சமக்ரா சிக்சா நிதியை (ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம்) ஒன்றிய அரசு விடுவிக்க மறுப்பதன் மூலம் கல்வியில் முன்னேறியுள்ள தமிழ்நாடு, கேரளம் மாநிலங்களை மோடி அரசு தண்டித்துள்ளது. பன்மொழித் தேவை என்ற பெயரில் இந்தியைத் திணிப்பதற்கு ஏதுவாக பிஎம்ஸ்ரீ திட்டத்தை ஏற்க வேண்டுமென மறைமுகமாக அச்சுறுத்துகிறது. சமக்ரா சிக்சா என்பது (ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம்), 12-ஆம் வகுப்புக்கு முந்தைய வகுப்பு வரை சமமான-தரமான கல்வியை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டதாகும். சமக்ரா சிக்சா சர்வ சிக்சா அபியான், ராஷ்ட்ரிய மத்யமிக் சிக்சா அபியான், ஆசிரியர் கல்வி திட்டத்தில் உலகளாவிய அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது, தரம் மற்றும் ஆசிரியர் கல்வி நிறுவனங்களை வலுப்படுத்துதல் ஆகியவை அடங்கும். சமக்ரா சிக்சா திட்டத்தின் குறிக்கோள்கள் பள்ளிகளை வலுப்படுத்துதல், தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் முயற்சிகள், பள்ளி செல்லாத குழந்தைகளை கண்டறிந்து அவர்களின் வயது அடிப்படையில் சேர்த்து சிறப்பு பயிற்சி வழங்குவது, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பெயரில் பள்ளிகள் மற்றும் விடுதிகள் கட்டுவது. இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான குழந்தைகளின் உரிமைச் சட்டம் 2009ஐ அமல்படுத்துவது உள்ளிட்ட பத்து நோக்கங்களைக் கொண்டதாகும். ஆனால், ஒன்றிய அரசு இப்போது பிரதமர் ஸ்ரீ திட்டத்தை அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென மறைமுகமாக அச்சுறுத்தி பணிய வைக்க முயற்சி மேற்கொண்டுவருகிறது. அதனொரு பகுதியாக சமக்ரா சிக்சா நிதியை வழங்குவதற்கு தாமதித்து வருகிறது. கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு, கேரளம், பஞ்சாப், மேற்கு வங்கம் மற்றும் தில்லி ஆகிய எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு சமக்ரா சிக்சா திட்டத்தின் (எஸ்எஸ்ஏ) நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது. கற்றலில் நிர்ணயிக்கப்பட்டுள்ள 20 அம்சங்களில், அனைத்திலும் முன்னணியில் கேரளம் உள்ளது; 19 அம்சங்களில் முன்னணியில் உள்ளது தமிழ்நாடு. ஆனால் இந்தச் சாதனைக்காக இவை வஞ்சிக்கப்படுகின்றன. பிஎம்ஸ்ரீ திட்டம் பிஎம்ஸ்ரீ திட்டம் தேசியக் கல்விக் கொள்கை 2020-ஐ செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும். இந்தப் பள்ளிகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முன்மாதிரிப் பள்ளிகளாகச் செயல்படும். குழந்தைகளின் மாறுபட்ட பின்னணி, அவர்களின் பன்மொழித் தேவைகள், அவர்களது பல்வேறு கல்வித் திறன்களைக் கவனிக்கும். பள்ளிகளில் உயர்தரக் கல்வியை வழங்கும். இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயம் குழந்தைகளின் “பன்மொழித் தேவைகள்” என்ற வார்த்தையைத் தான். அதாவது பன்மொழித் தேவை என்ற பெயரில் இந்தியைத் திணிப்பது தான் நோக்கமே தவிர வேறில்லை. பாதிக்கப்பட்டுள்ள கல்விச் சூழல் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்விக்கான திட்டத்திற்கான நிதியை ஒன்றிய அரசு வழங்க தாமதிப்பதால், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள மாணவர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. இவர்களுக்கான கட்டணம் சமக்ரா சிக்சா நிதியின் மூலமே வழங்கப்படுகிறது. ஆசிரியர்களுக்கு மாதம் தோறும் சம்பளம் கிடைப்பதில் தாமதமும் ஏற்பட்டுள்ளது. சமக்ரா சிக்சா நிதியை விடுவிக்க மறுப்பதன் மூலம், சமூகம் மற்றும் பாலின இடைவெளிகளைக் குறைத்தல், பள்ளிக் கல்வியில் சமத்துவம் மற்றும் உள்ளடக்கத்தை உறுதி செய்தல், தொழிற்கல்வியை ஊக்குவித்தல், பள்ளி அடிப்படைக் கட்டமைப்புகளை உறுதி செய்தல் மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல் போன்ற முக்கிய நோக்கங்களை பூர்த்தி செய்வதில் முன்னணியில் இருக்கும் மாநிலங்களை ஒன்றிய அரசு தண்டித்துள்ளது.