tamilnadu

img

இந்திய குடியுரிமை சட்டத்தில் இஸ்லாமியருக்கும், ஈழத்தமிழருக்கும் அநீதி இழைக்கப்பட்டதை போல இந்திய மருத்துவ சட்டத்தில் யுனானிக்கும் , சித்த மருத்துவத்திற்கும் அநீதி இழைக்கப் பட இருக்கிறது

ஒரு நாகரிகச் சமூகத்தில் ஒரு துறை மட்டும்  தனித்து வளராது. அறிவியல், தத்துவம், மருத்துவம், பொறியியல் எல்லாம் ஒன்றோ டொன்று கொடுத்து வாங்கித்தான் வளரும். அதே போல அதனை அழிக்க நினைப்பவர்களும் ஒன்றினை  மட்டும் தனித்து அழிக்கமாட்டார்கள். அனைத்தின் மீதும் ஒருங்கிணைந்த  அழித்தொழிப்பினையே நிகழ்த்துவார்கள்.

தமிழ்மரபில், மருத்துவத் துறையின் வேர் மிகமிக  ஆழமானது. இந்த வேரைப் பிடித்து வளர்வதற்கே தனித்த வலிமை தேவை. சங்க இலக்கியத்துக்கும் வேத இலக்கி யத்துக்கும் மிக அடிப்படையான வேறுபாடே  இயற்கை யைப் பற்றிய அறிவியல் கண்ணோட்டம் சார்ந்தது தான். வேத இலக்கியம் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியையே மையமாக கொண்டு புகழ்கிறது. ஆனால்  சங்க இலக்கியம் இயற்கையின் ஆற்றலையே மீண்டும் மீண்டும் பாடுகிறது. அதனை புரிந்து கொள்ள  இடைவிடாது முயல்கிறது.

மரம், செடி, கொடி, வான், மண், ஒளி, நீர் என்று  இயற்கை பற்றியே மீண்டும் மீண்டும் பேசுகிறது. அவற்றின் இயங்கும் ஆற்றலையும், நுட்பத்தையும் அறிந்து கொள்ள இடைவிடாது முயல்கிறது. ஒரே பாட்டில் நூறு பூக்களின் பெயரை பட்டியலிடுகிறது சங்க இலக்கியம். உலக இலக்கியத்தில் தாவரத்தின் பெரும் பட்டியல் ஒன்றினை தாங்கிய முதல் பாடல் அதுவாகத் தான் இருக்கும். இதுவெல்லாம் இயற்கையை அறிந்து கொள்ளவும் அதனை நுட்பத்தின் அடிப்படையில் வகைப்படுத்துவதுமான மகத்தான மனித முயற்சியாகும். இந்த முயற்சியே அதிர்ஷ்டவாதத்தை முற்றிலும் நிராகரித்து அறிதலின் அடிப்படையிலான கண் ணோட்டத்தை வளர்த்தது. துவக்க காலத்திலேயே தமிழின் பெரும் அறிவுத்துறையாக மருத்துவத்துறை வளர்ந்துள்ளதை எண்ணற்ற அடையாளங்களின் வழியே நம்மால் அறிய முடிகிறது. இதற்கு ஆசிவக மும், பெளத்தமும், சமணமும் சிறப்பான பங்களிப்பி னைச் செய்துள்ளன. 

வேத இலக்கியத்தை மூலமாகக் கொண்டு வளர்ந்த வைதீக சிந்தாந்தம் அறிதலின் அடிப்படையி லான மருத்துவத்தின் மீது கடும் தாக்குதலை நடத்தியது. வேதத்தின் மிகவும் பிற்காலத்தியதான யஜூர் வேதத்தில் குறிப்பிடப்படுகிற மருத்துவக் கட வுள்களான அஸ்வின்களை பின்னால் தொழில்காரண மாக தகுதியற்றவர்களாக அறிவிக்கிறது. இதனைத்  தொடர்ந்து இயற்றப்பட்ட சட்ட நூற்கள் அனைத்தி லும் மருத்துவர்கள் மீது கொடுந்தாக்குதல் நிகழ்த்தப்படுகிறது. 

“மருத்துவன் இருக்கும் இடம் மாசடைந்தது, அவன் தரும் உணவு அருவருக்கத்தக்கது” என்கி றார் கெளதமர். “மருத்துவன் புனிதமற்றவன், எனவே  அவன் தரும் உணவினை ஏற்கக்கூடாது” என்கிறார்  வசிஷ்டர். “மருத்துவன் தரும் உணவு புண்ணி லிருந்து வடியும் சீழ் போன்றது” என்கிறான் மநு.  குல்லுகப்பட்டர் இன்னும் மோசமாகக் கூறுகிறார். இவர்கள் அனைவரும் மருத்துவனை இப்படிக் கூறு வதற்கு காரணம் அவன் உடல் எனும் பொருளினை மையப்படுத்தி இயங்குவதாலும், அனைத்து மனிதர்களையும் தொட்டுப் புழங்குவதாலும், அதிஷ்ட வாதத்தை முற்றிலும் நிராகரிப்பதாலும் அவன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டது.  இதற்கு நேர்மாறாக தமிழ் அறிவு மரபு மருத்து வனை மூலோன் என்றும் மூதுவன் என்றும் தொடர்ந்து  அழைக்கிறது. சமண மரபு அறிவுடையோனை சித்தன்  என்று சுட்டுகிறது. இந்தப்  பெயர் கொண்டே வரலாறு நெடுகிலும் தமிழ் மருத்துவன் அழைக்கப்பட்டான். எல்லாகால கட்டத்திலும் சித்தனை தனது அறிவுச்  செருக்கின் அடையாளமாகவே தமிழ்ச் சமூகம் கருதி யது. அதனால் தான் “நானும் ஒரு சித்தனப்பா” என்று இருபதாம் நூற்றாண்டு மகாகவி பாரதியும் உரிமை கோரினான்.

மக்களிடம் மருத்துவர்களுக்கு இருந்த செல்வாக்  கினை பயன்படுத்திக் கொள்ள சைவம் உள்ளிட்ட பெருமதங்களும் சித்தர் அடையாளத்தை அப்படியே தனதாக்கின. தனது அகண்டபிரகாரங்களில் அவர்க ளுக்கான சிலைகளையும் நிறுவிக்கொண்டது. தனது  புராணங்களில் அவர்களின் கதைகளையும் இணைத்துக்கொண்டது. “சாதியாவது ஏதடா” என்று  கேட்ட, நட்ட கல்லை வணங்குபவனைக் கண்டு பெரும் முழக்கம் செய்த சித்தர்களின் முதுகில் ஆளுக்கொரு புராணக்கதையை ஒட்டிவிட்டது. ஆனாலும் தனது அடிப்படையான அறிவுக் கண்ணோட்டத்தை இழக்காத சித்தர்கள்  நோய் நீக்கும்  மருத்துவத்தைக் கைக்கொண்டவாறே சீழ்பிடித்த பிற்போக்குத்தனத்திற்கு எதிரான சீற்றத்தை வெளிப் படுத்திக் கொண்டே இருந்துள்ளனர். தத்துவமும், மருத்துவமும் சமூக கண்ணோட்டமும் ஒற்றை முக மாக ஒளிவீசும் வாழ்வினைக் கொண்டவர்களாக சித்தர்  களை நம்மால் உணரமுடிகிறது. இந்திய அறிவு மரபில்  காலத்தால் அறுந்துவிடாத மாமனிதர்களாக இவர்கள்  விளங்குகிறார்கள்.

தமிழ் மருத்துவம் துவக்கத்திலிருந்தே மக்கள் வயப்பட்டதாகவே வளர்ந்து பரிணமித்தது. அதிகா ரத்தின் சட்ட திட்டங்களுக்குள்ளும், சாதியத்துக்குள் ளும் அது எந்தக்காலத்திலும் அடங்கவில்லை. எல்லா காலத்திலும் மக்கள் மருத்துவமாகவே அது வளர்க்கப்பட்டு வந்துள்ளது. இதற்கு சிறந்த உதாரணம் சொல்வதென்றால், சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ கத்தை ஆண்ட மன்னர்களில் ஆகப்பெரும்பான்மை யோர் சமஸ்கிருதத்தை தான் போற்றினார்கள். தேவ பாஷை என்று பூஜித்து செல்வங்களை வழங்கினார் கள். ஆனால் வேதக் கடவுள்களால் அருளப்பட்டதாக சொல்லப்பட்ட ஆயுர்வேத மருத்துவம் இங்கு பெரி தாக நிலைகொள்ளவில்லை.

தமிழகத்தில் கிடைத்திருக்கிற ஏடுகளில் சுமார்  நான்கில் மூன்று பங்கு ஏடுகள் சித்த மருத்துவம் சார்ந்த ஏடுகளாக இருக்கின்றன. அப்படியென்றால் அரசதிகாரத்தின் துணையின்றி மக்கள் எவ்வளவு பெரிய அறிவுத்துறையாக மருத்துவத்தை வளர்த்  தெடுத்து பாதுகாத்துள்ளனர் என்பதை நம்மால் அறிய  முடிகிறது. தமிழகத்துக்கு நேர்ந்த பெருந்துயரம் என்ன வென்றால் ஏடுகளில் இருந்த பழந்தமிழ் இலக்கி யத்தையெல்லாம் அறிந்து நவீன ஊடகத்துக்கு மடை மாற்றம் செய்த உ.வே. சா போன்ற மகத்தான ஆளுமை  சித்த மருத்துவத்துக்கு கிடைக்காமல் போனதுதான். காலனிய காலத்தில் இங்கு நிலைநிறுத்தப்பட்ட அறிவுத்துறைக் கண்ணோட்டமும், கனிமவளச் சட்டங்களும் மரபு வழிப்பட்ட மருத்துத்துறையின் மீது  பேரழிவை நிகழ்த்தியுள்ளன. அயோத்திதாசப் பண்டி தர், டி.வி. சாம்பசிவம் பிள்ளை போன்ற ஆளுமை களே இப்பெரும் ஆபத்தினை உணர்ந்து செயல் பட்டுள்ளனர். மக்கள் சமூகம் தனது அறிவை எளிதில் மறக்  கடிக்க விடாது. அடுத்த தலைமுறைக்கு கடத்திக்  கொண்டே இருக்கும். காலனியம் கொண்டு வந்து சேர்த்த நவீன வாழ்வின் கரம் பற்றமுடியாமல் ஒதுங்கிய  சித்த மருத்துவர்களால் இந்த பெரும் அறிவுத்துறை காப்பாற்றப்பட்டு நம் கையளிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரத்திற்குப் பின் இங்கு நிகழ்ந்த மாற்றங்கள்,  நெருக்கடிகள் மற்றும் வளர்ச்சிகள் பற்றி விரிவாகப் பேச இவ்விடம் பொருத்தமில்லை. எனவே இப்பொழுது  தேவைப்படும் இரண்டு விசயங்களை மட்டும் இங்கு முக்  கியமாக குறிப்பிட வேண்டும் என நினைக்கிறேன் \

நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்திய மருத்துவம் பற்றிய சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  (National Commission for Indian system of medicine Bill) 

இனி இந்திய மருத்துவங்கள் அனைத்தும் ‘‘ஆயுஷ்” என்ற சமஸ்கிருத பெயராலே அழைக்கப்ப டும். அதற்கு ஆங்கில எழுத்துக்களின் அடிப்படை யில் தனி விளக்கம் கொடுக்கப்பட்டாலும் ஆயுர்வேதத்  தையே இந்திய மருத்துவத்தின் முகமாக காட்டும் வெளிப்படையான முயற்சிதான் இது. இனி சித்த மருத்துவத்தை படிக்கவும் ”நீட்” எழுத  வேண்டும், படித்து முடித்து வெளியில் வரவும்  ‘‘எக்ஸிட்” எழுத வேண்டும். நிச்சயம் உயர்கல்வியில்  இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு இருக்கப் போவதில்லை. இப்படி எண்ணற்ற வற்றினை சொல்லிக்கொண்டே போகலாம்.  மிக முக்கியமாக இந்த சட்ட மசோதாவின் படி  ஆயுர்வேத மருத்துவமே பிரதான ஆதிக்கம் செலுத்தப்  போகிறது. 29 உறுப்பினர்களில் ஆயுர்வேத மருத்து வர்களே மிக அதிக எண்ணிக்கையில் அமரப் போகி றார்கள். இவற்றின் உச்சமாக ஆயுர்வேதத்துக்கு தனி  அமைப்பினை உருவாக்கும்  அரசு யுனானி சித்தா  உள்ளிட்ட அனைத்தையும் சேர்த்து ஒரே அமைப்பாக  உருவாக்குகிறது. 

எப்படி குடியுரிமைச் சட்டத்தில் இஸ்லாமியர்க ளுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் அநீதி இழைக்கப் பட்டுள்ளதோ அதே போல இச்சட்டத்தில் யுனானிக்கும்,  சித்த மருத்துவத்துக்கும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இச்சட்டம் அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விவாதத்துக்கு வரலாம். அப்பொழுது நானும் எங்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வலி மையாக இதற்கான எதிர்ப்பினை தெரிவிப்போம். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு சித்த மருத்துவரும் தங்களின் எதிர்ப்பினை தெரிவிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

இரண்டாவது. பாரம்பரிய மருத்துவத்தினை நவீன  ஆய்வுக் கண்ணோட்டத்துடன் இணைத்து முன்னெ டுக்க வேண்டிய விசயம். இந்தக் கருத்தரங்கின் நோக்க மும் அதுதான். ஒருங்கிணைந்த மருத்துவத்தினை உரு வாக்குதல். இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக திகழ்  வது சீனா. தனது பாரம்பரியமான மருத்துவ அனுப வத்தை நவீன அறிவியல் அணுகுமுறையோடு இணைத்து பெரும் சாதனையை நிகழ்த்திக் கொண்டி ருக்கின்றனர். ஆர்டிமிசின் (Artemisin) என்ற மருந்தி னைக் கண்டறிந்ததன் மூலம் உலகம் முழுவதும் மலேரியாவின் கொடுந்தாக்குதலில் இருந்து எண்ணிலடங்கா உயிர்களைக் காத்துள்ளனர். 

சீன மருத்துவத்துவமும் தமிழ் மருத்துவத்துவமும் ஆதியில் இருந்து உறவு கொண்டது. இந்த மரபின்  தொடர்ச்சியாக சீன மருத்துவர்களைப் போல தமிழ்  சித்த மருத்துவர்களாகிய நீங்களும் புதிய ஆய்வு களையும், அணுகுமுறைகளையும் வளர்த்தெடுக்க வேண்டும். அதற்கு இது போன்ற கருத்தரங்குகள் முக்கியப் பங்காற்றும். இக்கருத்தரங்கினையும், ஒருங்கிணைந்த ஆய்வினையும் முன்னெடுக்கும் மருத்துவர் சிவராமன் மற்றும் ஆரோக்கியாவிற்கு எனது வாழ்த்துகள்!

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் அண்மையில் நடந்த ஒருங்கிணைந்த மருத்துவத்துக்கான கருத்தரங்கினை துவக்கிவைத்து சு.வெங்கடேசன் எம்.பி ஆற்றிய துவக்க உரையின் கட்டுரை வடிவம்.
 

 

;