states

img

பாரத் பந்த் அனைத்து மாநிலங்களிலும் மகத்தான வெற்றி: போராட்டம் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்படும் ஹன்னன் முல்லா

அனைத்து விவசாய சங்கங்கள் அறைகூவல் விடுத்த பாரத் பந்த் மகத்தான வெற்றி பெற்றுள்ளது. எங்கள் கோரிக்கையில் நாங்கள் உறுதியாக நிற்கிறோம். புதிய வேளாண் சட்டங்கள் மூன்றும் திரும்பப் பெறப்பட வேண்டும். இதில் ஒன்றிரண்டு திருத்தங்கள் செய்வது என்பதை நாங்கள் ஏற்கவில்லை. இந்தச் சட்டங்களில் ஒன்றிரண்டு திருத்தங்கள் மேற் கொள்ளப்படுவதன் மூலம் அதன் அடிப்படைத் தன்மை மாறிவிடாது. எனவே அவற்றை முழுமையாக ரத்து செய்யவேண்டும். அதற்காகவே நாங்கள் பாரத் பந்த் அறிவித்தோம். இப்போதும் அரசாங்கம் எங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால், போராட்டம் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்படும், என்று அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லா கூறினார். இன்றைய பாரத் பந்த் அநேகமாக அனைத்து மாநிலங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

தெலங்கானா

தெலங்கானா மாநிலத்தில், பாஜக-வைத் தவிர ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி உட்பட அனைத்துக் கட்சிகளும் ஆதரித்ததால், போராட்டம் முழு வெற்றி பெற்றது. பாஜக தவிர, அனைத்து விவசாய சங்கங்களும், தொழிற்சங்கங்களும், ஊழியர் சங்கங்களும் பாரத் பந்திற்கு ஆதரவாக இருந்தன. வர்த்தக மையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அரசாங்கத்தின் பேருந்துகள் அனைத்தும் பணிமனைகளை விட்டு வெளியே எடுக்கப்படவில்லை.  

பாரத் பந்த் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரையிலும் என்று விவசாய சங்கங்கள் கூறியிருந்த போதிலும், தெலங்கானாவில் காலையிலேயே போராட்டம் துவங்கிவிட்டது. பந்த்தில் கலந்துகொண்ட அனைத்துக் கட்சியினரும் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடத்தினர். ஆளும் டிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், எம்.பி.க்கள் உட்பட அனைவரும் வீதிகளில் இறங்கி போராட்டங்களில் கலந்து கொண்டனர்.

ஆந்திரப் பிரதேசம்

ஆந்திரப் பிரதேச மாநிலத்திலும் போராட்டம் முழு வெற்றி பெற்றது. கடைசி நிமிடத்தில் மாநில அரசாங்கம், பந்த்திற்கு ஆதரவு தெரிவித்திடத் தீர்மானித்ததை அடுத்து, அரசுப் போக்குவரத்துப் பேருந்துகள் சாலைகளில் ஓடவில்லை. மாநில அரசு அனைத்துப் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவித்தது.

கடைகளும் வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன.  

அஸ்ஸாம்

அஸ்ஸாம் மாநிலத்திலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வாகனங்கள் சாலைகளில் ஓடவில்லை. வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. பல்வேறு தொழிற்சங்கங்களும், போக்குவரத்து சங்கங்களும் பாரத் பந்த்திற்கு ஆதரவு தெரிவித்தன. அஸ்ஸாமில் காங்கிரஸ், அஸ்ஸாம் ஜதியா பரிஷத் உட்பட 13 அரசியல் கட்சிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தன.  

மேற்கு வங்கம்

மேற்கு வங்கத்தில் பல மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதித்தது. பல மாவட்டங்களில் இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த முன்னணி ஊழியர்கள் ரயில் மற்றும் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.  இதனால் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

;