பினாமி சட்டத்தின் கீழ் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவாருக்கு தொடர்புடைய ரூ.1000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துக்களை வருமான வரித்துறை பறிமுதல் செய்திருந்த நிலையில், அந்த சொத்துகள் இப்போது விடுவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய பாஜக அரசு தன்னுடைய அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற மத்திய முகமைகளை ஏவி சோதனைகளை நடத்தி எதிர்க்கட்சியினரை சிறையில் அடைக்கும் வேலையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது.
கடந்த 2021-ஆம் ஆண்டு சிவசேனா-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அஜித்பவார் இருந்தபோது, அஜித்பவார் மற்றும் அவரது குடும்பத்தினருக்குத் தொடர்புடைய பல இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருந்தனர். அவர் பினாமி சொத்துக்களை வைத்திருந்ததாகச் சொல்லி மகாராஷ்டிரா சதாரா என்ற பகுதியில் உள்ள அவரது சர்க்கரை ஆலை, தில்லியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு, கோவாவில் உள்ள ரிசார்ட் உள்ளிட்ட பல சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனையடுத்து, அஜித்பவார் பாஜக கூட்டணியில் இணைந்தார். விசாரணை அமைப்புகளின் வளையத்துக்குள் சிக்கியவர்கள் பாஜகவில் ஐக்கியமாகிவிட்டால் அல்லது இணைந்து செயல்படச் சம்மதித்துவிட்டால் நடவடிக்கை நின்றுவிடும் என்பதற்கு அஜித்பவார் வழக்கும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.
மகாராஷ்டிராவில் சமீபத்தில் தான் தேர்தல் நடந்து முடிந்தது. அதில், பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து பாஜக கூட்டணி கடந்த வியாழக்கிழமை பதவியேற்றது.
பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகப் பதவியேற்ற நிலையில், ஹிண்டே மற்றும் அஜித்பவார் துணை முதல்வர்களாகப் பதவியேற்றனர்.இதற்கிடையே மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவாருக்கு தொடர்புடைய சுமார் ரூ.1000 கோடி சொத்துகளை வருமான வரித்துறை இப்போது விடுவித்துள்ளது.