கிராமப்புற மக்களின் வேலைவாய்ப்பை ஒழித்துக்கட்டிவிடும் விபி ஜி ராம் ஜி திட்டத்தின் மீது சிபிஎம் எம்.பி., வி.சிவதாசன் தாக்கு
புதுதில்லி மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்திற்குப் பதிலாக இப்போது கொண்டுவரப்படும் இந்த விபி ஜி ராம் ஜி திட்டம் கிராமப்புற ஏழை மக்களின் வேலைவாய்ப்பை ஒழித்துக்கட்டி விடும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் வி.சிவதாசன் கூறினார். நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் வெள்ளிக்கிழமையுடன் நடந்து முடிந்துள்ளது. வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் மாநிலங்களவையில் டாக்டர் வி.சிவதாசன், விபி ஜி ராம் ஜி சட்ட முன்வடிவின் மீதான விவா தத்தின் போது ஆற்றிய உரை வருமாறு: சாமானிய ஏழை மக்களால் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட சாலைகளில் நடந்துதான் நான் இந்திய நாடாளுமன்றத்தை அடைந்திருக்கிறேன். அந்த நாட்டுப்புற ஏழை மக்களின் கடின உழைப்பின் மதிப்பை முழுமையாக உணர்ந்தே நான் இன்று இங்கு நிற்கிறேன். ஆனால், கார்ப்பரேட்டுகளின் தயவில் உலகைச் சுற்றி வரும் பெயரளவிலான விஸ்வகுருக்களால், ஏழைகளின் வலியையும் துன்பத்தையும் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது. ஏழைகளின் உழைப்பின் மதிப்பை உணர முடியாதவர்கள் இந்த நாடு முழுவதும் உள்ள ஏழைச் சகோ தரர்களுக்கும் தாய்மார்களுக்கும், அவர்கள் செய்யும் கடின உழைப்பும், வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் மூலம் அவர்கள் ஈட்டும் சிறிய வருமானமும் மிகவும் முக்கியமாகும். அது அவர்களின் குடும்பச் செலவுகள், மருத்து வத் தேவைகள் மற்றும் குழந்தைகளின் கல்வி க்கு உதவுகிறது. ஆனால், ‘அ’ என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்களைக் கொண்ட இரண்டு பெரும் பணக்காரர்களைச் சுற்றியே கட்சி இயங்குகிறது என்று நம்புபவர்களால், ஏழைக ளின் உழைப்பின் மதிப்பை ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது. ஒரு காலத்தில் 100 நாட்கள் வேலை வாய்ப்பை உறுதி செய்த திட்டம், இப்போது 75 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. கூடுதல் நிதிச் சுமைகள் மாநிலங்களின் தோள்களில் மாற்றப்படுகின்றன. மகாத்மா காந்தியின் பெயரைப் பெருமையுடன் தாங்கி நிற்கும் வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை பாஜக திட்டமிட்டுச் சிதைத்து வருகிறது. பாஜக அர சாங்கத்தின் இந்த கொடூரமான கொடுமைக்கு எதிராக, நாடு முழுவதும் எதிர்ப்பு மற்றும் போராட்டங்கள் தவிர்க்க முடியாமல் எழும். மீண்டும் ஒருமுறை காந்தியை கொல்லும் முயற்சி 1948இல் இந்துத்துவா தீவிரவாதிகள் மகாத்மா காந்தியைக் கொன்றனர். 1992இல், இந்திய மதச்சார்பின்மையின் அடையாளமான பாபர் மசூதியை இடித்தனர். இன்று, இந்தி யாவின் மிகச் சிறந்த சட்டங்களில் ஒன்றான மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதிச் சட்டத்தை அழிக்க முயற்சிக் கின்றனர். இந்த சட்டமுன்வடிவு ஏழைகளுக்கு எதிரான ஓர் உச்சகட்ட கொடூரச் செயலாகும். இது காந்திஜிக்குச் செய்யப்படும் ஒரு பெரும் அவமானம். நாதுராம் கோட்சேயின் சீடர்கள் மீண்டும் ஒருமுறை காந்தியைக் கொலை செய்ய முயற்சிக்கின்றனர். கிராமப்புற மேம்பாட்டுக்கான ஒன்றிய அமைச்சர், முன்னதாக, தான் பூஜ்ய பாபுஜிக்கு முன்பாகத் தலைவணங்குவதாகக் கூறினார். ஆனால், அவ்வாறு அஞ்சலி செலுத்திய பிறகு, காந்திஜியின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. காந்திஜியின் மார்பில் குண்டுகளைப் பாய்ச்சு வதற்கு முன்பு, நாதுராம் கோட்சேயும் ராமரின் பெயரை உச்சரித்தான். அவனும் மகாத்மா காந்திக்கு முன்பாகத் தலைவணங்கினான். ராமனின் பெயரைப் பயன்படுத்தி, இப்போது அவர்கள் காந்தியின் பெயரையும் பாரம்பரி யத்தையும் அழிக்க முயற்சிக்கின்றனர். வேலைவாய்ப்பு குறைப்பு இந்த சட்டமுன்வடிவின் மூலம், கிராமப்புற மக்களின் வேலைவாய்ப்புக்கான உத்தரவாதம் பறிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு என்பது ஒருவரின் உரிமை; அது தர்மம் அல்ல. இந்த அரசாங்கம் மக்களின் சுயமரியாதையை அழிக்க முயற்சிக்கிறது. இந்த சட்டமுன்வடிவு இந்தியாவின் கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புகளை ஒழித்துக்கட்டிவிடும். முன்னதாக, ஒன்றிய அரசு 100 நாள் வேலைத்திட்டத்திற்கு முழுமையாக நிதி யளித்தபோது, அதில் ஒரு நிச்சயத்தன்மையும் கண்ணியமும் இருந்தது. இன்று, அது நிச்சயமற்ற 75 நாட்களாகக் குறைக்கப் பட்டுள்ளது. பழங்குடியினர், தலித்துகள், பெண்கள் மற்றும் பெரும்பான்மையான மக்களுக்கு, மோடி அரசாங்கம் அதிகரித்த பசியைத் தவிர வேறு எதையும் வழங்கவில்லை. வேலை வாய்ப்பு உத்தரவாதத் திட்டம் பாதுகாக்கப்பட வேண்டும். ஏழை மக்களுக்கு கண்ணியமான வேலை வழங்கப்பட வேண்டும். அதே நேரத்தில், 100 நாள் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட வேண்டும், மேலும் மாநிலங்க ளுக்குப் போதுமான நிதி வழங்கப்பட வேண்டும் இவ்வாறு டாக்டர் வி.சிவதாசன் பேசினார். (ந.நி.)
