states

நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஆக. 8 முதல் 10 வரை விவாதம்!

புதுதில்லி, ஆக. 1 - எதிர்க்கட்சிகள் கொடுத்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் ஆகஸ்ட் 8-ஆம் தேதி விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும், இதன்மீது ஆகஸ்ட் 10 அன்று பிரதமர் மோடி பதிலளிப்பார் என்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். 80 நாட்களுக்கும் மேலாக தொடரும் மணிப்பூர் வன்முறை தொடர்பான உண்மை நிலவரங்களை நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி விளக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடந்த இரண்டு வாரங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  பிரதமர் நரேந்திர மோடியை நாடாளுமன்றத்திற்கு வர வைப்பதற்கும், கேள்விகளுக்கு பதிலளிக்கச் செய்வதற்குமான வியூகமாக, ஒன்றிய பாஜக அரசு மீது, கடந்த ஜூலை 26 அன்று நம்பிக்கையில்லாத் தீர்மானம்  கொண்டு வந்தனர்.

காங்கிரஸ் மக்களவை துணைத்தலை வரும் அசாம் மாநில எம்.பி.யுமான கவுரவ் கோகோய், பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் மக்களவைக்குழுத் தலைவர் நாகேஸ்வர் ராவ் ஆகியோர் தனித்தனியாக நம்பிக்கையில்லா தீர்மானங்களை முன்மொழிந்தனர். சபாநாயகர் ஓம் பிர்லாவும், தீர்மானத்தை ஏற்றுக் கொண்டார்.  எனினும், தீர்மானத்தை உடனடியாக விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளாத அவர், காலதாமதம் செய்து வந்தார்.  இதனைக் குறிப்பிட்டு எதிர்க்கட்சிகள் நாடாளு மன்றத்தில் கேள்வி எழுப்பி வந்தன. மணிப்பூர் விவகாரத்தில் விவாதத்தை அனுமதிக்காதது, நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது விவாதத்தை தொடங்காதது ஆகிய வற்றுக்கு கண்டனம் தெரிவித்து, கறுப்பு உடையணிந்தும் போராட்டம் நடத்தின. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் ஆகஸ்ட் 8 முதல் 10-ஆம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள், ஒன்றிய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது விவாதம்  நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நம்பிக்கை யில்லா தீர்மானம் என்பதால் அனைத்து விவாதங்களுக்கும் பதிலளித்து இறுதியாக ஆகஸ்ட் 10 அன்று பிரதமர் மோடி உரையாற்றுவார் என கூறப்பட்டுள்ளது.  மணிப்பூர் விவகாரத்தை முன்வைத்தே எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்மொழிந்திருப்பதால், பிரதமர் மோடியும் மணிப்பூர் குறித்த எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிப்பார் எனக் கூறப்படுகிறது.