ராஜஸ்தான் மாநிலத்தில் முத்திரைத்தாள்கள் பயன்படுத்தி சிறுமிகள் ஏலம் எடுக்கப்பட்டது 2005-ல் பாஜக ஆட்சியில் தான் என்று அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம், பில்வாரா மாவட்டத்தில் கடன் பிரச்சனை, சொத்து தகராறுகளை தீர்ப்பதற்காக ஜாதி பஞ்சாயத்துகள் நடத்தப்படுகிறது. கடனை திருப்பி செலுத்தாதவர்கள், முத்திரைத்தாள்கள் மூலம் தங்கள் வீட்டில் உள்ள 8 முதல் 18 வயது சிறுமிகளை ஏலம் விடப்பட்டுள்ளனர். ஏலத்தை தடுத்தால், சிறுமிகளின் தாய்மார்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். சிறுமிகளை ஏலம் எடுப்பவர்கள் உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், மும்பை, தில்லி ஆகிய இடங்களில் சிறுமிகளை அழைத்துச்சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்துகின்றனர். இந்த செய்தி, செய்தித்தாள்களில் வெளியானதை அடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் இதுபோன்ற கொடூரமான சம்பவங்களைத் தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நான்கு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய ராஜஸ்தான் தலைமைச் செயலருக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த நிலையில், இது தொடர்பாக ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் கூறியதாவது:
"முத்திரைத்தாள்கள் பயன்படுத்தி சிறுமிகள் ஏலம் எடுக்கப்பட்டது 2005-ல் பாஜக ஆட்சியில் தான். 2019-ல், நாங்கள் அதை அம்பலப்படுத்தினோம். இந்த சம்பவம் தொடர்பாக 21 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர், அவர்களில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஒருவர் தலைமறைவானார். மீட்கப்பட்ட குழந்தைகளில், 2 குழந்தைகள் இறந்தனர், மீதமுள்ளவர்கள் தங்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.