states

அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதம்

புதுச்சேரி மே 17- பாகூர் பகுதியில் திடீரென பெய்த கோடை மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்தன. புதுச்சேரியில் கோடை வெயில் வாட்டி வதைத்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை வானம் மேகமூட்டத் துடன் காணப்பட்டது. இரவில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர்  சூழ்ந்தது. சாலைகளிலும், சில இடங்களில் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்து மக்கள் அவதிக்குள்ளாகினர். இந்த திடீர் மழையால் பாகூர், குருவிநத்தம், சோரியாங்குப்பம், சேலியமேடு, மடுகரை, நெட்டப்பாக்கம், கரையாம் புத்தூர், மணமேடு ஆகிய பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் மழையில் நனைந்து சாய்ந்து விட்டன. பல இடங்களில் வயலில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இதுபோல் சுமார் 100 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி யுள்ளன. நன்கு விளைந்த நெற்பயிரில் ஏக்கருக்கு 70 முதல்  80 மூட்டை வரை கிடைக்கும். ஆனால் இந்த மழையால் 50 முதல் 60 மூட்டை நெல் மட்டுமே கிடைக்க வாய்ப்பு  இருப்பதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். கோடைகாலத்தில் பயிரிடப்பட்டிருந்த பச்சை பயறு,  உளுந்து பயிர்கள் மழையால் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.  இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப் பட்டுள்ளனர். வேளாண் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட நெல், பச்சைப்பயிறு, உளுந்து ஆகியவற்றை பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;