தொடுபுழா: சமுதாயத்தின் தரத்தை அளவிடும் அனைத்து அளவுகோல்களிலும் கேரளா முன்னிலையில் உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.சுவராஜ் கூறினார். மக்கள் பாதுகாப்பு அணிவகுப்புக்கு தொடுபுழாவில் அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு அவர் மேலும் பேசுகையில், “இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், கேரள மக்களின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் அதிகரித்துள்ளது. மருத்துவமனைகள் சுகாதாரப் பாதுகாப்பின் மையங்களாக உள்ளன. ஒவ்வொரு கிராமத்திலும் அரசு மருத்துவமனைகள் உள்ளன. ஆதரவற்ற குழந்தைகள் தெருக்களில் நடமாடாத மாநிலம் கேரளா. இங்கு ஒவ்வொரு குழந்தையும் பள்ளிகளில் படிக்க வசதி உள்ளது. மின்வெட்டு இல்லாத மாநிலமாக கேரளத்தை மாற்றி பிரகாசமாக நிலைநாட்ட முடிந்துள்ளது. கேரளாவின் இரு முனைகளை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை நிறைவடைந்தால், நாட்டின் முகத்தோற்றமே மாறும். 64,000 குடும்பங்கள் மிகவும் ஏழ்மையான பட்டியலில் உள்ளன. இவர்களை கேரள அரசு தத்தெடுத்து பராமரிக்கும். பெரும் வளர்ச்சிப் பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கும் போது, உரிய பங்கை வழங்காமல் கேரளாவை திணறடிப்பதுதான் ஒன்றிய அரசின் அணுகுமுறை. நாட்டின் நலனைக் காக்க வேண்டியவர்கள் அரசியல் பகைமையின் பின்னணியில் பிற்போக்கு நிலைப்பாட்டை எடுக்கின்றனர். சில ஊடகங்கள் சிபிஐ(எம்) பகைமையை அரசாங்கத்துக்கு எதிராக தவறான பிரச்சாரத்துக்கு பயன்படுத்துகின்றன. கேரளா அதிக ஊதியம் பெறும் மாநிலம். இதனால், பிற மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு வேலைக்காக தொழிலாளர்கள் குவிந்து வருகின்றனர். எதிரி நாடு போல் நடந்து கொண்டு கேரளாவின் வளர்ச்சியை முடக்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. இந்நிலையில், மலையாளிகளை எதிர்ப்புப் போராட்டக் களத்திற்குத் திரட்டும் பொறுப்பை சுயமாக ஏற்க வேண்டும் என்றார் சுவராஜ்.