states

img

ம.பி.யில் தலித் இளைஞர் அடித்துக் கொலை.... விருந்துக்கு வைத்திருந்த உணவை தொட்டு விட்டாராம்..

போபால்:
துப்புரவுப் பணிக்கு வந்த இடத்தில், உணவைத் தொட்டு விட்டார் எனக் கூறி, 25 வயது தலித் இளைஞர் ஒருவர் அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் பாஜக ஆளும் ம.பி. மாநிலத்தில் நடந்துள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம் சத்தார்பூர் மாவட்டத்திற்கு உட்பட்டது கிஷான்பூர். தலைநகர் போபாலில் இருந்து, 450 கி.மீ. தொலைவில்- உத்தரப்பிரதேசத்தின் எல்லையை ஒட்டி இந்த கிராமம் இருக்கிறது. இங்கு கடந்த டிசம்பர் 7 அன்று, பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த குடும்பத்தில் விருந்து நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது.இந்த விருந்து நிகழ்ச்சியில் துப்புரவுப் பணிக்காக, தேவராஜ் அனுராகி என்ற 25 வயது தலித் இளைஞர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவரும் துப்புரவுப் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில்தான், தேவராஜ் அனுராகி விருந்துக்கான உணவைத் தொட்டு விட்டார் என்றும், அதைத் தாங்கள் பார்த்து விட்டோம் என்றும் கூறி, அதே கிஷான்பூர் கிராமத்தின் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களான பூரா சோனி, சந்தோஷ் பால் ஆகியோர் பிரச்சனையைக் கிளப்பியுள்ளனர். அத்துடன், விருந்துக்கு வைத்திருந்த உணவை அனுராகி தொட்டதால், அது தீட்டுப்பட்டு விட்டது என்று கூறி,உருட்டுக் கட்டையால், அனுராகி மீது மிகக்கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளனர். சுமார் 2 மணிநேரம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதன்பின், அனுராகியை அவரது வீட்டில் கொண்டுபோய் போட்டுள்ளனர். ஆனால், வீட்டிற்கு போன சிறிது நேரத்திலேயே தேவராஜ் அனுராகி இறந்து போயிருக்கிறார். 

இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாஜக ஆளும் மத்தியப்பிரதேசத்தில் தலித்துக்கள் தாக்கப்படுவது தொடர் நிகழ்வுகளாகி விட்டது. கடந்த 10 நாட்களுக்கு முன்புதான், இங்குள்ள குணா மாவட்டத் தில், 50 வயது தலித் முதியவர் லால்ஜி ராம் அகிவார், சிகரெட் பற்றவைக்க தீப்பெட்டி கொடுக்கவில்லை என்பதற்காக, யாதவ் சமூகத்தைச் சேர்ந்த 2 பேரால் அடித்துக் கொல்லப்பட்டார்.அதைத்தொடர்ந்து, இடைத்தேர்தலில் பாஜக-வை ஆதரிக்கவில்லை என்பதற்காக, தலித் குடும்பம் ஒன்று சித்ரவதை செய்யப்பட்டு, சிவ்புரி மாவட்டத்தை விட்டே வெளியேற்றப்பட்டது. இந்த விவகாரத்தில், பாஜக எம்.பி. ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு நெருக்கமான சுரேஷ் தாக்காத் ரத்கேடா என்பவர் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.திறந்தவெளியில் மலம் கழித்து விட்டார்கள் என்பதற்காக கடந்த ஆண்டு,இரண்டு தலித் குழந்தைகள் அடித்துக்கொல்லப்பட்டதும் இதே சிவ்புரி மாவட்டத் தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.