போபால்:
கொரோனா வைரஸ் தொற்று குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து பீதியை ஏற்படுத்தியதாக மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், மாநில காங்கிரஸ் தலைவருமான கமல்நாத் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.போபால் பாஜக மாவட்டத் தலைவர் சுமித் பச்சூரி மற்றும் பாஜக எம்எல்ஏ-க்களான விஸ்வாஸ் சாரங் மற்றும் ராமேஸ்வர் சர்மா ஆகியோர் அளித்த புகாரின் அடிப்படையில், கமல்நாத் மீது பிரிவு 188 மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-இன் பிரிவு 54 ஆகியவற்றின் கீழ் இந்த எப்ஐஆர் போடப்பட்டுஉள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் அண்மையில் நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் கமல்நாத் பேசியுள்ளார். அப்போது, ‘நாட்டில் கொரோனா வைரஸ் தலைவிரித்தாடுகிறது. என்னுடையமதிப்பீட்டின்படி, போபால் மற்றும் இதர பகுதிகளில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் இறந்து இருப்பார்கள். இங்கு பரவி வருவது இந்திய உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் என்று அறியப்படுகிறது. இதனால் பல்வேறு நாடுகளும் இந்தியா உடனான விமானப் போக்குவரத்துகளையும் ரத்து செய்து விட்டன’ என்று பேசியதாக கூறப்படுகிறது. கமல்நாத்தின் இந்தப் பேச்சிற்காகத்தான் தற்போது அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கமல்நாத்தின் பேச்சு, தற்போதைய நெருக்கடியான தருணத்தில் குழப்பத்தை உருவாக்கி, சர்வதேச அளவில் நாட்டை அவதூறு செய்வதாக உள்ளது. கொரோனாவைத் தடுப்பதற்கான உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டதாக இல்லை. மேலும், இந்திய தண்டனைச் சட்டத்தின்படி தேசத்துரோத்திற்கு சமமான குற்றத்தை கமல்நாத் செய்திருக்கிறார் என்று பாஜக-வினர் கூப்பாடு போட்டுள்ளனர். கமல்நாத்தை ‘சீனாவின் ஏஜெண்ட்’ மற்றும் ‘துரோகி’ என்று வசைமாறி பொழிந்துஉள்ளனர்.இதனிடையே, ம.பி. மக்கள் தொடர்புத்துறை முன்னாள் அமைச்சர் பி.சி. சர்மா தலைமையில், போபால் காவல்நிலையத்திற்குச் சென்ற காங்கிரசார், ‘கொரோனாவால் உயிரிழந்த மக்களின் புள்ளிவிவரங்களை மறைத்து, குழப்பத்தை ஏற்படுத்தியதற்காக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று- தங்கள் தரப்பிலும் ஒரு புகாரை அளித்துள்ளனர்.