திருவனந்தபுரம் திருவனந்தபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு கேரள மாநில மூத்த குடிமக்கள் ஆணையத்தின் தலைவராக கே.சோமபிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார், அமரவிலா ராமகிருஷ்ணன், ஈ.எம்.ராதா, கே.என்.கே. நம்பூதிரி மற்றும் பேராசிரியர் லோபஸ் மேத்யூ ஆகியோர் ஆணைய உறுப்பினர்களாக பொறுப்பேற்றனர். இதன்மூலம் மூத்த குடிமக்கள் நலத்துறை யில் மாநில அரசு முன்வைத்த ஒரு பெரிய கனவை நனவாகி உள்ளது. மாநிலங்களவை உறுப்பினராகவும், கொல்லம் மாவட்ட பஞ்சாயத்து தலைவராகவும் பணியாற்றிய கே.சோமபிரசாத், ஐந்து பேர் கொண்ட ஆணையத்தின் தலைவராக பொறுப் பேற்றுள்ளார். திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலகத்தின் தர்பார் மண்டபத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவை உயர்கல்வி மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர் டாக்டர் ஆர்.பிந்து தொடங்கி வைத்தார். அமரவிலா ராமகிருஷ்ணன் மூத்த குடிமக்கள் நண்பர்கள் நல சங்கத்தின் பொதுச் செயலாளர். இ.எம்.ராதா மகளிர் ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர். கே.என்.கே. நம்பூதிரி (கே.என். கிருஷ்ணன் நம்பூதிரி) ஒரு எழுத்தாளர் மற்றும் மூத்த குடிமக்கள் சேவை மன்றத்தின் செயல் தலைவர் ஆவார், மேலும் பேராசிரியர் லோபஸ் மேத்யூ முன்னாள் கல்லூரி ஆசிரியர், கோட்டயம் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் மற்றும் CUSAT மற்றும் MG பல்கலைக்கழகங்களின் சிண்டிகேட் உறுப்பினர் ஆவார். புறக்கணிப்பு, சுரண்டல் மற்றும் ஆதரவின்மை உள்ளிட்ட முதியோர் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்த வளர்ந்து வரும் கவலைகளை அவசரமாக நிவர்த்தி செய்வதே இந்த ஆணையத்தின் நோக்கம். முதியோர்களுக்கான ஆணையம், முதியோர்களின் மறுவாழ்வை எளிதாக்குவதற்கும், அவர்களின் திறன்களை பொது மக்களுக்கு பயனுள்ளதாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொ ள்வதற்கும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்வதற்கும் நிறுவப்பட்டது. இந்த ஆணையம் நீதித்துறை அதிகாரங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. முதியோர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்குவதற்கு ஆணையம் பொறுப்பாகும் என்று அமைச்சர் ஆர். பிந்து கூறினார்.