states

குடியரசுத் தலைவராக இருந்து பாஜக கருத்துக்களையே பரப்பினார்

ஸ்ரீநகர், ஜூலை 26  “ராம்நாத் கோவிந்த், தனது குடியரசுத் தலைவர் பதவிக்காலத்தில் பாஜக-வின் அரசியல் கருத்துகளையே பரப்பினார்” என ஜம்மு -காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி விமர்சித்துள்ளார். ராம்நாத் கோவிந்த்தின் பதவிக்காலம் ஞாயிற்றுக்கிழமையோடு (ஜூலை 24) முடிவடைந்ததைத் தொடர்ந்து திரௌபதி முர்மு, திங்களன்று நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவராக பதவியேற்றார். அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.  அதேபோல, குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து விடைபெற்றுச் செல்லும், ராம்நாத் கோவிந்த்திற்கும் தலைவர்கள் தங்களின் வாழ்த்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான மெகபூபா முப்தி டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், “பதவி விலகும் குடியரசுத் தலைவர், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பலமுறை காலில் போட்டு மிதித்துள்ளார். இந்திய அரசியலமைப்பை மதிக்காமல் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது, குடியுரிமைத் திருத்தச் சட்டம் அல்லது சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் மீதான குறிவைக்கப்பட்ட தாக்குதல் போன்ற பாஜக-வின் அரசியல் கருத்துகளையே அவர் நிறைவேற்றினார். குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பல தவறான முன்னுதாரணங்களையே விட்டுச் செல்கிறார்” என்று மெகபூபா முப்தி குறிப்பிட்டுள்ளார்.