மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு தீர்ப்பை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்
எதிர்க்கட்சி ஆளும் மாநில சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்கள் மீது 3 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என குடியரசுத் தலைவருக்கும், ஆளுநருக்கும் கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்தது. இவ்வாறு நீதித்துறை உத்தரவிட முடியுமா? என விளக்கம் கேட்டு 14 கேள்விகள் அடங்கிய குறிப்பினை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்க்கு அனுப்பினார். இந்த கேள்வி மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூர்ய காந்த், விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்ஹா, அதுல் எஸ்.சந்துர்கர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஆகஸ்ட் 19 முதல் 10 நாட்களாக நடை பெற்று வந்த விசாரணை புதன்கிழமை நிறைவு பெற்ற நிலையில், வியாழக் கிழமை அன்று தீர்ப்பு வழங்கப்பட இருந்தது. ஆனால் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் ஒத்திவைத்தார்.