states

பாலியல் வன்கொடுமை செய்து விட்டேனா என்றும் திமிர்ப் பேச்சு பொது இடத்தில் பகிரங்கமாக பெண்ணை மிரட்டிய பாஜக எம்எல்ஏ!

பெங்களூரு, செப்.5- தன்னிடம் மனு அளிக்க வந்த பெண்ணை பொது இடம் என்றும் பாராமல் பாஜக எம்எல்ஏ ஒருவர் மிரட்டலில் ஈடுபட்ட சம்பவம் கர்நாடகத்தில் நடந்துள்ளது. மேலும், இதுதொடர்பான வீடியோ ஊடகங்களில் வெளியான நிலையில், “நான் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டேனா என்ன?” என்றும் பாஜக எம்எல்ஏ திமிராகப் பேசியுள்ளார். கர்நாடகத்தைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் ரூத் சாகே மேரி. காங்கிரஸ் ஆதரவாளரும் ஆவார். இவர், வெள்ளப் பாதிப்பை பார்வையிட வந்த பாஜக எம்எல்ஏ அரவிந்த்  லிம்பாவளியை சந்தித்து மனு கொடுக்க முயன்றுள்ளார். அப்போது, ரூத் கொடுக்க வந்த மனுவை லிம்பாவளி வேக மாக பறித்துள்ளார். ரூத், தனது பிரச்சனைகளை எம்எல்ஏ  லிம்பாவளியிடம் விளக்க முயற்சித்த போது, அவரைக் கடிந்து கொண்ட லிம்பாவளி மிரட்டவும் செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல், ரூத்தை சிறையில் அடைக்கவும் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.  இது வீடியோ ஒன்றில் தெளிவாக வெளிப்பட்டுள்ளது.

இதையடுத்து பாஜக எம்எல்ஏ அரவிந்த் லிம்பாவளிக்கு பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர். இதனிடை யே, “ஒரு எம்எல்ஏ- அதுவும் ஒரு பெண்ணிடம் பொதுவெளி யில் இப்படி நடந்து கொள்ளலாமா?” என்று கன்னட செய்தித் தொலைக்காட்சியான ‘திக்விஜயா டிவி’யின் செய்தியா ளர், செப்டம்பர் 3 ஆம் தேதி, எம்எல்ஏ லிம்பாவளியிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்குப் பதிலளித்திருக்கும் லிம்பாவளி, “நான் என்ன செய்தேன்? நான் அவரை பாலியல் வன்கொடுமை செய்து விட்டேனா?” என திமிராக எதிர்க்கேள்வி எழுப்பியுள்ளார். இது மீண்டும் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, சம்பவம் குறித்து பேட்டியளித்துள்ள ரூத், எம்எல்ஏ லிம்பாவளியின் உத்தரவு பேரில், காவல்துறை யினர் தன்னை இரவு 10 மணி வரை காவல் நிலையத்தில் வைத்திருந்ததாகவும், செல்போனில் பேசக் கூட அனுமதிக்கா ததுடன், தன்னைத் தாக்க முயன்றதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.