திருவனந்தபுரம்:
திறன் மேம்பாட்டு பயிற்சி மூலம் ஐந்து ஆண்டுகளில் 20 லட்சம் வேலைகளுக்கான அடித்தளத்தை உருவாக்க முடியும் என கேரள நிதி அமைச்சர் டி.எம்.தாமஸ் ஐசக் கூறினார்.‘மாறிவரும் கேரள பொருளாதாரத்தின் எதிர்காலப் பாதை’ குறித்த கருத்தரங்கத்தை குலாத்தி நிதி மற்றும் வரிவிதிப்பு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. காணொலி விரிவுரைகளின் தொடரை அமைச்சர் தாமஸ் ஐசக் வியாழனன்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
அரசாங்கத்தால் திறக்கப்பட்ட வேலை போர்டல் வேலை தேடுபவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும். முன்னணி வேலைவாய்ப்பு போர்ட்டலான ப்ரீலான்ஸ்.காம் கேரளாவின் திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தில் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது. இது ஐந்து ஆண்டுகளில் ஒன்பது கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ள நிறுவனமாகும். அதைத் தொடர்ந்து, உலகளாவிய நிறுவனங்களின் முதலாளிகளாக இருந்த பல நிறுவனங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தின.
மூன்று விதமான நிகழ்ச்சி நிரல் கடந்த 50 ஆண்டுகளில் தேங்கி நிற்கும் வளர்ச்சியைக் கடக்க கேரளாவுக்கு உதவும். அதிகார பரவலாக்கம், வெகுமக்கள் பங்கேற்புடன்கூடிய திட்டமிடல், கிப்பி உள்ளிட்ட பட்ஜெட்டுக்கு வெளியே உள்ள உட்கட்டமைப்பு முதலீட்டு திட்டங்கள் மற்றும் அறிவு சார்ந்த பொருளாதாரம் ஆகியவையே மூன்றுவிதமான நிகழ்ச்சி நிரல். கேரளா இப்போது அதிகார பரவலாக்கத்தின் மிகப்பெரிய நன்மைகளை அனுபவித்து வருகிறது. கோவிட்டிலிருந்து பாதுகாப்பு மற்றும் நிவாரணத்தில் கேரளம் ஒரு முன்மாதிரியை உருவாக்க வலுவான உள்ளாட்சி அமைப்புகளே காரணம்.
அரை நூற்றாண்டுக்கும் மேலாக மூலதனமுதலீட்டுத் துறையில் கவனம் இல்லாததால்கேரளா எதிர்கொள்ளும் பின்னடைவு களுக்கு கிப்பி ஒரு மாற்று மருந்தாகும். உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக கிப்பி ரூ.60,000 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளது. அதன்திருப்பிச் செலுத்துதலும் முறைப்படுத்தப்படு கிறது. மேலும், மாநில நிதி நிறுவனங் களான கேரள வங்கி, கேஎப்சி மற்றும் கேஎஸ்எப்இ ஆகியவை முதலீட்டு துறைக்கு தேவையான ஆதாரங்களை உறுதி செய்கின்றன.திறன் மேம்பாட்டுத் திட்டம் கேரளத்தின் வேலைவாய்ப்புத் துறையில் பெரிய மாற்றங்களைத் தொடங்குகிறது. அதன்படிஉள்நாட்டுப் பணியிடங்கள் பரவலாக்கப் படும். இதன் பலனை அறுவடை செய்யும் தலைமுறையே கேரளத்தின் எதிர்காலம் என்று நிதியமைச்சர் கூறினார்.