states

img

வகுப்பு வாத பகையை தூண்டியதாக பாஜக தலைவர் தஜிந்தர் பால் சிங் பக்கா கைது 

பாஜக தலைவர் தஜிந்தர் பால் சிங் பக்காவின் நடவடிக்கைகள் தொடர்ந்து திட்டமிட்டு வகுப்பு வாத பகையை தூண்டும் வகையில் உள்ளதாக கூறி பஞ்சாப் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். 
பாஜக தலைவர் தஜிந்தர் பால் சிங் பக்கா ஊடகங்களுக்கு கொடுத்த பேட்டிகள் மற்றும் அவரது ட்விட்டர் பதிவுகள் தொடர்ந்து உள்நோக்கத்துடன் திட்டமிட்ட முறையில் வகுப்புவாத பகையை தூண்டும் வகையில் இருந்ததாக பஞ்சாப் காவல்துறையினர் குற்றம் சாட்டினர். 
இது குறித்த விசாரணைக்கு ஆஜராகுமாறு பஞ்சாப் காவல்துறையினர் 5 முறை நோட்டீஸ்  அனுப்பியும் தஜிந்தர் பால் சிங் பக்கா ஆஜராகவில்லை. இதையடுத்து தஜிந்தர் பால் சிங் பக்கா அவரது வீட்டில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளதாக பஞ்சாப் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 
இந்நிலையில், பஞ்சாப் காவல்துறையினர் தனது மகனை கடத்தியுள்ளதாக தஜிந்தர் பால் சிங் பக்காவின் தந்தை டெல்லி காவல்துறையினரிடம் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். இதன் அடிப்படையில் ஹரியானா காவல்துறையினர் பஞ்சாப் காவல்துறையினரிடமிருந்து தஜிந்தர் பால் சிங் பக்காவை மீட்டு டெல்லி காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தஜிந்தர் பால் சிங் பக்காவை கடத்தியதாக பஞ்சாப் காவல்துறையினர் மீது டெல்லி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 
இது கடத்தல் வழக்கு அல்ல, ஹரியானா காவல்துறை தேவையின்றி அவர்களைத் தடுத்து நிறுத்துவதாகவும் பஞ்சாப் காவல்துறையினர் ஹரியானா காவல்துறை உயர் அதிகாரிகளுக்குக் கடிதம் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.