tamilnadu

img

போர்களில் குழந்தைகள் தாக்கப்படுவது மூன்று மடங்கு அதிகரிப்பு - யூனிசெப் தகவல்

போர்களில் குழந்தைகள் தாக்கப்படுவது, கடந்த 2010-ல் இருந்ததை விட தற்போது மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக யூனிசெப் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது குறித்து யூனிசெப் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கடந்த 10 ஆண்டுகளில் தினந்தோறும் குழந்தைகள் மீது சராசரியாக 45 உரிமை மீறல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இதைச் சந்திக்கும் நாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நாடுகள் இடையே நடத்தப்படும் போர்கள், உள்நாட்டு போர்களில்,  குழந்தைகளின் பாதுகாப்பு என்ற அடிப்படை விதிமுறையை மீறியே நடத்தப்படுகின்றன. குழந்தைகளுக்கு எதிராக 24 ஆயிரம் வன்முறைகள் நிகழ்ந்திருப்பதை 2018-ம் ஆண்டில் ஐ.நா. உறுதி செய்தது. 2010-ல் இருந்ததை விட இது இரண்டரை மடங்கு அதிகம். குழந்தைகளைக் கொல்வது, ஊனமாக்கி விடுவது, பாலியல் வன்முறை, கடத்தல், குழந்தைத் தொழிலாளர் முறை, குழந்தைகள் மீதான தாக்குதல் என குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த 24 ஆயிரம் வன்முறைகளில் பாதிக்கும் மேற்பட்டவை விமான வழித் தாக்குதல்கள் மூலம் கொடூரமாக நிகழ்த்தப்பட்டவை. இவற்றால் குழந்தைகள் கொல்லப்பட்டனர் அல்லது நிரந்தரமாக ஊனமாக்கப்பட்டனர்.

கடந்த மார்ச் மாதம், மேற்கு ஆப்பிரிக்காவின் மாலியில் உள்ள மோப்தி பகுதியில் 85 குழந்தைகள் உட்பட 150 பேர் கொல்லப்பட்டனர். அதேபோல போர் காரணமாக சுமார் 20 லட்சம் குழந்தைகள் ஏமனில் பள்ளிக்குச் செல்லாமல் உள்ளனர். அத்துடன் கேமரூன் நாட்டின் வடமேற்கு மற்றும் தென்மேற்குப் பகுதியில் ஏற்பட்ட வன்முறையால், 8.55 லட்சம் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.

இதனால் அனைத்து நாடுகளும் சர்வதேச விதிகளைப் பின்பற்றி, குழந்தைகளுக்கு எதிரான வன்முறையைக் கைவிட வேண்டும். பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளையும் கட்டமைப்பு வசதியையும் உருவாக்கித் தர வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

;