திருவனந்தபுரம்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பினராயி விஜயன் தொடர்ச்சியாக இரண்டாம் முறையாக வியாழனன்று (மே 20) கேரளமுதல்வராக பதவியேற்கிறார். மார்க்சிஸ்ட் கட்சியின் 12 அமைச்சர்களில் பத்து பேர், முதல் முறையாக அமைச்சர்கள்.
முன்னதாக கட்சியின் மாநிலக்குழு கூட்டத்தில் சட்டமன்றக் கட்சித் தலைவராகவும், முதல்வராகவும் பினராயி விஜயன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டு பெண்கள் மற்றும் முன்னாள் சபாநாயகர் கே. ராதாகிருஷ்ணன் அடங்கிய அமைச்சர்களின் பட்டியல் மாநிலக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டது. எம்.வி.கோவிந்தன், கே.என்.பலகோபால், பி.ராஜீவ், வி.என்.வாசவன், சஜி செரியன், வி. சிவன்குட்டி, பி.ஏ. முகமது ரியாஸ், டாக்டர்.ஆர்.பிந்து, வீணா ஜார்ஜ், வி. அப்துல்ரஹ்மான் ஆகியோர் அமைச்சர்கள் ஆகிறார்கள்.திரிதலாவிலிருந்து வென்ற எம்.பி.ராஜேஷ் சபாநாயகராக இருப்பார். கட்சி கொறடாவாக கே.கே.ஷைலஜாவை யும், சட்டசபை கட்சியின் செயலாளராக டி.பி.ராமகிருஷ்ணனையும் தீர்மானித்தது.
சிபிஐ
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அமைச்சராகும் 4 பேரும் புதியவர்கள். அமைச்சர்களாக பி. பிரசாத், கே. ராஜன், ஜே. சின்ச்சுராணி மற்றும் ஜி.ஆர்.அனில் பொறுப்பேற்கின்றனர். சிற்றயம் கோபகுமார் துணை சபாநாயகர். டாக்டர் ரோஷி அகஸ்டின் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.கேரள காங்கிரஸ் (எம்), என் ஜெயராஜை தலைமை கொறடாவாக நியமித்துள்ளது. அஹ்மத் தேவர்கோவில் (ஐ.என்.எல்), அந்தோணி ராஜு (ஜனநாயக கேரளா காங்கிரஸ்) ஆகியோர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். தற்போதைய அமைச்சர்கள் கே.கிருஷ்ணான் குட்டி (ஜே.டி.எஸ்), ஏ.கே.சசிந்திரன் (என்.சி.பி) ஆகியோர் அமைச்சரவையில் நீடிப்பார்கள். எல்டிஎப் சட்டமன்றஉறுப்பினர்களின் கூட்டமும் பினராயி விஜயனை சட்டமன்ற கட்சியின் தலைவராக தேர்வு செய்தது. பின்னர் அவர்ஆளுநர் ஆரிப் முகமது கானை சந்தித்து அமைச்சரவை அமைக்க அனுமதி கோரி ராஜ் பவனுக்கு சென்றார்.
பதவியேற்பு
புதிய அமைச்சரவையின் பதவியேற்பு நிகழ்ச்சி வியாழனன்று திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டுவிட்டன. கோவிட் நெறிமுறைக்கு இணங்க மாலை 3.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறும். ஆளுநர் ஆரிப் முகமது கான் முதல்வர் பினராயி விஜயன் மற்றும் 20 அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.சிறப்பு அழைப்பாளர்களாக 500 விருந்தினர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள். முதல் அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்படும். உறுப்பினர்கள் மற்றும் தற்காலிக சபாநாயகர் பதவியேற்பதற்கான தேதியை அமைச்சரவை தீர்மானிக்கும். சட்டமன்றத்தை கூட்டுவதற்கான அறிவிப்பை வெளியிட ஆளுநர் பரிந்துரைப்பார். முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.