states

img

கடந்த 4 நாட்களில் கோவாவில் ஆக்சிஜன் இன்றி 74 பேர் மரணம்...

கோவா:
கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை 26 பேர், புதன் கிழமை 20 பேர், வியாழன் 15 பேர் மற்றும் வெள்ளியன்று இதுவரை 13 பேர் -ஆக கடந்த நான்கு நாட்களில் 74 பேர் ஆக்சிஜன் இல்லாததால் இறந்துள்ளனர்.

இம்மருத்துவமனைக்கு சென்ற வாரம் வந்த பாஜக முதலமைச்சர் பிரமோத் சாவந்த், மருத்துவமனையில் மருத்துவ ஆக்சிஜன் மற்றும் பல உபகரணங்கள் இல்லாததால் சில பிரச்சனைகள் ஏற்படலாம் என்று கூறியிருந்தார்.மாநிலத்தில் கோவிட்-19 கொரோனா வைரஸ் பெருந்தொற்று சரிவரக் கையாளப்படவில்லை என்று மும்பை உயர்நீதிமன்றத்தின் கோவா அமர்வில் ஏற்கனவே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இவற்றின்மீது உயர்நீதிமன்றம் அனுப்பியிருந்த நோட்டிசுக்குப் பதிலளிக்கையில் முதலமைச்சர், மாநிலத்தில் ஆக்சிஜன் சப்ளையில் பற்றாக்குறை இல்லை என்று பதிலளித்திருந் தார். ஆனால் அதே சமயத்தில், இதற்குமுரணாக மாநிலத்தின் முதன்மைச் செயலாளர் பி.கே.கோயல் செவ்வாயன்று மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதம் கூறுகிறது. அந்தக் கடிதத்தின்படி, மாநிலத்திற்கு மகாராஷ்ட்ராவிலிருந்து வரவேண்டிய 110 மெட்ரிக் டன்கள் மருத்துவ ஆக்சிஜனில் மாநிலத்திற்கு வெறும் 66.74 மெட்ரிக் டன்கள்தான் வந்திருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

“எங்கள் மாநிலத்திற்கு ஒவ்வொரு நாளைக்கும், நாளொன்றுக்கு 11 மெட்ரிக் டன்னுக்குப் பதிலாக 22 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்,” என்று கோவா பாஜக அரசாங்கம், மத்திய அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறது.இதற்கிடையில் கோவாவில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையான கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நோயாளிகளால் நிரம்பி வழிகிறது.புதிய நோயாளிகளுக்கு இடமில்லை. கடைசியாக வந்தவர்களில் சிலர் தரையில் உட்கார வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

“நாங்கள் ஒரு சக்கர-நாற்காலி பெறுவதற்காக எட்டு மணி நேரம் காத்துக் கொண்டிருந்தோம். மறுநாள் சிகிச்சைக்காக நாங்கள் அழைத்து வந்தவரின் ஆக்சிஜன் அளவுகள் 50-60 என்ற அளவில் இருந்தது. அவருக்கு வெண்டிலேட்டர் கோரினோம். அது அளிக்கப்படவில்லை. படுக்கைகள் கூட அங்கே இல்லை. அனைவரையும் தரையில் அமர வைத்திருக்கிறார்கள்,” என்று சிகிச்சைக்காக அழைத்துவந்துள்ளவரின் குடும்பத்தினர் கூறுகிறார்கள்.மும்பை உயர்நீதிமன்றத்தின் கோவா அமர்வு, மாநிலத்தில் கோவிட்-19 கையாளப்படுவதில் உள்ள மோசமானநிலைமைகள் குறித்து எண்ணற்ற மனுக்களை விசாரித்து வருகிறது. கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவ உபகரணங்கள் இல்லை என்று கூறி சாக அனுமதிக்க முடியாது என்று வியாழன் அன்று இம்மனுக்களை விசாரித்த நீதிபதிகள் கூறினர். பின்னர் நீதிமன்றம் மாநிலத்தில், மருத்துவ ஆக்சிஜன் உள்ள நிலை மற்றும் மருத்துவ உபகரணங்கள் முதலியவைகுறித்தும் இவற்றின் உண்மையான நிலைஎன்ன என்பது குறித்தும் நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

நாட்டில் கோவாவில்தான் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, பாசிடிவ் விகிதம் உள்ளவர்கள் அதிகமான அளவில் இருக்கிறார்கள். வியாழன் மாலை எடுத்த கணக்கின்படி 48.1 சதவீதத்தினர் இவ்வாறுபாசிடிவ் விகிதத்தினைப் பெற்றிருக் கிறார்கள். இதன்பொருள் பரிசோதிக்கப் படுபவர்களில் இருவரில் ஒருவர் ‘பாசிடிவ்’ என அறிவிக்கப்படுகிறார்.வெள்ளிக்கிழமையன்று காலை 2,491 புதிய வழக்குகள் பதிவாகி இருக்கின்றன.கடந்த நான்கு நாட்களில் 74  பேர் இறந்துள்ளனர். மாநிலத்தில் சுமார் 33 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 2 ஆயிரமாகும். (ந.நி.)