states

img

மயக்க மருந்து செலுத்தாமல் குடும்ப கட்டுப்பாடு - ஆரம்ப சுகாதார மையங்களில் கொடூரம்

பீகார் மாநிலம் ககாரியாவில் இரண்டு அரசு ஆரம்ப சுகாதார மையங்களில், 24 பெண்களுக்கு மயக்க மருந்து செலுத்தாமல் குடும்ப கட்டுப்பாடு செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

பீகார் மாநிலம் ககாரியாவில் என்.ஜி.ஒ ஒன்று மூலமாக கிராமங்களில் குடும்ப கட்டுப்பாடு முகாம்கள் நடத்தப்பட்டு, அறுவை சிகிச்சை செய்ய 50க்கும் மேற்பட்ட பெண்கள் அழைக்கப்பட்டனர். ஒவ்வொரு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை, ரூ.2100 என்.ஜி.ஓ-க்கு அரசு சார்பில் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், இரண்டு அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் குடும்ப கட்டுப்பாடு செய்துகொண்ட 24 பெண்களுக்கு மயக்க மருந்து செலுத்தாமல் அறுவை சிகிச்சை செய்த கொடூரம் நடந்துள்ளது. 

இது குறித்து அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண் ஒருவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில், அறுவை சிகிச்சை செய்யும் போது அப்பெண் வலியால் கத்தியதாகவும், 4 பேர் அவரது கை மற்றும் கால்களை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டதாகவும், அந்த நிலையிலேயே மருத்துவர் அறுவை சிகிச்சையை செய்து முடித்ததாகவும் தெரிவித்தார். மேலும், அறுவை சிகிச்சை முடிந்த பிறகு ஒரு ஊசி செலுத்தப்பட்டதாகவும், பின்னர் வலி குறைந்ததாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட நீதிபதி அலோக் ராஜன் கோஷ் உத்தரவிட்டுள்ளார். 

இதேபோல கடந்த 2012-ஆம் ஆண்டு அராரியா மாவட்டத்தில் 53 கிராமப்புற பெண்களுக்கு 2 மணி நேரத்தில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இந்த விவகாரத்திலும் ஒரு என்.ஜி.ஓ-க்கு தொடர்பு உள்ளது. அப்போது 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

;