விவசாயிகள் போராட்டம் குறித்த கருத்தை திரும்பப்பெற போவதில்லை என்று கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வடமாநில விவசாயிகள் இன்று 10 வது நாளாக தலைநகர் தில்லியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே மத்திய அரசுடனான இரண்டு கட்ட பேச்சு வார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில் இன்று 3ம் கட்ட பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது.
ஏற்கனவே தில்லி நிலைமை கவலை அளிப்பதாக உள்ளது. நாங்கள் அனைவரும் விவசாயிகளின் குடும்பங்கள், நண்பர்கள் பற்றி மிகவும் கவலைப்படுகிறோம். உங்களில் பலரது உண்மை நிலை எனக்கு தெரியும்.
அமைதியாக போராடுகிற விவசாயிகளின் உரிமையை பாதுகாக்க கனடா எப்போதும் துணை நிற்கும் என்பதை நான் உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தை நாங்கள் நம்புகிறோம். அதனால்தான் எங்கள் கவலைகளை இந்திய அரசுக்கு பல வழிகளில் தெரிவித்திருக்கிறோம். கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக அனைவரும் ஒன்றுபட்டிருக்க வேண்டிய தருணம் இது என்று கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருந்தார்.
கனட பிரதமரின் கருத்து இருநாட்டு நல்லுறவை பாதிக்கும் என்று இந்தியா தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்திய வெளியுறவுத்துறை சார்பில் கனடா நாட்டுத் தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் விவசாயிகள் போராட்டம் குறித்த தனது கருத்தை திரும்பப்பெற ஜஸ்டின் ட்ரூடோ மறுப்பு தெரிவித்துள்ளார். மனித உரிமைகளுக்கான அமைதியான முறையில் எங்கு போராட்டம் நடந்தாலும் அதை கனடா ஆதரிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்படுவதை வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளார்.