states

img

வயநாடு நிலச்சரிவுக்கு ஒன்றிய அரசு நிதி வழங்கவில்லை: கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு!

வயநாடு நிலச்சரிவு பேரிடருக்கு நிவாரணத்தொகையாக ஒன்றிய பாஜக அரசு இதுவரை எந்த நிதியும் வழங்கவில்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.

கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் ஜூலை 30 அன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் மற்றும் 70க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.

இதனால் கேரள மாநிலமே மீளாத துயரத்திற்கு உள்ளானது.பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் பொருட்டு பொதுமக்கள், திரைத்துறையினர், தொழில்துறையினர் என பலதரப்பட்ட மக்களும் தங்களால் இயன்ற நிவாரண நிதியை வழங்கினர்.

பிரதமர் மோடி நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.ஆனால் தற்போது வரை ஒன்றிய அரசின் சார்பில் எந்த நிவாரண நிதியும் கேரள அரசுக்கு வழங்கவில்லை.

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன்:- ஒன்றிய அரசின் விதிமுறைகள் படி மீட்பு பணிகளுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 219 கோடி மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளது.

புதையுண்ட, இடிந்த ஒரு வீட்டுக்கு 1.30 லட்சம் மட்டுமே ஒன்றிய அரசு வழங்குகிறது. ஒரு கிலோ மீட்டர் சாலைக்கு ஒரு லட்சம் ரூபாய், ஒரு பள்ளிக்கு 2 லட்சம் ரூபாய் என்பதுதான் ஒன்றிய அரசின் விதிமுறை.

அந்த தொகையில் ஒரு பள்ளிக்கு அடித்தளம் கூட போடமுடியாது. எனவே தான் வயநாடு பேரிடர் மீட்பு பணிக்கு 1,200 கோடி ரூபாயும், புனரமைப்பு பணிகளுக்கு 2,200 கோடி ரூபாய் சிறப்பு நிதியும் வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு மனு கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஒன்றிய அரசு இதுவரை எந்த நிதியும் வழங்கவில்லை. விமானப்படையினர், இராணுவத்தினர் மேற்கொண்ட நிவாரண பணிகளுக்கும் மாநில அரசுதான் அனைத்து செலவையும் வழங்க வேண்டியுள்ளது.

2018 ஆம் ஆண்டு நடந்த கனமழை வெள்ளப்பெருக்கின் போதும், மீட்பு பணிக்கு வந்த இந்திய விமானப் படைக்கு 102 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. அப்போது ஒன்றிய அரசு வழங்கிய அரிசிக்கு 205 கோடி மாநில அரசு வழங்கியது.

அதேபோன்று வயநாடு மீட்பு பணிக்கு வந்த விமானப்படை ஹெலிகாப்டர்களுக்கும், ராணுவத்தினரின் அனைத்து செலவுகளுக்கும் மாநில அரசுதான் பணம் வழங்க வேண்டியிருக்கிறது” என தெரிவித்தார்.