states

img

அவசரத்திற்கு போலீசாரை அழைத்து மருந்துகள் வாங்கிக் கொள்ளலாம்... ‘புளூ மெடிசின்’ செயலி மூலம் மருத்துவரிடமும் உரையாடலாம்.... கேரள அரசின் அசத்தல் திட்டம்....

திருவனந்தபுரம்:
கேரள மக்கள், தங்களின் அவசரத் தேவைக்கு மருந்துகள் வாங்க காவல்துறையினரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் மேலும் கூறியிருப்பதாவது: 

கேரளத்தில் கொரோனா தொற்றுப் பரவலை தடுக்கும்   வகையில், முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் வெளியே செல்லாமல் மருத்துவ வசதியைப் பெற வழி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக கேரள காவல்துறையின் ‘புளூ மெடிசின்’ என்ற செயலியின் சேவையை பொதுமக்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். மருத்துவமனைகளுக்கு செல்லாமலேயே பொதுமக்கள் இந்த செயலி மூலம் தொடர்பு கொண்டு மருத்துவர்களிடம் இருந்து ஆலோசனை பெறலாம். கொரோனாவுக்கு மட்டுமின்றி மற்ற நோய்களுக்கும் இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். வீடியோ மூலம் நோயாளியை டாக்டர்கள் பரிசோதித்து தேவையான மருந்துகளைப் பரிந்துரைப்பார். கூடுதல் சிகிச்சை  தேவைப்பட்டால் மட்டும் மருத்துவமனைக்கு சென்று கொள்ளலாம். ‘புளூ மெடிசின்’ செயலி மூலம் கிடைக்கும் இ-பாஸையும் இதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.அத்துடன் அவசர நேரங்களில் பொதுமக்கள் மருந்து கடைகளில் இருந்து மருந்துகள் வாங்க போலீசாரின் உதவியையும் நாடலாம். இதற்காக ‘112’ என்ற எண்ணில் அவர்களை அழைக்கலாம்.இவ்வாறு முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

;