புதுச்சேரி, மார்ச் 28- ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர், விவசாய விரோத கொள்கை களை கண்டித்து புதுச்சேரியில் நடை பெற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் வங்கி, எல்ஐசி, பிஎஸ்என்எல், தபால் துறை ஊழியர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
எல்ஐசி
புதுச்சேரி சாரம் எல்ஐசி அலுவலகம் முன்பு அகில இந்திய காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் புதுச்சேரி கிளைத் தலைவர் மனோகர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வேலூர் கோட்ட சங்க துணைத்தலைவர் நாகராஜன், புதுச்சேரி கிளை 2இன் தலைவர் ஜவகர், பொருளாளர் ஆனந்தி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பிஎஸ்என்எல்
பிஎஸ்என்எல் புதுச்சேரி தலைமை பொதுமேலாளர் அலுவலகம் அருகே ஒருங்கிணைப்பாளர் சுப்புரமணியன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வருமான வரித்துறை ஊழியர்கள்
தெய்வநாயக பிள்ளைத் தோட்டத்தில் உள்ள வருமானவரி புதுச்சேரி ஆணையர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு புதுச்சேரி மண்டலத் தலைவர் கோவிந்தன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதேபோல் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகை அருகே அஞ்சலக ஊழியர் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி சுதேசி பஞ்சாலை எதிரில் நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். சம்மேளன கவுரவத் தலைவர் பாலமோகனன், பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் கிருஸ்தோபர், நிர்வாகிகள் பிரேமதாசன், ஆனந்தகணபதி,சிவஞானம்,சேகர்,முனுசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.