கவுகாத்தி:
உ.பி. மாநிலத்திலிருந்து ஐபிஎஸ்- ஆக தேர்வு செய்யப்பட்டவர் கவுரவ் உபாத்யாய். இவர், கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பரில் அசாம் மாநிலம் கர்பி அங்லாங் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்தபோது, 13 வயதுச் சிறுமி ஒருவரை, பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டார். இதுதொடர்பாக 2020 ஜனவரியில் கவுகாத்தி மகளிர் காவல்நிலை யத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கவுரவ் உபாத்யாயின் வீட்டில் நடந்த ஒரு விருந்தின் போது இந்த சம்பவம் நடந்ததாக, வல்லுறவுக்கு உள்ளான சிறுமியின் தாயார் புகார் அளித்திருந் தார். அவரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மூத்த காவல்துறை அதிகாரிதான். இதனிடையே, உபாத்யாய் மீதான புகார், சிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த அதிகாரிகள், கவுரவ் உபாத்யாய் மீதான குற்றச்சாட்டுஉண்மைதான் என்று கூறி, அவர் மீது 2020 மார்ச் 31 அன்று போக்சோ (POCSO) சட்டம் - 2012இன் பிரிவு 9 (ஏ) (iv) மற்றும் பிரிவு 9 (சி) ஆகியவற்றின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளபடி, சிறுமியை மோசமான பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார் என்பதற்காக பிரிவு 354, 354 (ஏ) ஆகிய பிரிவுகளில் வழக்குபதிவு செய்தனர்.
உபாத்யாய்க்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருப்பதாகவும், அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப் பட்டு இருப்பதாகவும் அசாம் சிஐடி துணைக் கண்காணிப்பாளர் பிரதீப் குமார்தாஸ் பேட்டி ஒன்றிலும் குறிப்பிட்டிருந் தார். காம்ரூப் மாவட்ட சிறப்பு போக்சோ சட்டநீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணையில் இருந்து வந்தது.இந்நிலையில்தான், பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரி கவுரவ் உபாத்யாயை, சிராங் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாள ராக நியமித்து, அசாம் மாநில பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு அசாமில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தீர்ப்பு வரும்வரை கவுரவ் உபாத்யாயை, காவல்துறை பணியில் நியமிக்கக் கூடாது; அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.ஆனால், நீதிமன்றம் குற்றவாளி என்று கூறினால் மட்டுமே நடவடிக்கை எடுக்கமுடியும், அதற்கு முன்பாக உபாத்யாயின் சேவையை நாங்கள் பயன்படுத்துவதில் தவறில்லை என்று அசாம் காவல்துறைத் தலைவர் பாஸ்கர் ஜோதி மகந்தா தெரிவித்துள்ளார்.