ஆளுநர் உரை தயாராகி அச்சாகிவிட்ட நிலையில், தோழர் என்.சங்கரய்யா அவர்கள் அன்றைய வருவாய்த்துறை அமைச்சர் நாஞ்சில் மனோகரன் அவர்களிடம் பேசி, இருவரும் சேர்ந்து எடுத்த முயற்சியை முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களை ஏற்கச்செய்து கடைசியாக நம் கோரிக்கையை தனிப் பட்டியலாக தயாரித்து ஆளுநர் உரையில் கடைசி பகுதியில் ஒட்டி அரசின் கொள்கையாக ஆளுநரால் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் அனைத்து கிராமத்திலும் ரேஷன் கடைகள் திறந்து, குடும்ப அட்டைகள் வழங்கி, ரேஷன் பொருட்கள் வழங்க எடுக்கப்பட்ட முயற்சி இப்படித்தான் துவங்கியது.
தமிழ்நாட்டில் மட்டும் தான் அனைவருக்கும் ரேஷன் என்கிற நடைமுறை உள்ளது. சுமார் 2 கோடியே 17 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. இவற்றில் முன்னுரிமை குடும்ப அட்டைகள் 77,81,055. அந்தியோதயா அட்டைகள் 18,64,600. முன்னுரிமையற்ற அட்டைகள் 92,49,207. சர்க்கரை அட்டைகள் 10,12,630. எந்த பொருளும் வழங்கப்படாத அட்டைகள் 46,189. முதியோர் ஓய்வூதியம் பெறும் மாதம் 5 கிலோ அரிசிகள் அட்டைகள் 4,30,465. திட்டக்குழு மதிப்பீட்டின்படி வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ள குடும்பங்கள் 01.03.2000-இன்படி 4.50 கோடி. அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைகள் 2.50 கோடி. ஆனால், 2013 உணவு பாதுகாப்புச் சட்டத்தின் படி, தமிழ்நாட்டில் கிராமப்புறத்தில் 2.32 கோடி; நகர்ப்புறத்தில் 1.32 கோடி நபர்கள் உள்ளனர். தமிழ்நாடு அரசு, மத்திய அரசிடமிருந்து வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு எண்ணிக்கை அடிப்படையில் குறைந்த விலையும், மற்றவருக்கு அதிக விலையும் கொடுத்தும் மத்திய தொகுப்பிலிருந்து வாங்கி விலையில்லா அரிசி வழங்கி வருகிறது. மண்ணெண்ணெய் அளவையும் குறைத்து விட்டது. கொரோனா காலத்தில் ஒன்றிய அரசு நபர் ஒன்றுக்கு 5 கிலோ இலவச அரசி வழங்கியது. பின் அந்தியோதயா கார்டுகளுக்கு (57000 கார்டுகளுக்கு) மட்டும் என்றது. தற்போது முழுமையாக நிறுத்திவிட்டது.
தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் 2013 நகர்ப்புறங்களில் 37.79% பேர், கிராமப்புறத்தில் 65.5% பேர் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என உறுதி செய்துள்ளது. தேசிய குடும்ப நல ஆய்வு 2015 - 2016 இன் படி 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளில் 58% இரத்தச்சோகை பாதிக்கப்பட்ட வர்கள் என்று கூறுகிறது. 50 % கிராமப்புற பெண்கள் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறுகிறது. 1996இல் நடந்த உலக உச்சி மாநாட்டில் உணவுப் பாதுகாப்பு என்பது அனைத்து நேரங்களிலும் பாதுகாப்பான, ஆரோக்கிய மான, சுறுசுறுப்பான வாழ்க்கை நடத்துவதற்கான சத்தான உணவு போதுமான அளவு கிடைப்பதே என வரையறை செய்துள்ளது. இந்த வரையறையை ஓரளவேனும் நிறைவேற்றிய, ரேஷன் கடையில் 500 கார்டுகளுக்கு ஒரு கடை அவசியம். கடை இரவு 7 மணி வரை திறந்து இருக்க வேண்டும். தினம் 1 கிலோ வீதம் மாதம் 30 கிலோ அரிசி தரமானதாக வழங்கப்பட வேண்டும். சிறுதானியங்கள், பருப்பு வகைகள் வழங்கப்பட வேண்டும். அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் அனைத்தும் குறைந்த விலையில் தரப்பட வேண்டும். பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும். மண்ணெண்ணெய் குறைந்தது 3 லிட்டர் வழங்க வேண்டும்.