states

img

பல்வேறு மக்கள் பிரிவினரை இணைக்கும் தில்லியில் விவசாயிகள் போராட்டம்

கார்ப்பரேட்டுகள் ஆதரவு வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும், மின்சார திருத்தச் சட்டமுன்வடிவை ரத்து செய்யக்கோரியும் தில்லியை முற்றுகையிட்டுப் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு மக்கள் பிரிவினரும் ஒருமைப்பாடு மற்றும் ஆதரவு தெரிவித்து, தங்களாலான அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர். அவர்களுடன் இரண்டறக் கலந்துகொண்டும் வருகின்றனர்.

நிஹாங் சீக்கியர்கள்

சீக்கியர்களில் நிஹாங் பிரிவு சீக்கியர்கள் இப்போராட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்டு, வியாழன் அன்று தில்லியின் சிங்கூ எல்லைக்கு, குதிரைகளில் வந்து சேர்ந்தனர். இவர்கள் சிங்கூ பகுதிக்கு வந்தபின், அங்கிருந்த விவசாயிகள் மத்தியில் உற்சாகம் கரைபுரண்டு ஓடியதை நன்கு பார்க்க முடிந்தது. அவர்கள் குதிரைகளில் வந்தது, தங்கள் வல்லமையைக் காட்டும் விதத்தில் அமைந்திருந்தது.

நிஹாங் சீக்கியர்கள், காலங்காலமாக, குதிரைகளைப் பேணி வளர்த்து வருபவர்கள். அவர்கள் 15 குதிரைகளுடன் வந்து கிளர்ச்சிப் போராட்டத்தில் இணைந்துள்ளனர். இதேபோன்று மேலும் 40 குதிரைகளுடன் வர இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அவர்கள் போலீசாரின் தடுப்பரண்களுக்கு மத்தியில் முகாமிட்டு தங்கள் உணவுகளையும் சமைத்து உண்ணத் தொடங்கினார்கள்.

“எங்களைப் பொறுத்தவரை குதிரைகள் எங்கள் வல்லமையைக் காட்டக்கூடியவைகளாகும்.  எங்கள் குருக்கள் குதிரைகளில் சவாரி செய்யப் பயன்படுத்திக் கொள்வார்கள். நாங்கள் எவரைக் கண்டும் பயப்பட மாட்டோம். எனவேதான் இங்கே முன்னணியில் நிற்க நாங்கள் வந்திருக்கிறோம்,” என்று அவர்கள் தெரிவித்தார்கள்.   

பேச்சுவார்த்தைகள் முடிவுறாது நீடிக்குமானால், போராடும் விவசாயிகளின் எண்ணிக்கை மேலும் அதிகமாகும் என்றும் போராடும் விவசாயிகள் தெரிவித்தார்கள். வியாழன் அன்று முஸ்லீம்கள் குழு ஒன்று பஞ்சாப்பிலிருந்து வந்து, போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு உணவு பரிமாறியது. “நாங்கள் இன்றுதான் வந்து சேர்ந்தோம். போராட்டம் முடியும்வரை நாங்கள் இங்கே தங்கியிருப்போம்,” என்று அவர்கள் தெரிவித்தார்கள். வியாழன் அன்று பகத்சிங் மாணவர் அமைப்பு சார்பில் மாணவர்கள் பகத்சிங் மேற்கோள்கள்களை வீதிகளிலிருந்த சுவர்களில் எழுதத் துவங்கினார்கள்.

நூ முஸ்லீம் பெண்கள் ஆதரவு

ஹர்யானா மாநிலத்தில் மிகவும் பிற்போக்கான மனோபாவத்துடன் வாழ்ந்துவந்த நூ முஸ்லீம் பெண்கள், தங்கள் பிற்போக்கு சிந்தனையை உதறித்தள்ளிவிட்டு,  போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து அணிவகுத்து வந்தனர். விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேறும்வரை நாங்கள் அவர்களுக்கு ஆதரவாக இருப்போம் என்று தெரிவித்தனர்.

போராடும் விவசாயிகளுக்கு ஓட்டல்கள் திறந்துவிடப்பட்டன

ஹர்யானா மாநிலத்தில்  விவசாயிகள் போராடும் இடமான குண்ட்லியில் ஒரு சிறிய ஓட்டல் இருக்கிறது. அதன் உரிமையாளர் அந்த ஓட்டலை, போராடும் விவசாயிகள், குறிப்பாக பெண்கள் பயன்படுத்திக் கொள்வதற்கு, முழுமையாக அனுமதி அளித்துள்ளார். அவர்கள் ஓட்டலில் உள்ள அறைகளையும், கூடத்தையும் இலவசமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.  

அதன் உரிமையாளர் மண்டீப் கப்ரா (25), கூறுகையில், நானும் ஒரு விவசாயியின் மகன், போராடும் விவசாயிகள் எங்கள் குடும்பத்தின் அங்கம் என்றே நான் கருதுகிறேன் என்று தெரிவித்தார். அவர் மேலும், “இப்போராட்டத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டுள்ள வயது முதிர்ந்த பெண்களுக்காக குறைந்தபட்சம் இதனைச் செய்ய வேண்டும் என்று நான் கருதினேன். அவர்கள் அனைவரும் என் தாய் போன்றவர்கள்,” என்றார்.

இவரது ஓட்டலில் உள்ள 45 அறைகளிலும் பெண்களும், கூடங்களில் ஆண்களும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்சமயம் அங்கே 6070 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஹர்யானா முழுவதும் போராட்டத் தீ வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது

ஹர்யானா மாநிலத்தில் இதுவரையிலும் போராட்டத்தின் ஜூவாலைகள் தெற்கு ஹரியானா மாநிலத்தை எட்டாமல் இருந்தது. மத்தியப் பிரதேசத்திலிருந்து, தில்லியை நோக்கி வரும் விவசாயிகள், தெற்கு ஹரியானாவில் உள்ள பல்வால் வந்து சேர்ந்தனர். இது ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேச மாநில எல்லையில் உள்ள ஊராகும்.  தங்கள் ஊர் வழியாக ஆயிரமாயிரமாய் போராடும் விவசாயிகள் அணிவகுத்து வந்து கொண்டிருப்பது இப்போது இவர்களையும் போராட்டம் உத்வேகம் கவ்விக்கொண்டது. இவ்வூர் விவசாயிகளும் அணிவகுத்து வரும் விவசாயிகளுக்கு ஆதரவைத் தெரிவித்ததுடன் போராட்டத்தில் தங்களையும் இணைத்துக்கொண்டனர்.

 

;