states

img

எய்ம்ஸ்’ செவிலியர் சங்க வேலை நிறுத்தம் நிறுத்தி வைப்பு

உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கிணங்க வேலைநிறுத்தப் போராட்டத்தை நிறுத்தி வைப்பதாக, ‘எய்ம்ஸ்’ செவிலியர் சங்கத்தின் தலைவர் ஹரிஷ் குமார் கஜ்லா கூறினார்.

‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் செவிலிய அதிகாரிகளாக ஒப்பந்த அடிப்படையில் நபர்களை நியமித்திட ‘எய்ம்ஸ்’ நிர்வாகம் முடிவு செய்தது. இதனை ஆட்சேபித்தும் மற்றும் 6ஆவது ஊதியக்குழு பரிந்துரைகள் உட்பட மொத்தம் 23 கோரிக்கைகளை முன்வைத்தும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு முறையாக அறிவிப்பு அளித்துவிட்டு, டிசம்பர் 14 முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையின் செயல்பாடு ஸ்தம்பித்தது. இதனை அடுத்து, நிர்வாகத்தின் தரப்பில் உயர்நீதிமன்றம் சென்று, செவிலியர்களின் கோரிக்கைகளில் 23 கோரிக்கைகளில் 22 கோரிக்கைகளை நிறைவேற்றிவிட்டதாகவும், மீதமுள்ள கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்திட முன்வந்திருப்பதாகவும் எனவே வேலைநிறுத்தத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.

கோரிக்கைகள் மீது பேச்சுவார்த்தை நடத்திட நிர்வாகம் முன்வந்திருப்பதால், வேலைநிறுத்தத்தை நிறுத்தி வைத்திட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கை ஜனவரி 18க்கு ஒத்தி வைத்தது.  உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் ‘எய்ம்ஸ்’ செவிலியர் சங்கம் வேலைநிறுத்தப் போராட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது.

இது தொடர்பாக சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் கஜ்லா செய்தியாளர்களிடையே கூறுகையில், மருத்துவமனை நிர்வாகம் கோரிக்கைகள் குறித்து எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை என்றும், மாறாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் பயங்கரவிளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டிவந்ததாகவும் தெரிவித்ததுடன், 23 கோரிக்கைகளில் 22 கோரிக்கைகளை நிறைவேற்றிவிட்டதாக எய்ம்ஸ் இயக்குநர் பொய் கூறியிருப்பதாகவும் தெரிவித்தார்.  உண்மையில் ஒரு கோரிக்கையைக்கூட நிர்வாகம் நிறைவேற்றவில்லை என்றும் கூறினார். இதுவரை எய்ம்ஸ் மருத்துவமனையில் எவரொருவரையும் ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தியது இல்லை. இப்போது அதனைச் செய்யத் தொடங்கி இருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

(ந.நி.)

;