states

img

போதைப்பொருள் கடத்தல் கும்பலை பாதுகாக்கும் மணிப்பூர் முதலமைச்சர் - தவ்னஜம் பிருந்தா

என் பெயர் தவ்னஜம் பிருந்தா. மணிப்பூர் சிவில்  சர்வீஸ் 2012 தேர்வில்  வெற்றிபெற் றேன். மணிப்பூரில் காவல்துறை அதி காரியாக சிறப்பான சேவைகளை  செய்திருக்கிறேன். 2018 ஆம் ஆண்டு  முதலமைச்சரின் வீரத்துக்கான போலீஸ்  பதக்கம் எனக்கு வழங்கப் பட்டது. பின்னர் 2020 ஆம் ஆண்டு  லுஹோசெய் ஷோவ் என்பவர் போதை கடத்தல் குற்றச்சாட்டில் இருந்து நீதிமன்றத்தால் விடுவிக்கப் பட்டார். இதன் காரணமாக நான் என் பதக்கத்தை திருப்பிக் கொடுத்ததோடு அரசுப்பணியையும் துறந்துவிட்டேன். போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கு என்றே எனக்கு சிறப்பு பணிகள் வழங்கப்பட்டிருந்தன. 2018 ஜுன் மாதம் 19-20 க்கு இடைப்பட்ட நேரத்தில் நான் ஒருவரது வீட்டில் போதைப்பொருள் சோதனையில் ஈடுபட்டிருந்தேன். அப்போது மொய்ராங்தெம் அஸ்னிகுமார் என்கிற நபர் என்னை போனில் அழைத்தார். அவர் மணிப்பூர் மாநில  பாஜகவின் துணை தலைவர். முத லமைச்சர் பைரேன்சிங் என்னிடம் பேசுவார் என்று  சொல்லி போனை முதலமைச்சரிடம் கொடுத்துவிட்டார். 

நான்  என்ன செய்து கொண்டிருக் கிறேன் என்று முதலமைச்சர்  கேட்டார். போதைப்பொருள் சோத னையில் ஈடுபட்டிருப்பதாக அவரி டம் தெரிவித்தேன். சிறப்பாக செயல் படுங்கள் என்று சொல்லிவிட்டு  போனை துண்டித்துவிட்டார். அன்று நாங்கள், அதாவது நானும் 150 காவல்துறையினரும் லுஹோசெய் ஷோவ் என்பவரது வீட்டை  சோத னை செய்தோம். சுமார் 17 கோடி  ரூபாய் பெறுமானமுள்ள போதைப் பொருட்களை அங்கிருந்து கைப்பற்றினோம். இது  தொடர்பாக மேற்படி லுஹோசெய் ஷோவ் மற்றும் அவரது கூட்டாளிகள் 7 பேரை கைது  செய்தோம்.  சோதனை நடந்து கொண்டி ருக்கும்போதே அந்த நபர் முத லமைச்சருடன் பேச வேண்டும், காவல்துறை தலைவருடன் பேச வேண்டும் என்று வற்புறுத்திக் கொண்டே இருந்தார். நான் அவர்  பேசுவதற்கு அனுமதி மறுத்து விட்டேன். அந்த நபர் பாஜகவைச் சேர்ந்தவர். அட்டானமஸ் டிஸ்ட்ரிக்ட்  கவுன்சில் எனப்படும் பழங்குடி மக்கள் அதிகம் வாழும் பகுதியின் சிறப்பு அதிகாரம் கொண்ட மாவட்ட பஞ்சாயத்து தலைவர். சோதனை நடந்துகொண்டிருக்கும்போதே இடையிடையே சமரசம் பேச என்னை  வற்புறுத்திக் கொண்டே இருந்தார். நான் எதற்கும் அசையவில்லை.

காலையில் பாஜக மாநில துணை தலைவர் அஸ்னிகுமார் எனது  வீட்டுக்கு வந்தார். கைது செய்யப் பட்ட நபர் ஆலிஸ் என்பவருக்கு வேண்டப்பட்டவர் என்றும் அவரது  வலது கரம் என்றும், முதலமைச்சர் பைரேன்சிங்கின் இரண்டாவது  மனைவிதான் ஆலிஸ் என்றும்  கூறினார். எனவே, போதைப் பொருள் கடத்தல் பேர்வழியை விட்டு விட வேண்டும் என்றும் என்னை வற்புறுத்தினார். நான் மறுத்தபோது முதலமைச்சர்தான் தன்னை இது குறித்து என்னிடம் பேசச் சொன்ன தாகவும் முதலமைச்சரின் மனைவி ஆலிஸ் என்மீது கடும் கோபத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டார் இதேபோன்று அடுத்தடுத்து மூன்று முறை என்னை சந்தித்து வற்புறுத்தினார். மேலும் முத லமைச்சர் பைரேன்சிங் அந்த  கடத்தல் பேர்வழியை விடுவித்து விட்டு தேவையென்றால் கடத்தல்  பேர்வழியின் மனைவி மீதோ மகன் மீதோ வழக்குப் பதிவு  செய்து  கொள்ளுங்கள் என்று முதலமைச் சர் கூறியதாக அஸ்னிகுமார் தெரி வித்தார். நான் மறுத்துவிட்டேன். கடத்தல் பேர்வழியைவிட்டுவிட்டு அவரது மனைவியையோ மக னையோ கைது செய்வது சாத்திய மல்ல என்று முடித்துக்கொண்டேன். முதலமைச்சரும் அவரது மனைவி யும் என் மீது கடும் கோபத்தில் இருப்பதாக அஸ்னி குமார் மீண்டும் கூறினார். 150 காவல்துறையினர்  மற்றும் பொதுமக்கள் முன்னிலை யில் சோதனையும் கைதும் நடந் திருக்கிறது. எனவே, அவரை விடு வித்தால் காவல்துறையினர் மத்தி யிலும் பொதுமக்கள் மத்தியிலும் தவ றான எண்ணம் ஏற்பட்டுவிடும். எனவே, எந்த காரணத்தை முன்னி ட்டும் விடுவிக்க முடியாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். 

அதன்பிறகு அதே ஆண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி குற்றப் பத்திரிகையை நான் தாக்கல் செய்தேன். அன்றைய தினமே இம்பால் மேற்கு காவல் கண் காணிப்பாளர் தெம்தின் மற்றும் அஸ்னி குமார் ஆகியோர் என்னை சந்தித்து குற்றப்பத்திரிகையை திரும்பப் பெற வேண்டும் என்று வலி யுறுத்தினார்கள். நான் மறுத்து விட்டேன். அடுத்த நாள் என்னையும் போதை தடுப்பு பிரிவு கண்காணிப் பாளரையும் டிஜிபி அழைத்து மிக கடுமையாக கடிந்து கொண்டார். ஆயினும் அவரும் நானும் விட்டுக் கொடுக்கவில்லை. அடுத்தநாள் போதை தடுப்பு பிரிவு கண்காணிப்பா ளர் முதலமைச்சரை சந்திக்க வேண்டும் என்று கூறப்பட்டது. அவர் முதலமைச்சரை சந்தித்துவிட்டு வந்த பிறகு தன்னை முதலமைச்சர் கடுமை யாக எச்சரித்ததாக கூறினார் இதற்கிடையில், இம்பால் மேற்கு  காவல் கண்காணிப்பாளரும் மூத்த  வழக்கறிஞர் சந்திரஜித் சர்மா என்ப வரும் சிறப்பு அரசு வழக்கறிஞர் பிபின் சந்திரா அலுவலகத்துக்கு சென்று நீதிமன்றத்தின் பாதுகாப்பில் இருந்த குற்றப்பத்திரிகையை சட்டவிரோதமாக எடுத்துச் செல்ல நிர்ப்பந்தித்தனர். அவர் கடுமையாக எச்சரித்து அனுப்பி இருக்கிறார். இந்த நிலையில் போதை தடுப்பு சிறப்பு நீதிபதி 01.01.2019 அன்று காவல்துறை தலைவருக்கும் பார்  கவுன்சில் செயலாளருக்கும் மேற்படி நடவடிக்கை குறித்து கடிதம் எழுதி யிருக்கிறார். இந்த செய்தி உள்ளூர் பத்திரிகைகளில் இரண்டு நாட்கள் கழித்து வெளியானது. அதற்கு அடுத்த நாள் முதலமைச்சரை நான் சந்திக்குமாறு சொன்னதையடுத்து அவரை சந்திக்க சென்றேன். “உனக்கு மெடல் எல்லாம்  கொடுத் திருக்கிறேன், நன்றி இல்லாமல் நடந்துகொள்கிறாய்” என்று என்னை கடுமையாக திட்டினார். சிறப்பு வழக்கறிஞருக்கும் அதேபோன்ற வசவுகள் கிடைத்தன.

அதற்கிடையில், சிறப்பு நீதிபதி மாற்றப்பட்டு புதிய நீதிபதி நிய மிக்கப்பட்டு போதை பொருள் கடத்தல் பேர் வழிக்கு பிணை வழங்கப் பட்டது. தனக்கு உடல்நிலை சரி யில்லை என்றும் உடனடியாக சிகிச்சை பெறவில்லை என்றால் உயிரே போய்விடும் என்றும் அந்த நபர் சொன்னதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு அவருக்கு பிணை வழங்கி யது. பிணை முடிந்த பிறகு அந்த  நபர் நீதிமன்றத்தில் சரணடைய வில்லை. குக்கி தீவிரவாதிகள் தனது கணவரை கடத்தி விட்டார்கள், என்று அவரது மனைவி தெரிவித்தார். அதன்பிறகு பொருத்தமான நீதிப தியைக் கொண்டு அந்த வழக்கை அவர்கள் முடித்து வைத்தார்கள். கடத்தல் பேர்வழி குற்றவாளி அல்ல  என்று தீர்ப்பு வழங்குவதற்கு ஏதுவாக முதலமைச்சர் தனக்கு வேண்டிய ஒருவரை அங்கு நியமித்திருந்தார். அதேபோன்று நாங்கள் கைப்பற்றிய போதைப் பொருட்களும் காணா மல் போயிருந்தன. போதைப் பொருள் கடத்தலை தடுப்பதற்காக ஆட்சிப் பொறுப்புக்கு தங்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வாக்கு கேட்டு வெற்றி பெற்ற பாஜக முதலமைச்சர் போதைப்பொருள் கடத்தலை தடுக்க வில்லை என்பது மட்டுமல்ல. போதைப் பொருள் கடத்தலின் பகுதியாகவே அவர் செயல்பட்டார் என்ற கார ணத்தால்தான் நான் எனது பதவி யை ராஜினாமா  செய்தேன். மெடலை திரும்ப கொடுத்தேன்.

- தி வயர் இணைய இதழுக்காக கரண் தாப்பரிடம் கொடுத்த பேட்டியின் சாராம்சம்.

- தமிழில் : க.கனகராஜ்