மாண்டியா:
கர்நாடகா மாநிலம் மத்தூரைச் சேர்ந்தவர் நாராயணா (37 வயது). துப்புரவுத் தொழிலாளியான இவர், செவ்வாயன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பாதாளச் சாக்கடையை வெறுங்கையால் அள்ள வைத்த விவகாரத்தில், அதிகாரிகளின் மிரட்டல் மற்றும் சித்ரவதை காரணமாக இந்த தற்கொலை நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துஉள்ளது.நாராயணா, கடந்த நவம்பர் 2-ஆம் தேதி பாதாளச் சாக்கடையைத் திறந்து வெறுங்கையால் கழிவுகளை அள்ள வைக்கப்பட்டுள்ளார். அது அப்போது தலைப்புச் செய்திகளில் இடம்பெற்று பிரச்சனையாக மாறவே, நாராயணனை அழைத்த அதிகாரிகள், அவராகத்தான் விருப்பப்பட்டு, வெறும் கைகளால் பாதாளச் சாக்கடைக் கழிவுகளை அள்ளியதாக கூறுமாறு மிரட்டி, சித்ரவதை செய்து வந்துள்ளனர்.மேலும் நாராயணனை தங்கள் வழிக்கு கொண்டுவருவதற்காக சில்லரைக் காரணங்களைக் கூறி, அவரை பணியிலிருந்து இடைநீக்கம் செய்து சம்பளத்தையும் பிடித்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த நிலையிலேயே நாராயணா செவ்வாயன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனது தற்கொலைக்கான காரணங்களையும் அவர் கடிதமாக எழுதி வைத்துள்ளார்.நாராயணாவின் தற்கொலைக்குக் காரணமான அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாண்டியாவிலுள்ள துப்புரவுத் தொழிலாளர்கள் பிப்ரவரி 26 அன்று வேலை நிறுத்தப் போராட்டமும் அறிவித்துள்ளனர்.