states

img

செப்.30 க்குள் 100 சதவிகிதம் முதல் டோஸ் தடுப்பூசி... கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் தகவல்...

திருவனந்தபுரம்:
கேரளத்தில் தடுப்பூசி இயக்கம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளதாக கூறிய அம்மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், மாதம் 88 லட்சம் டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது என்றும், இம்மாதம் 30 ஆம் தேதிக்குள் நூறு சதவிகிதம் முதல் டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டுவிடும் எனவும் தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்ட் 1 முதல் 31 வரை 88,23,524 டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. இதில் 70,89,202 பேருக்கு முதல் டோஸும் 17,34,322 இரண்டாவது டோஸும் தடுப்பூசி போடப்பட்டது. இந்த மாதம் அதிக விடுமுறைகள் இருந்தபோதிலும், சுகாதார ஊழியர்கள், மற்ற அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் குழுவினரால் இந்த இலக்கை அடைய முடிந்தது. இலக்கை அடைய கடுமையாக உழைத்த அனைவருக்கும் அமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.செய்தியாளர்களிடம் அமைச்சர் மேலும் கூறியதாவது:

கேரளத்தின் வேண்டுகோளின் பேரில், ஒன்றிய அரசு அதிக தடுப்பூசிகளை அனுமதித்தது. 70,35,940 தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்தது, இதில் 58,99,580 கோவிஷீல்டு மற்றும் 11,36,360 டோஸ் கோவாக்ஸ் ஆகியவை அடங்கும். மேலும் சிஎஸ்ஆர் நிதியை பயன்படுத்தி கேஎம்எஸ்சிஎல் மூலம் 2.5 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியும் கிடைத்தது. இதன் மூலம், இந்த மாதத்தில் மட்டும் 72,85,940 டோஸ் தடுப்பூசி அரசுக்கு கிடைத்தது. கூடுதலாக, கேஎம்எஸ்சிஎல் மூலம் 10 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை அரசு வாங்கியுள்ளது.

முதலமைச்சரின் அறிவுறுத்தலின் படி கேரளத்தில் தடுப்பூசி இயக்கம் இம்மாதம் 9 ஆம் தேதி தொடங்கியது. தடுப்பூசி பிரச்சாரம் தடுப்பூசியை அதிகரிக்கவும் முடிந்தவரை பலருக்கு தடுப்பூசி கொடுக்கவும் உதவியது. தடுப்பூசி இயக்கம் பல்வேறு நிலைகளில் மேற்கொள்ளப்பட்டது. 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் படுக்கை நோயாளிகளுக்கும் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்க சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஆசிரியர்கள், இணைநோய் உள்ளவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. ஆசிரியர் தினமான செப்டம்பர் 5 ஆம் தேதிக்குள் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடப்படும். செப்டம்பர் இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசியின் முதல் டோஸ் கொடுக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.
2021 ஆம் ஆண்டின் கணிக்கப்பட்ட மக்கள்தொகையின் படி, 60.04 சதவிகிதத்தினருக்கு முதல் டோஸும், 22.02 சதவிகிதம் பேருக்கு இரண்டாவது டோஸும் கொடுக்கப்பட்டது. 18 வயதிற்கு மேற்பட்ட 74.06 சதவிகிதம் பேருக்கு முதல் டோஸும், 27.16 சதவிகிதம் பேருக்கு இரண்டாவது டோஸும் கொடுக்கப்பட்டது. சுகாதார பணியாளர்கள் மற்றும் கோவிட் முன்னணி போராளிகளுக்கு 100 சதவிகிதம் முதல் டோஸும் 86 சதவிகிதம் இரண்டாவது டோஸும் வழங்கப்பட்டது. 45 வயதிற்கு மேற்பட்டவர்களில் 91 சதவிகிதம் பேருக்கு முதல் டோஸும், 46 சதவிகிதம் பேருக்கு இரண்டாவது டோஸும் கொடுக்கப்பட்டது. 18 முதல் 44 வயதிற்குட்பட்ட 51 சதவிகிதம் பேருக்கு முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் கூறினார்.

;