states

மகாராஷ்டிரா - நவ. 20; ஜார்க்கண்ட் - நவ.13, 20

புதுதில்லி, அக். 15 - மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கான சட்டப்  பேரவைத் தேர்தல் அட்டவணை யை, இந்திய தேர்தல் ஆணையம் செவ்வாயன்று வெளியிட்டது. இதன்படி, மகாராஷ்டிரா மாநில  சட்டப்பேரவைக்கு நவம்பர் 20-ஆம் தேதி ஒரே கட்டமாகவும், ஜார்க் கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வும் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், நவம்பர் 13 அன்று வய நாடு, நான்டெட் ஆகிய 2 மக்க ளவைத் தொகுதிகள் மற்றும் 15 மாநிலங்களில் காலியாக இருக்கும் 48 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அனைத்து மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் ஒரே நாளில், நவம்பர் 23 அன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மகாராஷ்டிரா சட்டப்பேரவை யின் பதவிக்காலம் நவம்பர் 26  அன்றும், ஜார்க்கண்ட் சட்டப் பேரவையின் பதவிக்காலம் 2025  ஜனவரி 5-ஆம் தேதியும் முடிவடை கிறது. இதையொட்டி குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாக சட்டப்பேர வைத் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்பதால், அதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் இறங்கியது. இந்நிலையில், செவ்வாயன்று பிற்பகல் தில்லியில் செய்தியாளர் களைச் சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார், எஸ்.எஸ். சந்து ஆகியோர், மகா ராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டப்பேர வைத் தேர்தல் தேதிகளை அறி வித்தனர்.

மகாராஷ்டிரா

இதன்படி மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நவம்பர் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. வேட்பு மனுத் தாக்கல் அக்டோபர் 22 துவங்கி அக்டோபர் 29 வரை நடைபெறுகிறது. அக்டோபர் 30 அன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. வேட்பு மனுக்களைத் திரும்பப்பெற நவம்பர் 4 கடைசி நாளாகும். அதைத் தொடர்ந்து, நவம்பர் 20 அன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஜார்க்கண்ட்

மொத்தமே 81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப் பேரவைக்கு நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 என இரண்டு கட்டங் களாக தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது. இதில், முதற்கட்டத்தில் 43 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டத்தில் 38 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. முதற் கட்டத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் அக்டோபர் 18 அன்றும், இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் அக்டோபர் 22 அன்றும் துவங்குகின்றன. 

வயநாடு, நான்டெட் மக்களவைத் தொகுதிகள் ; 48 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!

ஜார்க்கண்ட்டின் 43 தொகுதிகளுக்கு நடைபெறும் முதற்கட்டத் தேர்தலின் போது, கேரள மாநிலம் வயநாடு, மகாராஷ்டிராவின் நான்டெட் ஆகிய 2 மக்களவைத் தொகுதிகள் மற்றும், அசாம் (5), பீகார் (4), சத்தீஸ்கர் (1), குஜராத்  (1), கர்நாடகம் (3), கேரளம் (2), மத்தியப் பிரதேசம் (2), மேகாலயா  (1), பஞ்சாப் (4), ராஜஸ்தான் (7), சிக்கிம் (2), உத்தரப்பிரதேசம் (9), உத்தரகண்ட் (1), மேற்குவங்கம் (6) என மொத்தம் 15 மாநிலங்களில் காலியாக இருக்கும் 48 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில்  7 எம்.எல்.சி.க்கள் பதவியேற்பு

சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக, அம்மாநில சட்ட மேலவைக்கு (பாஜக சார்பில் 3, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் சார்பில் தலா 2 என) 7 உறுப்பினர்களை ஆளுநர் நியமித்தார். அவர்களுக்கு செவ்வாய்க்கிழமை விதான் பவனில்  மகாராஷ்டிர சட்டப் பேரவை துணைத் தலைவர் நீலம் கோர்ஹே  பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.