states

img

ராஜஸ்தானில் மோடிக்கு அச்சமூட்டியது எது?

ராஜஸ்தானில் நரேந்திர மோடியை அச்சுறுத்தியது எது?  அவர் மறைத்து வைத்திருந்த வகுப்பு வாத விஷத்தை மிகக்  கடுமையாக உமிழக் காரணமான சூழ்நிலை என்ன? இதன் பின்னணியில் தேர்தலில் பின்ன டைவு குறித்த அச்சம் மிகவும் ஆழமாக இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். வெளிப்படையாக மத வெறியை உமிழ்வது மட்டுமல்ல; கலவரத்தை உரு வாக்கி, மனிதர்கள் தமக்குள் மோதி ஒரு வரை ஒருவர் அடித்துக் கொன்றும், அதன் மூலம் ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்தும் வாக்குகளைப் பறிக்கும் உத்தியை பாஜக கும்பல் எப்போதும் பயன் படுத்தி வருகிறது. கோழைத்தனம்தான் எப்போதும் வன்முறைக்கான  வாசலாக மாறுகிறது. 

பாஜகவை  அலட்சியப்படுத்திய மக்கள்

இந்த முறை ராஜஸ்தானில் வாக்காளர் களின் ‘அலட்சியம்’ பாஜகவினரை பய முறுத்தியது. 2019 மக்களவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 25 இடங்களையும் கைப்பற்றி வெற்றியைக் கொண்டாடினர். ஆனால், இம்முறை முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற இடங்களில், வாக் காளர்கள் பெரிய அளவிற்கு பாஜகவுக்கு முகம் கொடுக்கவில்லை. அடிப்படைப் பிரச்ச னைகள் அனைத்திலும் மூச்சுத் திணறடித்து, சாதி, மதவெறி அடிப்படையில் மட்டுமே வாக்களிக்கும் அணுகுமுறைக்கு தேர்தல் களத்தில் இருந்தே மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிக வாக்குகள் பதிவான ஸ்ரீ கங்கா நகர் தொகுதியில் கூட 2019-ஐ விட இந்த முறை பெரிய அளவில் வித்தியாசம் ஏற்பட்டுள்ளது. 2019இல் இங்கு 74.39 சத விகித வாக்குகள் பதிவாகியிருந்த நிலை யில், இம்முறை 65.64 சதவிகிதமாக குறைந்துள்ளது. கரௌலி-தோல்பூர் தொகுதியில் 49.29 சதவிகித வாக்குகள் பதிவாகின. 2019 இல், இங்கு பதிவானது 55.06 சதவிகிதமாக இருந்தது. ஜெய்ப்பூரில் 62.87 சதவிகித வாக்குகள் பதிவாகின. பிகானிரில் 53.96, சுரு 62.98, சிகார் 57.28, ஜெய்ப்பூர் ரூரல் 56.58, ஆல்வார் 59.79, தௌசா 55.21, பாரத்பூர் 52.69, ஜுன்ஜுனு 51.62, நாகௌர் 56.89 சதவிகிதம் என வாக்குகள் பதிவாகியுள்ளன.

அரசுக்கு எதிராக வலுவான அலை

விவசாயிகள் போராட்டம், அக்னிபாத், மல்யுத்த வீரர்களின் போராட்டம் போன்ற பிரச்சனைகள் பாஜகவின் தொண்டையில் நெருப்பாக இறங்கி இருக்கின்றன. சிகார்  தொகுதியில் விவசாயிகளின் தலைவராக இருக்கும் சிபிஎம் மத்திய குழு உறுப்பினர் அம்ரா ராம், விவசாயத் துறைக்கு புதிய அரசியல் உத்வேகத்தை அளித்துள்ளார். அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக முதல்  வேலைநிறுத்தம் வெடித்தது ராஜஸ்தானில் தான். இளைஞர்களின் மிகப்பெரிய வேலை வாய்ப்பு நம்பிக்கை அழிந்துவிட்டது; அவர்கள் வெறும் தற்காலிக கூலிகளாக மாறி விட்டார்கள் என்ற உணர்வு, ராஜஸ்தானத்து மக்களிடையே வலுவாகப் பரவியுள்ளது. பாஜகவுடன் எப்போதும் உறுதியாக நிற்கும் ராஜபுத்திரர்கள் இம்முறை அந்த அளவுக்கு நட்பாக இல்லை. குஜராத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பருஷோத்தம் ரூபாலா பேசிய விவாதத்திற்குரிய பேச்சும் நிலைமையை மாற்றியுள்ளது. அவர் மன்னிப்புக் கேட்டாலும், ராஜபுத்திரப் பெண்கள் அதை ஏற்காமல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். குஜராத் எல்லையை பகிர்ந்து கொள்ளும் மாவட்டங் களில் உள்ள தொகுதிகளை இந்த பிரச்ச னை பாதிக்கும். இந்த இடங்களில் ராஜ புத்திரர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ராஜஸ்தானில் அவர்களின் மக்கள் தொகை 5.4 சதவிகிதம்.

பின்னடைவைச் சந்திக்கும் பாஜக

மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட  வாக்குப்பதிவில் நாடு முழுவதும் குறைந்த வாக்குப்பதிவு நடந்தது. 102 தொகுதிகளில் மொத்தம் 65.5 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி யுள்ளன. 2019ஐ விட 4.4 சதவிகிதம் குறை வான வாக்குகள். இதை ஆயுதமாக எடுத்துக் கொண்டு பீகாரில் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் களம் இறங்கினார். பாஜக வின் பின்னடைவு ஆரம்பித்துவிட்டது என்று  தேஜஸ்வி கூறியது மோடியையும் அவரது சகாக்களையும் உலுக்கியுள்ளது. ராஜஸ்தானில் மோடியும், அமித் ஷாவும் நேரடியாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு கட்ட தேர்தல் முடியும் போதும் பாஜக - சங்பரிவார் கும்பலிடம் ஏற் படும் அவநம்பிக்கை, மேலும் வகுப்புவாத மோதலை உருவாக்க வழிவகுக்கும். மதவெறியை பற்றவைப்பதே அவர்களின் நிலைப்பாடு. இது 80 சதவிகிதத்துக்கும் 20 சதவிகிதத்துக்குமான போட்டி என்று யோகி ஆதித்யநாத் ஏற்கனவே கூறியிருந்தார். அதையே கடுமையான வார்த்தைகளில் வகுப்புவாத பதற்றத்தை தூண்டும் வகையில் தற்போது மோடி பேசியுள்ளார்.

 

;