states

img

பாஜக தலைவர்களுக்கு கேரள அமைச்சர் எம்.பி.ராஜேஷ் பதிலடி!

கேரளாவை குறித்து அவதூறு பரப்பும் பாஜக தலைவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அம்மாநில கலால் துறை அமைச்சர் எம்.பி.ராஜேஷ் கேரள அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டுள்ளார்.
மங்களூரில், கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வரவில்லை என்றால், கர்நாடகம் கேரளாவை போல் பாதுகாப்பற்ற மாநிலமாக மாறும்" என்று சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசி இருந்தார். 
இதற்கு, கேரளாவைப் பற்றி குறைகூற என்ன இருக்கிறது? மதம் மற்றும் சாதி அடிப்படையிலான பிளவுகள் இல்லாத மாநிலமாக கேரளா உள்ளது; இங்கு ஒருபோதும் பாஜக கால் ஊன்ற முடியாது என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் பதிலடி கொடுத்துள்ளார்.
தற்போது அமித்ஷாவை தொடர்ந்து பாஜக தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ், கம்யூனிஸ்ட் ஆட்சி தான், கேரளாவின் மிகப்பெரிய தவறு; கேரளாவில் வன்முறையை தவிர்த்து வேறு என்ன முன்னேற்றம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற பாஜக தலைவர்களின் பொய் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், கேரள அமைச்சர் எம்.பி.ராஜேஷ் கேரள அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டுள்ளார்.

"1) மக்கள் தொகை 0.71% மட்டுமே உள்ள கேரளாவில் வறுமை  மிகக் குறைவு என்று நிதி ஆயோக் அறிக்கை தெரிவித்துள்ளது. ஆனால், உங்களால் தேசிய வறுமையின் விகிதத்தைக் கூற முடியுமா?
2. கேரள மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 12%. ஆனால், நாட்டின் ஜிடிபி 6% மட்டுமே.
3. ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பு குறித்த 6வது உலக பெஞ்ச் மார்க் ஆய்வு, உலகின் முதல் 5 இன்குபேட்டர்களில் கேரளாவை பட்டியலிட்டுள்ளது. நம் நாட்டிலிருந்து கேரளா மட்டுமே இந்த பட்டியலில் தேர்வாகியுள்ளது என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும்.
4. சர்வதேச ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பு அறிக்கை 2022 இன் படி, திறமைகளை ஊக்குவிப்பதில் ஆசியாவின் சிறந்த செயல்திறன் கொண்ட இடங்களின் பட்டியலில், கேரளா உலகளவில் 4வது இடத்தில் உள்ளது, 
5. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற தலைமைச் செயலாளர்கள் கூட்டத்தில், தேசிய அளவில் கேரளவின் ”இயர் ஆஃப் எண்டர்பிரைஸ்’ திட்டத்தை சிறந்த திட்டம் என்று ஏற்றுக்கொண்டுள்ளது. ஒரு வருடத்திற்குள், கேரளாவில் 1.14 லட்சம் MSMEக்கள் தொடங்கப்பட்டன. அதே நேரத்தில் தேசிய அளவில் மூடப்பட்ட MSMEக்களின் எண்ணிக்கை 7995 ஆகும்.
6.உங்கள் அரசாங்கத்தின் பொருளாதார ஆய்வின்படி, கேரளாவின் குழந்தைகள் இறப்பு விகிதம் 1000 பிறப்புகளுக்கு, 4.4 ஆக உள்ளது. இதுவே உ.பி.யில் 50.4 ஆக உள்ளது. எது தவறு?
7. நிதி ஆயோக் அறிக்கையின் படி, பிரசவத்தின் போது தாயின் இறப்பு விகிதம் கேரளாவில், 1 லட்சம் பிரசவத்திற்கு வெறும் 19 ஆக மட்டுமே உள்ளது. நாட்டிலேயே கேரளா இதில் சிறப்பாக செயல்படுகிறது. இதுதான் கேரளா செய்த தவறா?
8. பொருளாதார ஆய்வின்படி, உயர்கல்வியில் கேரளாவின் ஜிஇஆர், ‘கம்யூனிஸ்ட் ஆட்சியில்’ 38.8% லிருந்து 43.2% ஆக உயர்ந்துள்ளது. உ.பி.யில் இது 23.2% மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
9. கேரளாவில் 11-ஆம் வகுப்பில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் 85% ஆக உள்ளது; தேசிய ஜிஇஆர் என்ன என்று சொல்ல முடியுமா?
10. எல்லாவற்றிற்கும் மேலாக, பெருந்தொற்று காலத்தில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு மற்றும் சிகிச்சையின்மை காரணமாக பொதுமக்கள் தெருக்களில் இறக்காத ஒரே மாநிலம் கேரளா.
மேலும் இதுபோன்ற சாதனைகளின் பட்டியலை நீங்கள் விரும்பினால், தயவுசெய்து எனக்குத் தெரியப்படுத்தவும்; சாதனை பட்டியல் தயாராக உள்ளது.”  

எவ்வாறு பாஜகவினருக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.