states

வாழ்வாதாரம் இழந்த பெண் விவசாயத் தொழிலாளர்கள் - பி.வசந்தாமணி

மோடி தலைமையிலான ஓன்றிய பாஜக அரசு அமலாக்கி வரும் வேளாண் விரோத கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான கொள்கைகளினால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் நிலத்தை விட்டு வெளியேறும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.   தமிழ்நாட்டில் ஒரு கோடிக்கும் மேல் உள்ள விவசாயத் தொழிலாளர்களில் 50 விழுக்காட்டினர் பெண்கள். இவர்களுக்கு நடவு, களைஎடுப்பு, அறுவடை என விவசாயத்தில் ஆண்டுக்கு சில மாதங்கள் கிடைத்து வந்த வேலையும் தற்போது கிடைக்கவில்லை.   விதைப்பு, களை எடுப்பு, மற்றும் அறுவடைக்கு இயந்திரங்களும் வந்துவிட்டதால் விவசாயத்துறையில் கிடைக்கும் வேலைவாய்ப்பு கானல் நீராக மாறிவிட்டது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் வேலையில்லாத நிலை நீடிக்கிறது என்றால் மற்ற மாவட்டங்களில் சொல்லவே வேண்டாம்.  சில மாவட்டங்களில் அவர்கள் வாழும் சொந்த கிராமங்களில் வேலை கிடைக்காத காரணத்தால் அருகில் உள்ள கிராமங்கள், வேறு மாவட்டங்களுக்கு வேலைக்குச் சென்று வருகிறார்கள். அறுவடை காலங்களில் பக்கத்து மாவட்டம், கேரள மாநிலத்துக்கு குடும்பம் குடும்பமாக இடபெயர்ந்து சென்று சில நாட்கள் தங்கியிருந்து வேலை செய்கிறார்கள். அப்போது அவர்களுடைய குழந்தைகள் பாதுகாப்பின்றியும், கல்வியை தொடர முடியாமலும் போய்விடுகிறது. 

நிதி வெட்டும், வேலைகுறைப்பும்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் கிராமத்தில் ஓரளவு பொருளாதாரத்தை வழங்கி வந்த 100 நாள் வேலை திட்டமாகும். இந்த திட்டத்தில் 90 விழுக்காடு பெண்களே வேலை செய்து  வருகிறார்கள். 2014ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்த திட்டம் தேவையில்லை என்று அவர்  கூறியதையடுத்து நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதனையடுத்து இந்த திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை படிப்படியாக குறைத்து இத்திட்டத்தை சீர்குலைப்பதற்கான அனைத்து நடவடிக்கை யிலும் ஈடுபடுகிறார்.  ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும். ஆனால் சட்டத்திற்கு புறம்பாக ஒரு வருடத்திற்கு ஒரு குடும்பத்திற்கு 24 நாட்கள் முதல் 36 நாட்கள் வரை தான் வேலை வழங்கப் படுகிறது. பயனாளிகளின் எண்ணிக்கையும் குறைக்கப்படுகிறது. பயனாளிகளின் வருகையை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அதனால் பயனாளிகள் தங்கள் கூலியை பெறுவதில் சிக்கல் உருவாகிறது. இதன் காரணமாக பெண் தொழிலாளர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். 

நுண் நிதி நிறுவனங்களின் பிடியில் 

இந்தியாவில் இயங்கி வரும் பெரும்பாலான நுண் நிதி நிறுவனங்கள் ஆசிய வளர்ச்சி வங்கியிலிருந்து 4 விழுக்காடு வட்டிக்கு கடனாக நிதியை பெறுகிறது. ஆனால் 16 விழுக்காடு முதல் 26 விழுக்காடு வரையிலும், சில நிறுவனங்கள் 30 விழுக்காடு வரை வட்டி கடன் கொடுக்கிறது. இந்தியாவில் 60 லட்சத்து 74 ஆயிரம் குழுக்கள் உள்ளன. 3 லட்சத்து 40 ஆயிரம் சுய உதவிக்குழுக்கள் உள்ளன. 14 கோடி குடும்பங்கள் ஏதாவது ஒரு வகையில் இந்நிறுவனங்களிடம் கடன் பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் 300க்கும் மேற்பட்ட நுண் நிதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கொரோனா காலத்தில் வேலையும், வரு மானமும் இழந்த குடும்பங்கள் மிகப்பெரும் பொருளாதார நெருக்கடிக்கும், மன வேதனைக்கும் உள்ளா னார்கள். பெண்கள் தங்கள் அவசர தேவைகளுக்காக நுண் நிதி நிறுவனங்களில் கடன் பெறுகிறார்கள். எந்த வித வருமானமும் இல்லாமல் பணத்தை கட்ட முடியாத நிலையில் இருந்த குடும்பங்களைத் தான் நுண் நிதி நிறுவனங்கள் அச்சுறுத்தின. இந்த நுண் நிதி நிறுவனங்கள் கிராமப்புறங்களிலும் செயல்பட்டு பெண் விவசாயத் தொழிலாளர்ளையும் கடன் வலையில் சிக்க வைத்தது. 

அவமானத்திற்குள்ளாகும் பெண்கள்

கடன் பெற்ற பெண் விவசாயத் தொழிலாளர்கள் தாங்கள் வாங்கிய கடன்களை கட்ட முடியாமல் அவ மானத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாவதோடு சிலர் தற்கொலை முயற்சிக்கும் தள்ளப்பட்டார்கள்.  வறுமையில் சிக்கித்தவிக்கும் குடும்பங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக மோடி அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 11 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்து தனது வர்க்கப் பாசத்தைகாட்டி யுள்ளது. ஆனால் பெண் விவசாயத் தொழிலாளர்களுக்கு ரூ.200 முதல் ரூ.350 வரை கூலி வழங்கப்படுகிறது.  ஆண் விவசாயத் தொழிலாளர்களுக்கு ரூ.400 முதல் ரூ.800 வரை கிடைக்கிறது. விலைவாசி உயர்வுக்கு ஏற்ப குறைந்த பட்ச கூலிச்சட்டத்தை ஒவ்வொரு ஆண்டும் மறுபரிசீலனை செய்து நிறைவேற்ற வேண்டும். இந்தியாவிலேயே முதன் முதலாக வேளாண் தொழிலாளர் நல வாரியத்தை கேரள அரசு அமைத்துள்ளது. 28 லட்சம் தொழிலாளர்கள் இதில் பயனடைவார்கள். அது போல தமிழ்நாட்டிலும் வேளாண் தொழிலாளர் நல வாரியம் அமைக்கப்பட வேண்டும்.  விவசாயத்தொழிலாளர்களுக்கு ஒருங்கிணைந்த தேசிய பாது காப்பு சட்டத்தை அமுலாக்கிட வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெண்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கிட மோடி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து புதுக்கோட்டையில் நடைபெறும் 10ஆவது அகில இந்திய மாநாடு நம்மை அழைக்கிறது. ஒன்றுபடுவோம்! களம் காணுவோம்!!


 

 

;