states

img

தில்லி விவசாயிகள் போராட்டம்: வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளாரா அரவிந்த் கெஜ்ரிவால்...?

விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் தாங்கள் ஆதரிப்பதாக தில்லி முதல்வர்  அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.  இந்நிலையில் இன்று அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பவம் ஆம் ஆத்மி கட்சியினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட 6 மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியின், 'புராரி' பகுதியில் அமைந்துள்ள மைதானத்திலும், டெல்லியின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளிலும் தொடர்ந்து 13வது நாளாக  போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை மத்திய அரசுடன் ஐந்து கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ள நிலையில், அடுத்த சுற்று பேச்சுவார்த்தை வரும் புதன்கிழமை நடைபெற உள்ளது. இதனிடையே இன்று நாடு தழுவிய முழு அடைப்புக்கு விவசாயிகள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் தாங்கள் ஆதரிப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 
 
இந்நிலையில் நேற்று  மாநில அரசு சார்பில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஆய்வு செய்ய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் போராட்டக் களத்திற்கு நேரில் சென்றார். அங்கு விவசாயிகளுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் நாங்கள் ஆதரிக்கிறோம். அவர்களின் பிரச்சனையும் கோரிக்கைகளும் முக்கியமானவையாகும். நானும் எனது கட்சியும் ஆரம்பத்திலிருந்தே அவர்களுடன் துணை நிற்கிறோம்.
 
அவர்கள் ஆரம்பத்தில் போராட்டம் நடத்தத் தொடங்கியபோது, டெல்லி காவல்துறை ஒன்பது அரங்கங்களைச் சிறைகளாக மாற்ற எனக்குக் கடுமையாக அழுத்தம் கொடுத்தது. ஆனால் நாங்கள் அதற்கு அனுமதிக்கவில்லை. நாங்கள் எடுத்த முடிவு விவசாயிகளுக்கு உதவிகரமாக அமைந்தது. நான் இங்கு முதல்வராக வரவில்லை, ஒரு சேவகனாகத்தான் வந்துள்ளேன். விவசாயிகள் இன்று சிக்கலில் உள்ளனர். நாங்கள் அவர்களுடன்தான் நிற்க வேண்டும். ஆம் ஆத்மி கட்சி டிசம்பர் 8-ஆம் தேதி நடைபெறும் பாரத் பந்த்தை ஆதரிக்கிறது. எங்கள் கட்சித் தொண்டர்களும் இதில் பங்கேற்பார்கள்" எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.  இது ஆம் ஆத்மி கட்சியினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆம்ஆத்மி புகாருக்கு தில்லி போலீசார் மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும் கெஜ்ரிவால் தான் விரும்பும் இடத்திற்கு செல்லலாம் என தில்லி வடக்கு துணை ஆணையர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.