திருவனந்தபுரம்:
கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியமான (Kerala Infrastructure Investment Fund Board - KIIFB) ‘கிப்பி’ விவகாரத்தில், மத்திய அமலாக்கத்துறை இயக்குநரகம் (Enforcement Directorate - ED) மோத விரும்பினால் அதை இடது ஜனநாயக முன் னணி அரசு எதிர்கொள்ளும் என்று கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் தெரிவித்துள்ளார்.
தேர்தல் காலத்தில் அமலாக்கத்துறை இயக்குநரகம் மேற்கொள் ளும் விதி மீறலுக்கு, மத்திய நிதியமைச்சரே தலைமை தாங்குகிறார்; ஆனால், ‘கிப்பி’யைத் தகர்க்கும் எந்த முயற்சியும் நடக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.மசாலா பாண்டு தொடர்பாக ‘கிப்பி’ (கேரள உட்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம்) மீது அமலாக்க இயக்குநரகம் வழக்கு பதிவுசெய்த பின்னணியில் புதனன்று (மார்ச் 3) பிற்பகல் கேரள நிதிஅமைச்சர் தாமஸ் ஐசக் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மேலும் அவர் கூறியதாவது:
‘கிப்பி’யைப் பற்றி எதுவும் தெரியாத அதிகாரிகள் அமலாக்கத்துறை இயக்குநரகத்தில் இருக்கிறார்கள். கிப்பியைத் தகர்க்க மத்திய நிதிஅமைச்சர் நேரடியாக அதிகாரிகளை அனுப்பியுள்ளார். இது தேர்தல் சார்ந்த சதி. அவர் கேரளாவுக்கு வந்தபோது, அவரது பேச்சு ‘கிப்பி’யைப் பற்றியும் இருந்தது. மணீஷ் என்ற வல்லுநரை ராஜஸ்தானிலிருந்து இங்கே இறக்குமதி செய்துள்ளார். அவர் ஜுன்ஜுனு மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக தலைவரான ஹரிசிங் கோத்ராவின் மகன்.பாஜக சார்பில் அரசியல் நோக்கங்களுக்காக காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் வீடுகளை பல்வேறு மாநிலங்களில் சோதனைசெய்வதே அவரது முக்கிய வேலை.ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு எதிராகவும் விளையாடினார். அவர் இங்கு இடது ஜனநாயகமுன்னணி அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்டு பொறுப்பாக்கப்பட்டுள்ளார்.நிர்மலா சீதாராமன் தனதுதுணை அதிகாரிகளை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்துகிறார். பாஜக அமலாக்கத் துறையைப் பயன்படுத்துகிறது. அவர்கள் இரண்டு முறை ‘கிப்பி’ அதிகாரிகளை அழைத்தனர். அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தேவையில்லை. ஆனால்,அவர்கள் மிரட்டப் பார்க்கிறார்கள். அவர்களுக்கு, ‘கேரளா இடதுசாரிகளால் ஆளப்படுகிறது’ என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். சட்டத்தை அமல்படுத்த இங்கு காவல்துறை உள்ளது. பீதி அடைந்துபின்வாங்க முடியாது. அவர்களின் நோக்கம் ‘கிப்பி’யை நசுக்கிக் கொல்வதே ஆகும். மத்திய நிதியமைச்சரே நேரடியாக இறங்கிவிட்டார். தேர்தல் நேரத்தில்‘கிப்பி’யை ஏதாவது செய்துவிட வேண்டும் என்று இறங்கி உள்ளனர். அவர்களை கேரள அரசு உரியமுறையில் எதிர்கொள்ளும்.
*******************
கேரளத்தின் வளர்ச்சியை நாசப்படுத்த சதி
கேரளத்தின் வளர்ச்சியை நாசப்படுத்த ஒரு பெரிய சதி நடந்து வருகிறது. மசாலா பாண்டு அந்நிய செலாவணி சட்டத்தின் (பெமா) கீழ் விதிமீறல் என்று அமலாக்கத்துறை கூறுகிறது. வெளிநாட்டுக் கடன்கள் குறித்து சட்டமியற்றும் உரிமை மத்திய அரசுக்கு உள்ளது. ஆனால் மத்திய அரசால் மட்டுமே வெளிநாட்டுக் கடன்களை பெற முடியும் என்று சிஏஜி ‘கண்டுபிடித்தது’ நகைப்புக்குரியது.‘பெமா’ சட்டத்தின் கீழ் கடன் வாங்குவதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட் டுள்ளன. அதில் யாருக்கெல்லாம் கடன்பெறும் உரிமை உண்டு என்பது குறிப்பிடப் பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள எந்தவொரு அமைப்பும் ரிசர்வ் வங்கியின் அனுமதியுடன் கடன் பெறலாம். வழிகாட்டுதல்படி ‘கிப்பி’,வங்கிகள் மூலம் ஆர்பிஐ-யின் அனுமதிக்காகவிண்ணப்பித்தது. அதன்படி அனுமதியும் கிடைத்துள்ளது. அப்படித்தான் கடன் பெறப் பட்டது. இது எதற்காக பயன்படுத்தப்பட்டது என்பதற்கான அறிக்கையும் அளிக்கப் பட்டுள்ளது.
மேலும், கடன் வாங்கியிருப்பது, கேரள அரசல்ல. மாறாக, ‘கிப்பி’ என்ற சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட கார்ப்பரேட் நிறுவனம். ‘கிப்பி’ அரசியலமைப்பின் 293-ஆவது பிரிவின் கீழ்வராது. இந்த பிரிவு மாநிலங்கள் கடன் வாங்குவது பற்றித்தான் பேசுகிறது. இது அரசியலமைப்பை மீறுவது அல்ல. யாருடைய கறுப்புப் பணத்தையும் வெள்ளையாக்க ‘கிப்பி’யைப் பயன்படுத்த முடியாது. ‘கிப்பி’ எவ்வாறு நிதி திரட்டுகிறது என்பது குறித்த ஆரம்ப புரிதல் கூட இல்லாமல் அமலாக்கத்துறை தவறான கதைகளை பரப்புகிறது.