புதுதில்லி, நவ. 11 - உச்சநீதிமன்றத்தின் 51-ஆவது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா திங்கட்கிழமை காலை பதவியேற்றார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், அவருக்கு குடி யரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்வில், குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய அமைச்சர்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
51-ஆவது தலைமை நீதிபதி
உச்சநீதிமன்றத்தின் 50-ஆவது தலைமை நீதிபதியாக கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் 9 முதல் பதவி வகித்து வந்த டி.ஒய். சந்திரசூட் ஞாயிற்றுக் கிழமை ஓய்வுபெற்றார். இதனைத் தொடர்ந்து, டி.ஒய். சந்திரசூட்டின் பரிந்து ரையை ஏற்று மூத்த நீதிபதி சஞ்சீவ் கன்னாவின் நியமனத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்தார். அதைத்தொடர்ந்து 51-ஆவது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா திங்களன்று பதவியேற்றார். 1960 மே 14 அன்று பிறந்த சஞ்சீவ் கன்னா தில்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தவர். 2005-இல் தில்லி உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர், 2006-இல் நிரந்தர நீதிபதியாகவும், கடந்த 2019 முதல் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் பதவி உயர்வு பெற்றார்.
நீதிபதிகள் குடும்பப் பின்னணி
தில்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ராஜ் கன்னாவின் மக னான சஞ்சீவ் கன்னா, அரசியலமைப் பின் அடிப்படை விதிகளை நிலை நிறுத்திய, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கேசவானந்த பாரதி வழக்கில் (1973) தீர்ப்பு வழங்கிய அமர்வில் இடம்பெற்ற முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி எச்.ஆர்.கன்னாவின் உற வினரும் ஆவார். முக்கியத் தீர்ப்புகள்: தேர்தல்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன் பாட்டுக்குத் தடை விதிக்க மறுப்பு, அர சியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் தேர்தல் நிதிப் பத்திரத் திட்டம் ரத்து, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை உறுதி செய்தது உள்ளிட்ட வழக்குகளில் தீர்ப்பு வழங்கிய அமர்வில் சஞ்சீவ் கன்னாவும் இடம்பெற்றிருந்தார். தில்லி கலால் முறை கேடு வழக்கில் கைது செய்யப்பட்ட தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவா லுக்கு மக்களவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக நீதிபதி சஞ்சீவ் கன்னா இடைக்கால ஜாமீன் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 7 மாதங்களே பதவியில் இருப்பார் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கான ஓய்வு பெறும் வயது 65 என்ற நிலையில், சஞ்சீவ் கன்னா, 2025 மே 13 வரை, 7 மாதங்கள் தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார்.