ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மீது கேரள போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே களமசேரி பகுதியில் கிறிஸ்தவ வழிபாட்டு கூட்டம் நேற்று நடந்தது. அப்போது திடீரென கூட்டத்தில் 3 முறை குண்டுகள் வெடித்தன. இந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. 52 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த நிலையில், களமசேரி குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக மத கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டிருந்த ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திர சேகர் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையில், “யார் நஞ்சாக உள்ளனரோ அவர்கள் நஞ்சைதான் தொடர்ந்து கக்குவார்கள்” என்று ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரின் பேச்சுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் காட்டமான பதிலடி கொடுத்துள்ளார்.