tamilnadu

img

பிப்.21 சிவப்பு புத்தக தினம் மாற்றம் நாடும் அனைவருக்குமான காவியம்! - என்.குணசேகரன்

மார்க்ஸ்-ஏங்கெல்சுடைய அழியாத காவியம் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை. அதில்   பல சிறிய வாக்கியங்கள், சொற்றொடர்கள் கூட அள்ள அள்ள குறையாத சிந்தனை செல்வங்களை வழங்குகின்றன. இள வயதில் மானுட சமூக இயக்கம் பற்றி மார்க்சும், ஏங்கெல்சும் கொண்டி ருந்த மேதைமை அறிக்கையின் ஒவ்வொரு சொல்லிலும் பளிச்சிடுகிறது. நாடுகளுக்கிடையே பல்வேறு விதமான ஏற்றத்தாழ்வு கள், வளர்ச்சிப் போக்குகளை புரிந்துகொள்வதற்கு மார்க்சி யம் வழிகாட்டுகிறது. கம்யூனிஸ்ட் அறிக்கையில் கையா ளப்படுகிற  வரலாற்றுப்பொருள்முதல்வாதம்,சமூக இயக்கத்தை புரிந்துகொண்டு, சமூகத்தை மாற்றுவ தற்கான ஆய்வுக் கருவியாக பயன்படுகிறது.

கம்யூனிஸ்ட் அறிக்கையின் நான்காவது பகுதி, “தற்போதுள்ள பல்வேறு எதிர்க்கட்சிகள் குறித்து கம்யூ னிஸ்டுகளின் நிலைபாடு” என்ற தலைப்புக் கொண்டது. ஐரோப்பாவின் பல நாடுகளில் செயல்பட்டு வந்த எதிர்க்கட்சி களோடு, கம்யூனிஸ்டுகளின்  உறவு எவ்வாறு இருக்க வேண்டுமென்று அறிக்கை சில வழிகாட்டுதல்களை முன்வைக்கிறது. மார்க்சும்,ஏங்கெல்சும் 1872-ஆம் ஆண்டு எழுதிய முன்னுரையில் இந்தப் பகுதி பற்றி குறிப்பிடுகின்றனர். இதில் உள்ள குறிப்புகள் “கோட்பாட்டு அளவில் இன்றும் சரியானவையே…..” என்று குறிப்பிடுகின்றனர். ஆனால் அரசியல் நிலைமை முற்றிலும் மாற்றமடைந்துள்ள தால்,அதில் சொல்லப்பட்டிருக்கிற நடைமுறைகள் காலத்திற்கு பொருத்தம் இல்லாததாக மாறிவிட்டன  என்றும் குறிப்பிடுகின்றனர்.

மார்க்ஸ் இந்த தலைப்பின் கீழ் பதிவு செய்துள்ள கருத்துக்கள்  இன்றைய  புரட்சிகர செயல்பாட்டிற்கு அவசிய மானவை.பாட்டாளி வர்க்கப் புரட்சியின் முன்னோடி களமாக ஜெர்மனி உருவாகியுள்ளது என்று மார்க்ஸ் கூறுகிறார். ஏனெனில் ஜெர்மனியில் ஒரு முதலாளித்து வப் புரட்சி நடைபெறும் தருவாயில் உள்ளது என்று அறிக்கையில் சுட்டிக்காட்டப்படுகிறது. அவ்வாறு “நடைபெறப்போகும் முதலாளித்துவப் புரட்சி உடன டியாக அதனை பின்தொடர போகும் ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான முன்னோடியாக இருக்கப்போகிறது…”என்று  எதிர்காலம் பற்றியும் பேசப்படுகிறது. நாம் வேகமாக படிக்கிற போது இந்த வாக்கியங்களின் முக்கியமான உட்பொருள் பற்றி சிந்திக்காமல் விடுபடும் வாய்ப்பு உள்ளது.ஜெர்மனியில் இந்த மாற்றங்கள் நிகழும் என்று அவர் குறிப்பிட்டதற்கு அங்கு தீவிரமாகி  வந்த வர்க்க முரண்பாடுகள்தான் காரணம்.

மார்க்சின் எதிர்பார்ப்பு

எதேச்சதிகார முடியாட்சி,நிலப்பிரபுக்கள் உள்ளிட்ட பிற்போக்கு வர்க்கத்தினருக்கு எதிராக முதலாளித்துவ வர்க்கமும் உழைக்கும் வர்க்கங்களும் போராடி வந்த சூழலில் மார்க்ஸ் இந்த கருத்தை எழுதியுள்ளார்.“..முதலா ளித்துவ வர்க்கம் புரட்சிகரமான முறையில் செயல்படும் போதெல்லாம் கம்யூனிஸ்டுகள் முதலாளித்துவ வர்க்கத்து டன் சேர்ந்து நின்று போராடுகின்றனர் ” என்றும் அவர் குறிப்பிட்டார். ஆனால் 1848-ல் புரட்சி ஏற்பட்டாலும் மார்க்ஸ் எதிர்பார்ப்புக்கு மாறாக  முதலாளித்துவ வர்க்கம் முடியாட்சிக்கு அடிபணிந்து சமரசம் செய்து கொண்டது.புரட்சி தோல்வியில் முடிந்தது. இவ்வாறு நிகழ்ந்ததைக் கருத்தில் கொண்டு,‘மார்க்ஸ் எதிர்பார்த்தவாறு ஜெர்மனியில் பாட்டாளி வர்க்கப் புரட்சி நடைபெறவில்லை;மார்க்சின் எதிர்பார்ப்பு பொய்யாகி விட்டது; எனவே மார்க்சியம் தவறானது’ என்றெல்லாம் முடிவுக்கு வருவது தவறானது.

ஜெர்மானிய புரட்சி பற்றி  மார்க்ஸ்  கூறியது போன்று, 1882-ல், மார்க்சும் ஏங்கல்சும்  ரஷ்யப்புரட்சி பற்றி குறிப்பிட்டி ருந்தனர்.அறிக்கையின் ரஷ்யப் பதிப்பு முன்னுரையில்“ ரஷ்யப் புரட்சியானது மேற்கு நாடுகளில் ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு முன்னோடி ஆகி இரண்டும் ஒன்றுக் கொன்று துணை நிற்குமாயின், நிலத்தின் மீதான தற்போ தைய ரஷ்ய பொதுவுடைமை கம்யூனிச வளர்ச்சிக்கான தொடக்கப் புள்ளியாக பயன்படக்கூடும்” என்று அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். இந்தக் கூற்றும் கூட அவர்களின் எதிர்பார்ப்பாகவே அமைந்தது. அவர்களின் கூற்றுக்களிலிருந்து மார்க்சும் ஏங்கெல் சும் தவறான முடிவுகளுக்கு வந்து விட்டார்கள் என்று கருதுவதால் பயனில்லை.இதை விட,சமூக அரசியல் பொரு ளாதார நிகழ்வுகள்  பற்றிய அவர்களது அணுகுமுறையை அறிவதுதான் பலனளிக்கும்.

மார்க்சியத்தில் சமூக பொருளாதார அமைப்புகள் குறித்த தனித்த பார்வை உண்டு. புராதன கம்யூனிச சமுதா யம், அடிமைச் சமூகம், நிலப்பிரபுத்துவ சமுதாயம், முதலா ளித்துவ சமூகம் என குறிப்பிட்ட கட்டங்களாக சமூக வளர்ச்சியை மார்க்சிஸ்டுகள் பார்ப்பது வழக்கம். ஆனால் இதை ஒரு சூத்திரமாக,ஒன்றின் பின் ஒன்றாக அணி வகுத்து வரும் சமூக வளர்ச்சியாகப் பார்ப்பது கூடாது. மார்க்ஸ், ஏங்கெல்ஸ் எழுத்துக்களில் இந்த வறட்டுத்தனம் தவிர்க்கப்பட்டு இருப்பதை காணலாம். ஒவ்வொரு நாடும் தனித்தன்மை கொண்ட சமூக, பொருளாதார அமைப்பினையும் , விசேட தன்மைகளை யும் கொண்டதாக உள்ளது. அந்த வளர்ச்சியின் பல்வேறு கூறுகளை கண்டறிதல் அவசியம். அந்த வளர்ச்சியின் பயணம் நேர்கோட்டில் செல்வதில்லை. முன்னேற்றமும் பின்னடைவும் நிறைந்ததாகவே இந்த வளர்ச்சிப் பயணம் உள்ளது. ஆனால் ,வர்க்கப் போராட்டம் இடையறாது நிகழ்வ தும்,கம்யூனிச சமூக அமைப்பு,அதன் முதற்கட்டமாக சோசலிசம் என்ற இலக்கை நோக்கிய பயணம் முடிவடைவ தில்லை.வரலாற்றின் இந்த நீண்ட பார்வையிலிருந்துதான் ஜெர்மனி பற்றியும் ரஷ்யாவைப் பற்றியும் மார்க்சிய மூலவர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ள னர்.

வற்றாத சிந்தனைச் செல்வம்

இந்தியா போன்ற நாடுகளில் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை,முதலாளித்துவ உற்பத்தி முறை என இரண்டுமே இயங்குவதை காண முடியும். பல ஐரோப்பிய நாடுகளில் நிலப்பிரபுத்துவ அழிவில் முதலாளித்துவம் வளர்ச்சிய டைந்த வரலாற்றைக் காணமுடியும். ஐரோப்பிய நாடுகளில் முதலாளித்துவ வளர்ச்சியும் வெவ்வேறு தன்மைகளோடு  வளர்ச்சி பெற்றது.இதே காலகட்டத்தில் ஆசியாவில் முதலாளித்துவ வளர்ச்சி பின்தங்கி இருந்தது.  இந்த வளர்ச்சியின் போது ஒவ்வொரு நாட்டிலும் பாட்டாளி வர்க்கத்தின் வாழ்க்கை நிலைமைகள், போராட்டக் குணம், அமைப்புரீதியில் திரண்டுள்ள நிலைமை கள் மாறுபடுகின்றன. இவைகளை அறிந்து சோசலிச இலக்கை நோக்கிச் செல்வதற்கு ஏற்ற போராட்ட உத்திகளையும், புரட்சிக்கான வழிமுறைகளையும் கம்யூனிஸ்டுகள் உருவாக்கிட வேண்டும். அறிக்கையின் சாராம்சம் இதையே சுட்டிக்காட்டுகிறது. இதற்காகவே,”குறிப்பிட்ட நிலைமைகளை குறிப்பிட்ட வாறு ஆய்வு செய்திட வேண்டும்” என்று லெனின் வலியுறுத்தினார்.

இந்தியாவில்,முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ மேலாதிக்கமும், சர்வதேச மூலதனச் சுரண்டலும் நீடித்து வருகிறது. உழைக்கும் வெகுமக்கள் அணிசேர்ந்தால்தான் மாற்றத்தை சாதிக்க இயலும். கம்யூனிஸ்ட் அல்லாதவர்களும் இதைப் படிக்கிற போது கம்யூனிசம் என்ற இலக்கில் அவர்களுக்கு உடன்பாடு இல்லை என்றாலும் மனிதரை மனிதர் சுரண்டும் சமூகத்தை மாற்றி, சுரண்டலற்ற சமத்துவ சமூகம் ஏற்பட வேண்டும் என்ற அறிக்கையின் அடிப்படையை ஏற்றுக் கொள்வார்கள். எனவே, கம்யூனிஸ்ட் அறிக்கை கம்யூனிஸ்டுக ளுக்கான ஆவணம் மட்டுமல்ல ;மாற்றம் நாடுவோர் அனைவருக்கும் நம்பிக்கை ஏற்படுத்தும் காவியமாகத் திகழ்கிறது. பிப்ரவரி 21 அன்று உலகந்தழுவிய அளவில் நடைபெறும் கம்யூனிஸ்ட் அறிக்கை வாசிப்பு பேரியக் கத்தில் மானுட சமூகத்தின் மீது அக்கறை கொண்ட அனைவரும் பங்கேற்போம்!

 

;