புதுதில்லி, பிப். 3 - அதானி ஊழல் விவகாரத்தால், நாடாளு மன்றம் 2-ஆவது நாளாக முடங்கியது. அத்து டன், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை யன்று குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் துவங்குவதாக இருந்தது. ஆனால், நாட்டின் நம்பர் ஒன் பணக்காரரான கவுதம் அதானி, சுமார் 17 லட்சம் கோடி அளவிற்கு பங்குச் சந்தை ஊழலை அரங்கேற்றியுள் ளார்; அதானியால் இந்திய நாட்டின் பொருளா தார வளர்ச்சியே ஆபத்தில் தள்ளப்பட்டு உள்ளது என்று அமெரிக்காவின் ‘ஹிண்டன் பர்க் ரிசர்ச்’ ஆய்வறிக்கை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தை அவை விதி 267-இன் கீழ், நாடாளுமன்றம் உட னடியாக விவாதத்திற்கு எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
இதுதொடர்பாக நோட்டீஸ்களையும் அளித்தன. ஆனால், மக்களவை, மாநிலங்களவை என இரண்டு அவைகளிலும், அதானியின் ஊழல் குறித்த விவாதத்திற்கு மோடி அரசு அனுமதி மறுத்துவிட்டது. இதனால் ஆவேசமடைந்த காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, சிவசேனா, சமாஜ்வாதி திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, கேரளா காங்கிரஸ், ஐயுஎம்எல், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றம் சுமூகமாக நடை பெற முடியாத நிலை ஏற்படவே, நாள் முழு வதும் அவை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்தச் சூழலில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் நான்காவது நாள் கூட்டம், வெள்ளிக்கிழமையன்று காலை 11 மணிக்குக் கூடியது. அவை கூடியவுடன் எதிர்க்கட்சிகள் மீண்டும் அதானி விவகா ரத்தை கிளப்பி, முழக்கங்களை எழுப்பினர். மக்களவை பிற்பகல் 2 மணி வரையும் மாநிலங்களவை 2.30 மணி வரையும் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பிற்பகலில் அவை கூடிய போதும் போராட்டம் தொடர்ந்தது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அதானி ஊழலை விவாதிக்கக் கோரி, தொடர்ந்து முழக்கங் களை எழுப்பியதால், திங்கட்கிழமை காலை 11 மணி வரை அவை நடவடிக்கை கள் ஒத்திவைக்கப்பட்டன.