகப் போராட்டங்கள், இன்டர்நேஷனல் பிரிகேடு முதலிய வடிவங்களில் பெருகின.

இந்திரஜித் குப்தாவின் ஒன்றுவிட்ட சகோதரி ரேணு சக்ரவர்த்தி, அவரை இந்தியன் மஜ்லிஸ், ஐரோப்பியாவில் படிக்கும் இந்திய மாணவர் சொஸைட்டி கூட்ட

மைப்பு முதலிய மார்க்சியம் கற்கும் மாணவக் குழுக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அந்தக் குழுக்கள் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியோடு (CPGB) தொடர்பில் இருந்தனர். அவைகளில் இருந்த ஆளுமைகள் தான் எவ்வளவு பேர்? புகழ்மிக்க நிகில் சக்ரவர்த்தி, பூபேஷ் குப்தா,ரேணு சக்ரவர்த்தி, மோகன் குமாரமங்கலம், என்.கே.கிருஷ்ணன், ஜோதிபாசு, ரொமேஷ் சந்திரா முதலானோர். பொது உடைமைத் தத்துவம், கம்யூனிச பிரசுரங்கள், சஞ்சிகைகள் முதலியவற்றில் இந்திரஜித் குப்தாவிற்கு பெரும் ஆர்வமும், இயக்க நடவடிக்கைகளில் ஈடுபாடும் உண்டாயிற்று.

1939லேயே தனது குடும்பத்தினருக்குத் தன்னுடைய பாதை மாற்றத்தைத் தெரிவித்ததோடு மட்டுமின்றி, இனி  அரசு வேலைக்கோ, அன்றி, குடிமைப் பணி தேர்வுகளையோ எழுதப் போவதில்லை என்ற தனது கருத்தையும் பிரகடனப்படுத்தி விட்டார் இந்திரஜித். இதனால் எல்லாம், அவர் தனது படிப்பைக் கைவிட்டாரோ எனில் இல்லைஎன்பது மட்டுமல்ல, அவர் உறுதியாகக் கூறியிருக்கிறார்: “ஒருபோதும் ஒரு பொதுவுடைமை மாணவன் தனது கல்வியைக் கைவிடவே கூடாது.” இந்திரஜித் குப்தா படிப்பில் தனது சிறந்த மேதைமையை நிலைநாட்டியிருக்கிறார். குறிப்பாக பொருளாதாரம் மற்றும் வரலாற்றில் சிறந்து விளங்கினார். 1940ல் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திலிருந்து அவர் (Tripos) ட்டிரிபோஸ் பட்டம் பெற்றார்.

கம்யூனிஸ்ட்டாக இந்தியா திரும்பல் 

1939ல் இரண்டாவது உலக யுத்தம் வெடித்தது. இந்திரஜித் குப்தா லிவர்பூலில் இருந்து புறப்பட்டு, சூயஸ் கால்வாய் மூடப்பட்டதால் ஐந்து வார கப்பல் பயணத்திற்குப் பிறகு பம்பாய் வந்தார். திரும்பி வந்தவுடன், தலைமறைவு இயக்கமாக இயங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிடம் தொடர்பு கொண்டு, முழு நேர கட்சிப்பணிக்குத் தன்னை ஒப்புவித்தார். சில காலம் காத்திருப்பில் வைக்கப்பட்டபின் அவர் லக்னோவிலிருந்து தலைமறைவாகச் செயல்பட அறிவுறுத்தப்பட்டார். அவருடைய பணி, தனக்கான பதுங்கிடத்தை ஏற்பாடுசெய்துகொண்டு, செய்தி சுமந்து செல்லும் ‘தபால்கார’ராக, கூரியர் மேனாக வண்டி வண்டியாய் அறிக்கைகளையும் ஆவணங்களையும் செய்திகளையும் உரிய இடத்தில் கொண்டு சேர்ப்பது. அந்தச் சாகசப் பணியில் இந்திரஜித் சிலிர்த்துப் போனார். பின்னர் அவர் கட்சியின் தலைமையிடமான பம்பாய்க்கு கட்சியின் பொதுச் செயலாளர் பி.சி. ஜோஷி அவர்களின் நேரடிப் பார்வையின் கீழ் மாற்றப்பட்டார். அங்கு இந்திரஜித் மத்திய ‘தபால்காரர்’. அங்குக் கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் ஜோஷி, சோமநாத் லாகிரி, பவானி சென் முதலானோரின் இரகசிய இயக்க நடவடிக்கைகளில் அவர் உடன் பங்கு பெற்றார்.

தொழிற்சங்கத் தலைவரானார்

1942ல் இந்திரஜித் குப்தா வங்கத்திற்கு அங்குள்ள சணல் ஆலைத் தொழிற் சங்கத்தில் பணியாற்றுவதற்காக மாற்றப்பட்டார். பின்னர் துறைமுகத் தொழிலாளர்களோடும், இரயில்வே தொழிலாளர்களோடும் பணியாற்றினார். அகில இந்திய துறைமுக தொழிற்சங்க கூட்டமைப்பின் (All India Port and Dock Workers Federation) பொதுச் செயலாளராகவும், அதன் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரலாற்றின் கடினமான, இடர்பாடுகள் மிகுந்த காலமான 1948-49 களில் இந்திரஜித் சிறையில் அடைக்கப்பட்டார்.புகழ்மிக்க முக்கியமான தொழிற்சங்கத் தலைவராக ஏற்றம் பெற்றார். 1980ல் அகில இந்திய தொழிற்சங்கக் காங்கிரஸ், ஏஐடியுசி அமைப்பின் அகில இந்தியப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உலகத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பிலும் (WFTU) ஆர்வத்துடன் செயலாற்றினார். 1998ல் தலைவராகவே தேர்ந்தெடுக்கப்பட்டார். மிகுந்த உழைப்பும் ஆழமான ஆய்வும் மேற்கொண்டு அவர் எழுதிய புகழ்மிக்க புத்தகமே ‘சணல் ஆலைத் தொழிலில் முதலீடும் தொழிலாளர் உழைப்பும்’ இன்றும் அந்த ஆலைத் துறைப் பிரிவில் அந்நூலே சட்டப் புத்தகம்.

ஒப்பில்லாத உயர்தனி நாடாளுமன்றவாதி 

1960ல் நிகழ்ந்த இடைத் தேர்தலில் தென் மேற்குகல்கத்தா தொகுதியின் நாடாளுமன்றப் பிரதிநிதியாக இந்திரஜித் குப்தா மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்

பட்டார். அதனையும் சேர்த்து 11 முறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இடையே 1977- 80 ஆண்டுகளின் சில காலம் நீங்கலாக, மொத்தம் 37 ஆண்டுகள் சேவை புரிந்துள்ளார். அலிப்பூர், பசீர்ஹட் தொகுதிகளைப் பிரதி நிதித்துவப்படுத்தியும் ஏனைய காலம் முழுவதும் மிட்னாபூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். பத்தாவது மக்களவை தொடங்கி 13வது மக்களவைக் கூடும் வரை அவையின் மூத்த  உறுப்பினர் என்ற வகையில் இடைக்காலச் சபாநாயகராக அனைவருக்கும் பதவிப் பிரமாணம் நடத்தி வைத்துள்ளார். இந்திரஜித் குப்தா அவையின் மூத்த உறுப்பினர் மட்டுமல்ல, மிக நீண்ட காலம் நாடாளுமன்ற உறுப்பினராகச் சேவை புரிந்தவருமாவார்.

1992ல் மிகச் சிறந்த நாடாளுமன்றவாதி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். தனக்கெனவோர் தனித்த முத்திரையைப் பதித்து நாடாளுமன்ற வரலாற்றில் போற்றுதலுக்குரிய இடத்தைப் பெற்றார்;“நாடாளுமன்றத் தந்தை” எனவும் புகழப்படுகிறார்.

முன்மாதிரி கம்யூனிஸ்ட் எம்.பி., 

அவரது நாடாளுமன்ற உரைகள் மிக உன்னிப்பாக அனைவராலும் கவனமாகக் கேட்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் உள்ளே அவரது செயல்பாடுகள் ஒவ்வொன்றும் நாடாளுமன்றச் சட்டம், விதிமுறைகள், மரபுகளை மிகக் கறாராகப் பின்பற்றி அமைந்தன. அவர் ஒரு முன்மாதிரி கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், அவை நடவடிக்கைகளில் எப்படி முன் தயாரிப்புகளுடன் வர வேண்டும் என்பதைத் தன் வார்த்தைகளால் அன்றி தனது செயல்களாலும் மற்றவர்களுக்கு ஒப்பற்ற

முன்மாதிரியாகத் திகழ்ந்தார்.நாடாளுமன்ற வட்டாரத்தில் கட்சிப் பாகுபாடுகள் தாண்டி அனைவராலும் மிகவும் நேசிக்கப்பட்டவராக, புகழ் ஓங்கியவராக, பெரிதும் மதிப்பும் மரியாதையும் மிக்கவராக விளங்கினார். நாடாளுமன்ற வளாகத்தில் பணி புரியும் கீழ்நிலை பாதுகாவலர் தொடங்கி நாடாளுமன்ற அலுவலக எழுத்தர்கள் பணியாளர்கள் வரை அனைவரும் அன்போடும் பாசத்தோடும் நினைவு கூரப்படுபவராக அனைவரோடும் தனிப்பட்ட மனித உறவைப் பேணியவர் இந்திரஜித் குப்தா.

நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர்

1995-96ல் இந்திரஜித் குப்தா பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தலைவராகச் செயல்பட்டார். துணைவிதிகள் சட்டமியற்றுதல், மேல்முறையீடு, நூலகக் குழு முதலான பல்வேறு குழுக்களின் உறுப்பினராகவும் இருந்தார். நாடாளுமன்றத்தில், உழைக்கும் பாட்டாளி வர்க்கத்தின் தொழிலாளர் பெருந்திரள் மக்களின் உண்மையான பிரதிநிதியாக இந்திரஜித் குப்தா இருந்தார். அவர் நாடாளுமன்றத்தில் நுழைந்ததே நன்கறியப்பட்ட தொழிற்சங்கத் தலைவராகத்தானே! தொழிலாளர்களின் மத்தியில் உழைத்தவர், செயல்பட்டவர் என்ற வகையில் தொழிலாளர் வர்க்கக்குரலையும் அவர்களின் ஏனைய கோரிக்கைகளையும் வலிமையாக மக்களவையில் முன்வைத்தார். சமூக, தேசிய பிரச்சனைகளும் அவரது குரலில் நன்கு எதிரொலித்தன.

அப்போது விவாதங்களில் அவர் பேசாத விஷயங்களா? இராணுவம் மற்றும் நாட்டின் பாதுகாப்பு; காவல் துறையினரின் செயல்பாடுகள் மட்டுமின்றி அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்; தீவிரவாதத்திற்கு எதிராக,பாதுகாப்பிற்கு ஆதரவாக; சாதி, மத, இன வேறுபாடுகளை முன்னிறுத்தி நடக்கும் பிளவுவாதங்களுக்கு எதிராக, மதச்சார்பின்மை கொள்கைக்கு ஆதரவாக, மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி, தேசிய ஒருமைப்பாட்டை உயர்த்திப் பிடித்து நிற்றல்; பொருளாதாரப் பிரச்சனைகள்; அதன் அரசியல் தாக்கம்; வெளியுறவுக் கொள்கை மற்றும் உலகளாவிய பிரச்சனைகள்; தொழிலாளர்கள், தொழிற்சாலைகள் பற்றிய பிரச்சனைகள்; பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அவர்களின் நிலை குறித்த கேள்விகள்; அரசியல் அமைப்புச் சட்டம் மீது தொடுக்கப்பட்ட வினாக்கள் விளக்கங்கள்; தேர்தல் சீர்திருத்தம், விகிதாச்சார பிரதிநிதித்துவத் தேர்தல் முறை; இப்படி எத்தனை... எத்தனை... தலைப்புகள். அதுமட்டுமா? மத்திய உள்துறை அமைச்சராக எத்தனைஉரைகள் என இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

அவரது உரைகள் மிகுந்த உழைப்புடன் நேர்த்தியாக முன் தயாரிப்பு செய்யப்பட்டவை; அவை அனைவராலும் சிதறா கவனத்துடன் கேட்கப்பட்டன. ஆழமான ஆய்வின் வெளிப்பாடே அவர் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகள். மார்க்சும் நூலகமும் போலநாடாளுமன்ற நூலகத்தில் அவர் மிகவும் அறியப்பட்டவராக இருந்தார். அவர் உண்மையைப் பேசினார். புள்ளிவிபரம், தரவுகளுடன் பேசினார். உதாரணத்திற்கு, பாதுகாப்புத் துறை பற்றிய கேள்விகள் கேட்கும் போது ஏதோ அந்தத்துறையே அவர் பொறுப்பில் இருப்பதாகப்படும். அந்தத் துறையின் மூலை முடுக்கு, சிறிதும்பெரிதுமான நுட்பங்கள் அத்தனையும் அவருக்கு அத்துப்படி என்னும் வகையில் அவரது கேள்விகள் இருக்கும். புரூலியா பகுதியில் ஆயுதங்கள் வீசப்பட்ட சம்பவத்தில் அரசின் தோல்வியை அடுத்து, பாதுகாப்புத்துறை நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார். அரசியல் உயர் அளவீடுகளைப் போற்றிக் காப்பதில், அரசியல் மாண்புகளை மதிப்பதில் கறாரானவராக அவர் இருந்தார்.

உள்துறை அமைச்சராக

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அவ்வளவுஏன், இடதுசாரிகளின் சார்பில்கூட மத்தியில் அமைச்சர்களாகப் பணியாற்றியவர் இருவர் மட்டுமே. ஒருவர் இந்திரஜித் குப்தா; மற்றொருவர் சதுரானன் மிஸ்ரா. 1998ல் தேவகௌடா, ஐ.கே.குஜ்ரால் தலைமையில் அமைந்த ஐக்கிய முன்னணி அரசியல் மத்திய உள்துறை அமைச்சராகப் பணியாற்றினார் இந்திரஜித் குப்தா. மிகப் புதுமையான நவீன அனுபவம். அது, சரித்திரப் பூர்வமான சம்பவம். இந்திய அரசியலில் ஏற்படுத்திய தாக்கம் குறித்த ஆழமான பரிசீலனை, புரிதல் இனிதான் செய்யப்பட வேண்டும். மத்திய அரசின் அங்கமாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி செயல்பட்டது அந்த முறை மட்டுமே.மத்திய உள்துறை அமைச்சராக இந்திரஜித் குப்தாஆற்றிய சாதனைப் பணிகள் பலப்பல. இன்றும் அவை கட்சி வேறுபாடுகள் கடந்து அனைவராலும் நினைவு கூரப்படுகின்றன. போலீஸ் மற்றும் நிர்வாகப் பிரிவுகளில் சீர்திருத்தம் கொண்டு வந்தார். அரசியலமைப்புச் சட்டத்தில் மாநிலங்களுக்கிடையேயான கவுன்சில் அமைப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. உறவை மேம்படுத்தும் வகையில் அந்தக் கவுன்சிலைப் புத்துயிர்ப்பு செய்து மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டு வந்தது அவர் தேசத்திற்கு ஆற்றிய பெரும் பங்களிப்பு. வடகிழக்கு மாநிலங்களின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் அவர் பல திட்டங்களை வழங்கி நடவடிக்கை எடுத்தார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியக்குழுவில் 40 சதவீத ஊதிய உயர்வு என்ற ஒப்பற்ற தீர்வு ஏற்படஅவரது தலையீடே காரணம் என்பதை அந்த ஊழியர்கள் இப்போதும் நினைவு கூர்கிறார்கள். அரசியல் கட்சிகளுக்கு அரசே நிதி உதவி வழங்குவது பற்றிய ஆலோசனை வழங்கிட அமைக்கப்பட்ட 8 உறுப்பினர் தேர்தல் சீர்திருத்தக் குழுவின் தலைவராகச் செயல்பட்டார். அப்போது அவர் வழங்கிய பல ஆலோசனைகளில் ஒன்று, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அரசே நிதியுதவியைப் பணமாக நேரடியாக அளிக்காமல்,(போஸ்டர் - கட்சி பிரசுரங்கள் போன்ற) பொருள் வகை இனமாகத் தரலாம் என்பதும் ஒன்று. குணாம்சரீதியில் மிகப் புதுமையான ஆரோக்கியமான யோசனை இது எனலாம்.மத்திய உள்துறை அமைச்சராக இந்திரஜித் குப்தா எடுத்த, நாம் மறவாது நினைவில் கொள்ளத்தக்க முன்முயற்சிகள் இன்னும் பல உண்டு. கம்யூனிஸ்ட்டுகள் எப்படிச் செயல்படுவார்கள் என்பதற்கு அவர் ஓர் முன்னுதாரணம். கம்யூனிஸ்ட்டுகள் நேர்மையாக, உண்மையாக,ஆக்கப்பூர்வமான பங்களிப்பு செய்து ஜனநாயக அமைப்புகளை எப்படி வலிமை பெறச் செய்வார்கள். அந்த அமைப்புகளை மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதில் செயல்பட வைப்பார்கள் என்பதற்கு அவரே உதாரணம். (போராட்டங்களின் மூலம் மட்டுமின்றி) அரசில் அங்கம்வகித்து, நாடாளுமன்ற முறைமைகளில் ஆர்வத்துடன் பங்கேற்றும் மக்கள் லட்சியங்களை நிறைவேற்றுவதில் கம்யூனிஸ்ட்டுகள் முன் நிற்பார்கள் என்பதன் உதாரண புருஷனும் அவர்தான்.

டிசம்பர் 1964ல் பம்பாயில் நடைபெற்ற கட்சி காங்கிரஸில் இந்திரஜித் குப்தா மத்திய செயற்குழுவில் மத்திய செயற்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றார். 1971 கொச்சி கட்சி காங்கிரசில் அமைக்கப்பட்ட மத்திய நிர்வாகக் குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1988 லிருந்து கட்சியின் துணைப் பொதுச் செயலாளராகச் செயல்பட்டார். ஏப்ரல் 1990ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 1996ம் ஆண்டு பாதிவரை அந்தப் பொறுப்பை நிறைவேற்றினார்.மத்திய உள்துறை அமைச்சரான உடன் கட்சியின் அந்தப் பொறுப்பிலிருந்து விலகினார். கட்சியின் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகிய இரு பெரும் பொறுப்புகளை வகித்து வெற்றிகரமாகக் கடமையாற்றினார். 


நியூஏஜ், மார்ச் 17-23, 2019 இதழ் 

தமிழில்: கடலூர் நீலகண்டன், என்எப்டிஇ,

நன்றி: ஜனசக்தி ஏப்.27);