சென்னை,ஜூன் 25- “அக்னிபாதை திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி ஜூன் 27 அன்று காங்கிரஸ் கட்சி நடத்தும் மாநிலம் தழுவிய போராட்டம், ஒன்றிய பாஜக அரசுக்கு எச்சரிக்கையாக அமைய வேண்டும்” என்று மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:- இந்திய ராணுவ பணிகளுக்கு ஆள் சேர்ப்பதில் நீண்டகாலமாக கடைபிடிக்கப்பட்டு வந்த நடைமுறைகளை புறக்கணித்துவிட்டு புதிய நடைமுறை மூலம் 46 ஆயிரம் படைவீரர்களை அக்னி பாதை என்கிற திட்டத்தினை ஒன்றிய பாஜக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான இளைஞர்கள் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வரு கிறார்கள். அக்னி பாதை திட்டத்தின் மூலம் ஒன்றிய அரசு இன்றைய இளைஞர்களை விஷப்பரிட்சைக்கு ஆளாக்கியிருக்கிறது. இந்திய ராணுவத்தில் சேர்ந்து இந்த நாட்டிற்காக கடமையாற்ற வேண்டும் என்ற கனவுகளோடு இருந்த லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்கால கனவு சிதைக்கப் பட்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் அக்னி பாதை திட்டத்திற்கு எதிராக வருகிற ஜூன் 27 திங்கட்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் ஏற்பாடு செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அழகிரி தெரிவித்திருக்கிறார்.