கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு எதிரான நடவடிக்கையாக மத்திய, மாநில அரசுகள் அறிவித்த ஊரடங்கு காரணமாக எண்ணற்ற தொழிலாளர்கள் – குறிப்பாக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொல்லொணா துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியுவின் தில்லி மாநிலக் குழுவின் தோழர்கள் ஓய்வின்றி கடந்த பல வாரங்களாக தில்லி யூனியன் பிரதேசப் பகுதியில் சிக்கித் தவித்து வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொருட்களை அளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடுந்துன்பத்தில் சிக்கித் தவித்து வரும் இத்தகைய தொழிலாளர்களிடையே தில்லியில் உள்ள சிஐடியு தலைவர்களின் அலைபேசி எண்கள் அளிக்கப்பட்டன. இந்த எண்கள் தில்லியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்டன. துயருற்றிருக்கும் தொழிலாளர்களிடமிருந்து கடந்த ஒரு மாத காலத்தில் எண்ணற்ற அழைப்புகள் இந்த எண்களுக்கு வந்தன. ஏப்ரல் 23ம் தேதி வரை சுமார் 20,000 புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு தானியங்கள், சமையல் எண்ணெய், உப்பு, சர்க்கரை, சோப் போன்றவை அடங்கிய பைகள் நிவாரணமாக அளிக்கப்பட்டுள்ளன.