states

சரத் பவாரை சந்தித்த அஜித் பவார் அணியினர் கட்சி இணைப்பு குறித்து பதிலளிக்காத சரத்பவார்

மும்பை,ஜூலை 16-   மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரை அஜித் பவார் அணியின்  மூத்த தலைவர் பிரபுல் பட்டேல் மற்றும் 9 அமைச்சர்கள் சந்தித்தனர். இந்த சந்திப்பு மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்த அஜித் பவார் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஓடோடிச் சென்று ஷிண்டே-பாஜக தலைமையிலான அரசுக்கு ஆதரவளித்தார். இதற்கு கைமேல் பலனாக அஜித்பவார் துணை முதல்வராக்கப்பட்டார்.அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக்கப்பட்டனர். இச்சம்பவத்தால் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டது. இந்நிலையில்  மும்பை ஒய்.பி. செண்டரில் இருந்த சரத் பவாரை மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் அணியினர் திடீரென்று சந்தித்தனர்.அஜித் பவார் அணியை சேர்ந்த மூத்த தலைவர் பிரபுல் பட்டேல், ஜிதேந்திரா, ஹசன் முஷ்ரிப் மற்றும் திலீப் வல்சே பாட்டீல் ஆகியோர் சரத் பவாரை சந்தித்தனர். இது சரத் பவாரை சமாதானப்படுத்தும் முயற்சி என்று கூறப்படுகிறது. இந்த சந்திப்பு குறித்து பிரபுல் படேல் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  “நாங்கள் அனைவரும் எங்கள் கடவுள் சரத் பவாரிடம் ஆசி பெறுவதற்காக வந்துள்ளோம். பவார் இங்கே இருப்பதை அறிந்து வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டோம். தேசியவாத காங்கிரஸ் கட்சி இணைந்திருக்க வேண்டும் என்பதை பவாரிடம் தெரிவித்தோம். ஆனால் அவர் அதற்கு ஏதும் சொல்லவில்லை.”என்றார்.  மகாராஷ்டிராவில் ஜூலை 17 அன்று மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.