states

உ.பி.யில் காலியாகும் பாஜக கூடாரம்!

லக்னோ, ஜன. 13 - உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு பிப்ரவரி  10 முதல் மார்ச் 7 வரை ஏழு கட்டங்களாக  சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள் ளது. இன்னும் 25 நாட்களில் முதற்கட்டத் தேர் தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், கடந்த 48 மணி நேரத்தில்  3 அமைச்சர்கள் மற்றும் 6 சட்டமன்ற உறுப்பின ர்கள் பாஜக-வில் இருந்து விலகி சமாஜ்வாதி கட்சி பக்கம் சாய்ந்திருப்பது, பாஜக தலை வர்களை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது. சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ்  என முக்கிய எதிர்க்கட்சிகள் தனித்தனியே போட்டியிடுவதால், 2017 தேர்தலைப் போலவே, இம்முறையும் எளிதில் வெற்றி பெற்று விடலாம் என்று பாஜக தலைமை கணக்குப் போட்டிருந்தது. அதற்கேற்ப, குறைந்தபட்ச பெரும்பான்மையுடன் பாஜகவே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று ‘ஏபிபி- சிவோட்டர்’ சர்வே-க்களும் கூறியிருந்தன. இந்த நிலைமைகள் தற்போது மாறி, உத்தரப் பிரதேசத்தின் வெற்றிக் காற்று சமாஜ்வாதி கட்சியின் பக்கம் வீசத் துவங்கியுள்ளது.  உத்தரப்பிரதேசத்தின் தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் சுவாமி பிரசாத் மவுரியா இதற்கான ‘பிள்ளை யார் சுழி’யைப் போட்டு ஆரம்பித்து வைத்துள்ளார். அவர் திங்களன்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததுடன், பாஜக-விலிருந்தும் விலகுவதாக அறிவித்தார்.  உத்தரப் பிரதேச பிற்படுத்தப்பட்ட மக்களிடம்  செல்வாக்குப் பெற்ற சுவாமி பிரசாத் மவுரியா வின் இந்த ராஜினாமா பாஜக-வினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சி மறைவதற்கு உள்ளேயே ஷாஜன்பூர் எம்எல்ஏ ரோஷன் லால் வர்மா, பந்தா  தொகுதி எம்எல்ஏ பிரிஜேஷ் பிரஜாபதி, கான்பூர்  எம்எல்ஏ பகவதி சாகர், பிதுனா தொகுதி எம்எல்ஏ  வினய் சாக்யா ஆகியோரும் தங்களின் எம்எல்ஏ  பதவியை ராஜினாமா செய்ததுடன் பாஜக-விலிருந்து விலகினர். 

இதனால் பாஜக தலைமை புதனன்று அவசர அவசரமாக தில்லியில் கூடியது. அமைச்ச ர்கள், எம்எல்ஏ-க்கள் பாஜக-விலிருந்து விலகு வதை எவ்வாறு தடுப்பது என ஆலோசனை நடத்தி யது. ஆனால், இந்த ஆலோசனை நடந்து கொண்டிருந்தபோதே- 2-ஆவது அமைச்சராக உத்தரப்பிரதேசத்தின் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்து வந்த தாரா சிங் சவுகான் தனது  அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, பாஜக-வினரின் அதிர்ச்சியை அதிகப்படுத்தினார்.  தாரா சிங் சவுகானையும் சேர்த்து, பாஜக-விலிருந்து விலகிய அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 6 ஆனது. இவர்கள் சுவாமி பிரசாத் மவுரியா தலைமையில் சமாஜ்வாதி கட்சியில் இணைய உள்ளனர். “உத்தரப் பிரதேசத்தில் 5 ஆண்டு பாஜக ஆட்சியில் தலித், பிற்படுத்தப்பட்டோர், சிறு பான்மையினர் சமூகத்தை சேர்ந்த தலைவர் களுக்கோ, பிரதிநிதிகளுக்கோ எந்த முக்கியத்து வமும் தரப்படவில்லை. மேற்கூறிய சமூகங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றனர். விவசாயிகளையும், வேலையற்ற இளைஞர் களையும் கூட பாஜக மறந்து விட்டது.  அம்பேத்கரின் அரசியல் சாசனத்தின் மீது பாஜக தாக்குதல் நடத்தி வருகிறது. தன்னுடைய சொந்த முன்னேற்றத்தில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறது. மக்களின் வளர்ச்சியை விட தன்னுடைய வளர்ச்சிதான் பாஜகவிற்கு முக்கிய மாக உள்ளது. இதனால்தான் பாஜக-வில் இருந்து விலகுகிறோம்” என்பதையே இவர்கள் தங்களின் குற்றச்சாட்டாக வைத்துள்ளனர்.  இந்நிலையில், பாஜக-விலிருந்து வெளி யேறிய சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை வியாழனன்று 9-ஆக அதிகரித்துள்ளது. 

உத்தரப்பிரதேசத்தின் ஆயுஷ், உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்துத் துறை அமைச்சர் தரம்சிங் சைனி, ஷிகோஹாபாத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முகேஷ் வெர்மா, மீராபூா்  தொகுதி பாஜக எம்எல்ஏ அவதார் சிங் ஆகி யோரும் தங்களின் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜக-விலிருந்து விலகியுள்ளனர். இதில் முகேஷ் வெர்மா, சமாஜ்வாதியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அவதார் சிங், ஜெயந்த் சவுத்ரி தலைமையிலான ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியில் இணைந்துள் ளார். சமாஜ்வாதி கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளில் ஒன்றுதான் ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. உத்தரப் பிரதேச தேர்தலில் தற்போது 33 சதவிகித வாக்குகளை வைத்துள்ள சமாஜ்வாதி கட்சி 2 சதவிகித வாக்குகளை அதிகம் பெற்றால்,  அது பாஜக-வின் தோல்விக்கு வழிவகுக்கும் என்பது ‘ஏபிபி - சிவோட்டர்’ கணிப்பாகும்.

இந்நிலையில், உ.பி. மாநில இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற சுவாமி பிரசாத் மவுரியா தலைமையிலான 8 எம்எல்ஏ-க்கள்  பாஜகவிலிருந்து விலகியிருப்பதும், அவர்கள் சமாஜ்வாதிக்கு செல்லவிருப்பதும் உ.பி. தேர்தல் முடிவுகளில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். கடந்த முறை இதர பிற்படுத்தப்பட்டோரின் வாக்குகளை கைப்பற்றுவதற்கு மவுரியாவையே பாஜக தலைமை நம்பி யிருந்தது. 6 சதவிகித வாக்குகளைக் கொண்ட குஷ்வாஹா சமூகத்தைச் சேர்ந்த மவுரியாவும் பம்பரமாக சுழன்று பாஜக-வின் வெற்றியை உறுதி செய்திருந்தார். ரேபரேலி, பதாவுன் மற்றும் குஷிநகர் பகுதிகளில் பாஜக-வுக்கு குர்மி-மவுரியா மக்களின் வாக்குகளை பெற்றுத்தந்தார். ஆனால், அந்த மவுரியாவை பாஜக தற்போது இழந்துள்ளது.

இத்தோடு நிற்கப்போவது இல்லை. பாஜக-விலிருந்து 13 எம்எல்ஏ-க்கள் வரை விலகுவார்கள் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியிருப்பதால், பாஜக தலைமை இப்போதே கவலையில் ஆழ்ந்துவிட்டது.  இதனிடையே பாஜக எம்.பி.யாக இருக்கும் மவுரியாவின் மகள் சங்கமித்ராவும் விரைவில் சமாஜ்வாதியில் இணைவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல்வர் ஆதித்யநாத்துக்கு ஆதரவு - எதிர்ப்பு என உத்தரப் பிரதேச பாஜக இரண்டாக பிளவுபட்டுள்ளது. இதற்கு இப்போதைக்கு தீர்வுகாண முடியாது. இதனால் பாஜக-வின் தோல்வியையும் தடுக்க முடியாது. பாஜக தோல்வியடைந்தால், ஆதித்யநாத்தே அதில் முக்கியப் பங்கு வகிப்பார் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

;