states

தீக்கதிர் விரைவு செய்திகள்

இமாச்சல் சட்டப்பேரவைத் தேர்தல் : இன்று வாக்குப் பதிவு

68 தொகுதிகளைக் கொண்ட இமாசச்ல பிரதேச சட்டப்பேரவைக்கு சனிக்கிழமையன்று (நவ.12) தேர்தல் நடைபெறுகிறது. இங்கு ஜெய்ராம் தாக்குர் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரசுக்கும் - பாஜகவுக்கும் கடும் போட்டி நிலவுகிறது. கடந்த 2017-இல் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக 44, காங்கிரஸ் 21, சுயேட்சைகள் 2, சிபிஎம் 1 என வெற்றி பெற்றனர். வாக்கு சதவீதத்தை பொறுத்தவரை பாஜக 48.8 சதவிகிதம், காங்கிரஸ் 41.7 சதவிகிதம், சுயேட்சைகள் 6.3 சதவிகிதம், சிபிஎம் 1.5 சதவிகிதம், பகுஜன் சமாஜ் 0.5 சதவிகிதம், நோட்டா 0.9 சதவீதம் என வாக்குகள் கிடைத்தன. 

நவம்பர்14 முதல் 16 வரை ஜி20 மாநாடு

இந்தோனேசியாவின் பாலியில் வரும் நவம்பர் 14 முதல் 16 வரை நடைபெறும் ‘ஜி20’ மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  உணவு மற்றும் எரிபொருள் பாதுகாப்பு, ஆரோக்கியம், எண்ம மாற்றம் (டிஜிட்டல் மாற்றம்) ஆகிய தலைப்புகளில் 3 அமர்வுகள் நடைபெறும் நிலையில், இம்மாநாட்டின் ஒரு பகுதியாக பிற நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தையை மேற்கொள்கிறார். மாநாட்டின் முடிவில் இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோ-விடம் இருந்து ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை முறைப்படி பிரதமர் மோடி பெற்றுக் கொள்கிறார். பாலியில் வசிக்கும் இந்திய சமூகத்தினருடனும் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்.

‘மக்கள் திரண்டால் மோடியின் பிடிவாதம் சிதறுண்டு போகும்’

“நாடாளுமன்றத்தில் முக்கிய விவாதங்களின் போது எதிர்க்கட்சியினரால் பேச முடிவதில்லை. குறிப்பாக பணமதிப்பு நீக்கம், பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், அக்னிபாதை திட்டம், கல்வான் பள்ளத்தாக்கு விவகாரம் போன்றவைகள் பற்றியெல்லாம் பேச முயன்றபோது எதிர்க்கட்சி எம்.பி.க்களின் மைக் துண்டிக்கப்பட்டது. முக்கியமான விவாதங்களின் போது மைக்குகளை துண்டிப்பது போன்ற வித்தைகளை பயன்படுத்தி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல்களை அடக்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. மக்களின் குரலை வெளிப்படுத்த விடாமல் எங்களை தடுக்கிறது. பிரதமரே, நீங்கள் கவனமாக கேளுங்கள். மக்களின் குரலை உங்களால் ஒடுக்க முடியாது. மக்கள் குரல் எதிரொலிக்கும்போது உங்கள் பிடிவாதம் சிதறுண்டு போகும்” என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார்.

ஞானவாபி மசூதி பாதுகாப்பை நீட்டித்தது உச்ச நீதிமன்றம்!

சிவலிங்கம் உள்ளதாகக் கூறப்படும் ஞானவாபி மசூதிக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை அடுத்த உத்தரவு வரும் வரை நீட்டிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் சூர்ய காந்த், பி.எஸ். நரசிம்ஹா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், உச்ச நீதிமன்றம் கடந்த மே 17ஆம் தேதி பிறப்பித்த இடைக்கால உத்தரவு, அடுத்த உத்தரவு வரும் வரை நடைமுறையில் இருக்கும் என்று கூறியுள்ளனர்.

முலாயம் சிங் தொகுதியில் டிம்பிள் யாதவ் போட்டி

உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்புரி தொகுதி எம்.பி.யாக இருந்த சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் அக்டோபர் 10-ஆம் தேதி காலமானார். இதன்காரணமாக மெயின்புரி தொகுதிக்கு டிசம்பர் 5-ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மெயின்புரி தொகுதி சமாஜ்வாதி கட்சி வேட்பாளராக முலாயம் சிங்-கின் மருமகளும், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷின் மனைவியுமான டிம்பிள் யாதவ் (44)அறிவிக்கப்பட்டுள்ளார். டிம்பிள் யாதவ் இதற்கு முன்பு 2012 முதல் 2019 வரை கன்னோஜ் தொகுதி எம்.பி.யாக இருந்துள்ளார். 

பாஜக கொண்டுவந்தது பணவீக்கமும் வேலையின்மையும்தான்!

“இமாச்சல பிரதேசத்தில் பணவீக்கத்தையும் வேலையின்மையையும் பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. மாறாக, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 10 நாட்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வரும். 1 லட்சம் பேருக்கு வேலை வழங்கும். அந்த மாற்றத்திற்கான நேரம் தற்போது வந்துள்ளது” என்று சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகேல் கூறியுள்ளார்.

பஞ்சாப் அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

தில்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகரித்து வரும் காற்றுமாசு குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆர்சி), பஞ்சாப் தலைமைச் செயலாளர் விஜய் குமார் ஜான்ஜுவா மற்றும் மாநில அரசு அதிகாரிகளுடன் காணொலி மூலம் உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தை நடத்தியது. வட இந்தியாவில், குறிப்பாக பஞ்சாபில் வேளாண் கழிவுகளை எரிக்கும் சம்பவங்களால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து ஆணையம் கடுமையான கவலையை வெளிப்படுத்தியது. அப்போது, பஞ்சாபில் வேளாண் கழிவுகளை எரிப்பதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் பஞ்சாப் அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டது.

வரலாற்றைப் பேசினால் இந்து விரோதியா?

“இந்து என்ற சொல் பல எழுத்தாளர்களின் கட்டுரைகளில், மோசமான அர்த்தத்தைக் கொண்டிருக்கிறது. அதனால், இந்த விவகாரத்தில் விவாதம் தேவை என்று நான் கூறினேன். எனது கருத்துகள் விக்கிபீடியாவில் உள்ள கட்டுரைகள், அகராதிகள் மற்றும் வரலாற்றாசிரியர்களின் எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால், சிலர் என்னை இந்து விரோதியாக சித்தரிக்க முயல்கின்றனர். எனக்கு அவப்பெயரை ஏற்படுத்தவும், எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும் திட்டமிட்ட சதி நடக்கிறது. இதுதொடர்பாக பொதுமக்கள் மனதில் குழப்பம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக எனது கருத்துகளை திரும்ப பெற்றுக் கொள்கிறேன். எனது கருத்துகளால் யாரேனும் புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ சதீஷ் ஜர்கிஹோலி குறிப்பிட்டுள்ளார். 

16 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை 

கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், திருவாரூர், அரியலூர், நீலகிரி, மயிலாடுதுறை, செங்கல்பட்டு, திருச்சி, கரூர், சேலம், பெரம்பலூர்  மாவட்டங்களின் பள்ளி,கல்லூரிகளுக்கு சனியன்று விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். 

அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

அறங்காவலர் நியமன விண்ணப்பத்தில் அரசியல் தொடர்பு குறித்த கேள்வியை சேர்க்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகப்பேறு விடுப்பு எடுத்த இந்திய பெண் ஊழியரை பணியிலிருந்து நீக்கிய மெட்டா நிறுவனம்

புதுதில்லி,நவ.11- மகப்பேறு விடுப்பு எடுத்த இந்திய பெண் ஊழியரை பணியிலிருந்து நீக்கியுள்ளது மெட்டா நிறுவனம். ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா 11 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இதில் இந்தியாவைச் சேர்ந்த அனேகா படேல் என்ற பெண்ணும் ஒருவர் ஆவார். இவர் மகப்பேறு விடுப்பில் சென்றிருந்த நிலையில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்தியாவைச் சேர்ந்த அவர் மெட்டா நிறுவனத்தின் கம்யூனிகேஷன் பிரிவு மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். அதிகாலை 3 மணி அளவில் எழுந்து மெயிலை  பார்த்த போது பணிநீக்கம் செய்யப்பட்டுள் ளதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.  இது குறித்து லிங்க்டு இன் தளத்தில் அவர்,  “நான் எனது மெயிலை செக் செய்து கொண்டிருந்தேன். அதே நேரத்தில் சக ஊழியர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன்.  நாங்கள் எல்லோரும் என்ன நடக்கும்? நாங்கள் பணியில் இருப்போமா? என்ற கேள்விகளுடன் மெயிலை செக் செய்து கொண்டு இருந்தோம். பணி நீக்க நடவடிக்கைக்கு ஆளான ஊழியர்கள் அனைவருக்கும் ஆட்டோமேட்டட் மெயில் வந்து கொண்டிருந்தது.  எனக்கும் அந்த மெயில் வந்தது. அதை பார்த்து எனது நெஞ்சம் நொறுங்கியது.இந்த நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும் என்பது எனது பெருங்கனவு. சுமார் 2.5 ஆண்டுகள் அங்கு பணி செய்ததில் எனக்கு மகிழ்ச்சி. மறக்க முடியாத தருணங்கள் நெஞ்சில் நிறைந்துள்ளன” என்று பதிவிட்டுள்ளார். 

சென்னை-சேலம் ரயில்  மேல்மருவத்தூரில்  நின்று செல்லும் 

செங்கல்பட்டு, நவ. 11- சென்னை எழும்பூரிலிருந்து  சேலம் செல்லும் ரயில் தைப்பூசத்தை யொட்டி மேல்மருவத்தூரில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சேலத்திலிருந்து சென்னை எழும்பூருக்கு ( எண்.22154) விரைவு ரயில் இயங்கி வருகிறது. அதேபோல் சென்னை எழும்பூரிலிருந்து சேலத்திற்கும் விரைவு ரயில் (எண் 22153) இயக்கப்படுகிறது. தைப்பூசத்தை முன்னிட்டு, இந்த  இரண்டு மார்க்கத்தில் இயங்கும்  விரைவு ரயில்களும், மேல்மருவத்தூ ரில் 47 நாட்களுக்கு மட்டும் தற்காலி கமாக நின்று செல்லும் என்று தெற்கு  ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், டிசம்பர் 22 ஆம் தேதி  முதல், அடுத்த வருடம் பிப்ரவரி  6 ஆம் தேதி வரை மேல்மருவத்தூரில் இந்த இரண்டு ரயில்களும் இரு நிமி டங்கள் மட்டும்  நின்று செல்லும். சென் னையில் இருந்து சேலம் செல்லும் விரைவு ரயில், மதியம் 1:13 க்கு வந்து  1:15க்குக் கிளம்பும். சேலத்திலிருந்து  சென்னை நோக்கி செல்லும் விரைவு ரயில், மதியம் 1:55 க்கு வந்து, 1:57க்குக்  கிளம்பும். கோவிலுக்கு வரும் பக்தர்க ளின் வசதிக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

விரைந்தது  தேசிய மீட்பு படை

சென்னை, நவ.11- கனமழை காரணமாக முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள் வதற்காக நான்கு மாவட்டத்திற்கு தேசிய மீட்புப் படை வீரர்கள் விரைந்து  சென்றுள்ளனர். வடகிழக்கு பருவ மழையை யொட்டி, கடந்த சில நாள்களாக தொடர்  கனமழை பெய்து வருகிறது. மேலும்,  வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலு வடைந்துள்ளதால் தமிழகத்தில் நவம்பர் 14 ஆம் தேதி வரை கனமழை  இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள் ளது. மேலும், தமிழகத்தில் வட தமிழக கடலோர மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை மிக கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டதின் பேரில்  அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை 4 குழுக்களின் வீரர்கள் தேனி, திண்டுக்கல், நீலகிரி, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டத்திற்கு தலா 22 பேர் கொண்டதேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் படை பிரிவின் கமாண்டன்ட் அருண் அவர்கள் உத்தரவின் பேரில் விரைந்து சென்றுள்ளனர்.

 ரூ.3,700 கோடி சொத்துக்கள் மீட்பு:  அமைச்சர் தகவல்

நெல்லை, நவ .11- திருநெல்வேலியில்  செய்தியாளர் களை சந்தித்த இந்துசமய அறநிலை யத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறுகையில், “கடந்த ஆட்சியில் திட்ட மிடப்படாமல் கட்டப்பட்ட தமிழகத் தில் உள்ள 11 திருமேனி பாதுகாப்பு  மையங்களிலும் காவலர்கள் நியமிப் பதில் இருந்த சிக்கலை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் திருமேனி பாதுகாப்பு மையங்கள் செயல்படும்.  தமிழகம் முழுவதும் அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.3,700 கோடி அளவி லான சொத்துக்கள் தற்போது வரை மீட்கப்பட்டுள்ளது” என்றார்.

தட்டச்சு தேர்வு தள்ளிவைப்பு 

சென்னை, நவ. 11- வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்துள்ளதால் தமிழ்நாட்டில் அடுத்த சில நாள்களுக்கு கனமழை பொழியும் என சென்னை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து 12ஆம் தேதி காலை தமிழகம் புதுச்சேரி கடற்கரையை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தமிழகம், புதுவை,  காரைக்காலில் வரும் 15ஆம்  தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை  ஆய்வு மையம் கூறி யுள்ளது. கனமழை காரணமாக தமிழ்நாட்டில் இன்று 25க்கும்  மேற்பட்ட மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட் டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் நவம்பர் 12 மற்றும் 13ஆம்  தேதிகளில் தட்டச்சு தேர்வு கள் நடைபெற இருந்தது. இந்த தேர்வுகள் ஒத்தி வைக் கப்பட்டுள்ளதாக தொழில் நுட்ப கல்வி இயக்கத்தின் தேர்வு வாரியத் தலைவர் அறிவித்துள்ளார். நவம்பர் 11,12 ஆகிய  தேதிகளில் நடைபெற விருந்த தேர்வுகள் நவம்பர் 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது.

புறக்கணிக்கிறது அதிமுக 

சென்னை,நவ.11- உயர் வகுப்பினருக்கான 10  விழுக்காடு இடஒதுக்கீடு தொடர் பான உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆலோசிக்க சனிக்கிழமையன்று (நவ.12) அனைத்துக்கட்சி கூட்டம் நடக்க உள்ளது. இக்கூட்டத்தை அதிமுக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. அதற்கான கார ணத்தை அந்த கட்சி கூறவில்லை. பாஜகவுக்கு எதிராக செயல்படக் கூடாது என்பதை மறைமுகமாக உணர்த்தும் வகையில் அதிமுக  இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள தாக செய்திகள் தெரிவிக்கின்றன.