states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தாய்லாந்தில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகம் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 31 பேர் உயிரிழந்திருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துப்பாக்கியால் கண்மூடித்தனமாகச் சுட்டவர் காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரியாவார். கொல்லப்பட்டவர்களில் இதுவரை 26 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 23 குழந்தைகள், இரண்டு ஆசிரியர்கள் மற்றும் ஒரு காவல்துறை அதிகாரி கொல்லப்பட்டனர் என்று அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் இருந்து பொது வாக்கெடுப்பு மூலம் ரஷ்யாவோடு இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு இடைக்கால தலைவர்கள் மற்றும் ஆளுநர்களை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் நியமித்துள்ளார். ஏற்கனவே அந்தப் பகுதிகளின் நிர்வாகப் பொறுப்பில் இருந்தவர்களே மீண்டும் வந்துள்ளனர். ரஷ்யாவுடன் இணைய வேண்டும் என்று இவர்கள் தொடக்கத்தில் இருந்து வலியுறுத்தி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் எரிபொருள் விலைகளை அதிகரிக்கும் முடிவை எடுத்த ஹைதி நாட்டின் பிரதமர் ஏரியல் ஹென்றி பதவி விலக வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தலைநகர் போர்ட்-அ-பிரின்சின் தெருக்களில் ஆயிரக்கணக்கானோர் “பிரதமரே வெளியேறு” என்ற வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளுடன் வலம் வருகிறார்கள். போராட்டங்களை முடக்கும் நோக்கத்துடன் கண்ணீர்புகைக் குண்டுகளை வீசி காவல்துறையினர் செயல்பட்டு வருகிறார்கள்.

;